விபத்தில் சிக்கியவரை காப்பாற்றியவர்கள் மீது சிறுவன் ஓட்டி வந்த கார் மோதியது.. இருவர் பலி
விபத்தில் சிக்கியவரை காப்பாற்றியவர்கள் மீது சிறுவன் ஓட்டி சென்ற கார் தூக்கி வீசியதில் இருவர் பலியாகினர்.
சென்னை: விபத்தில் சிக்கியவரை காப்பாற்றியவர்கள் மீது சிறுவன் ஓட்டி வந்த கார் ஒன்று மோதியதில் தூக்கிவீசப்பட்ட இருவர் பலியாகிவிட்டனர். இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம் அருகே அதிகாலை 4 மணிக்கு புல்லட் வாகனம் ஓட்டிச் சென்ற இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கினார். அப்போது அங்கு நின்றிருந்தவர்களும், அவ்வழியாக வாகனத்தில் வந்தவர்களும் அந்த இளைஞரை சூழ்ந்தனர்.

17 வயது சிறுவன்
பின்னர் ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து விபத்தில் காயமடைந்தவரை வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக ஒரு கார் வந்து கொண்டிருந்தது. அந்த காரை 17 வயது சிறுவன் ஓட்டி வந்தான்.

இருவர் பலி
அந்த கார் எதிர்பாராதவிதமாக ஆம்புலன்ஸ் வாகனத்தை சூழ்ந்திருந்தவர்கள் மீது மோதியது. இதில் சென்னை தி.நகரைச் சேர்ந்த ஏகாம்பரம் மற்றும் நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ஹேமச்சந்திரா ஆகிய இருவரும் தூக்கிவீசப்பட்டு உயிரிழந்தனர்.

திருவான்மியூர் சிறுவன்
இதனிடையே ஆம்புலன்ஸின் கதவு ஒன்று கார் மோதிய வேகத்தில் பறந்து சென்று விழுந்தது. இதில் 5 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து காரை கண்மூடித்தனமாக ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய சிறுவன் சென்னை திருவான்மியூர் பிடிசி காலனியைச் சேர்ந்த சிறுவன் என்பதும் தெரியவந்துள்ளது.

தொடர் சம்பவங்கள்
ஆம்புலன்ஸ் மீது மோதிய வேகத்தில் அந்த கார் அப்பளம் போல் நொறுங்கியது. 17 வயது சிறுவனும் படுகாயமடைந்தார். சிறுவர்கள் வாகனங்களை ஓட்டினால் பெற்றோருக்கு தண்டனை விதிக்கப்படும் என்று போக்குவரத்து காவல் துறை எச்சரிக்கை விடுத்தும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளன.












Click it and Unblock the Notifications