வாக்காளர்களை பணம் வாங்க தூண்டும் வகையில் பேச்சு: பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்கு பதிவு
நெல்லை: வாக்காளர்களை பணம் வாங்க தூண்டும் வகையில் பேசியதாக தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்கு நெல்லை டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருநெல்வேலி டவுனில் தே.மு.தி.க. தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட அக்கட்சியின் மகளிரணி தலைவர் பிரேமலதா பேசுகையில், ஜெயலலிதா எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. எல்லாம் 110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்கள்.

அதில் ஒரு திட்டத்தை கூட செயல்படுத்தவில்லை. இங்கு பொதுமக்களிடம் பணப்புழக்கம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் வந்தால் மட்டும் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக ஏமாற்றுகிறார்கள்.
மின்சார கட்டணம், பால் கட்டணம், பஸ் கட்டணம், சாலை வசதிகள் இல்லை, வேலை வாய்ப்பு இல்லை, வீட்டுச்செலவு என ஒரு ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கும் மேலாக செலவாகிறது. எனவே அ.தி.மு.க.,வோ, தி.மு.க.,வோ பணம் தந்தால் ஒரு ஓட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் கேட்டு வாங்குங்கள் இவ்வாறு பிரேமலதா பேசினார். இதுகுறித்து தேர்தல் அதிகாரியான தாசில்தார், மரகதநாதன், நெல்லை டவுன் போலீசில் புகார் செய்தார்.
அவரது புகாரின் அடிப்படையில் போலீசார் ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் வீடியோ காட்சிகளை பார்த்தனர். இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் விதிமுறைகளுக்கு எதிராக பேசியது உள்பட 3 பிரிவுகளில் பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications