For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கவுன்சில் விதிமுறைகளை பின்பற்றாத மருத்துவ கல்லூரிகளை சிபிஐ விசாரிக்க முடியாது: ஹைகோர்ட்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன், எம்.சி.ஐ.யின் விதிகளை பின்பற்றாத தனியார் மருத்துவக் கல்லூரிகளை விசாரிக்க சிபிஐக்கு அதிகாரமில்லை என்றும் தெரிவித்தது.

நாட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரத்தை புதுப்பித்த நடவடிக்கையில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளதாக கூறி சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில், இந்திய மருத்துவ கவுன்சிலின் அப்போதைய தலைவர் கேத்தன் தேசாய் மீது முறைகேடு, கூட்டு சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றம் சுமத்தி, அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

இதன்பின்னர், தமிழகத்தில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரி, ஸ்ரீபாலாஜி கல்வி அறக்கட்டளை நடத்தும் மருத்துவ கல்லூரி, புதுச்சேரியில் உள்ள ஸ்ரீலட்சுமியம்மாள் கல்வி அறக்கட்டளை நடத்தும் மருத்துவ கல்லூரி ஆகியவற்றின் மீதும், அதன் நிர்வாகிகள் மீதும் கூட்டுசதி, முறைகேடு உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் சி.பி.ஐ. வழக்குகள் பதிவு செய்தது.

இந்த வழக்கில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஸ்ரீ சத்யசாய் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாகிகளை வழக்கிலிருந்து விடுவித்து சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை சிபிஐ தாக்கல் செய்தது.

மேலும், புதுச்சேரி சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தனது குற்ற வழக்கு நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி ஸ்ரீ லட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளையும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்குகளின் விசாரணைகள் நீதிபதி அருணாஜெகதீசன் முன்பு நடந்து வந்தது.

விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஸ்ரீ சத்யசாய் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் நிர்வாகிகளை வழக்கிலிருந்து விடுவித்த பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிடுவதற்கு தேவை இல்லை.

சட்ட விரோதமாக பெருநகர குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே மனு தள்ளுபடி செய்யபடுகிறது. மேலும், லட்சுமி அம்மாள் அறக்கட்டளையின் நிர்வாகிகள் மீது எந்த குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளும் தெரிவிக்கப்படவில்லை. அதற்கான தகுந்த ஆதாரங்களும் இல்லை. எனவே புதுச்சேரி சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள அந்த கல்லூரியின் வழக்கும் ரத்து செய்யப்படுகிறது.

இந்திய மருத்துவக் கவுன்சிலின் சட்டத்தை மருத்துவக் கல்லூரிகள் பின்பற்றாதது தவறுகள் தானே தவிர, குற்றமில்லை. அந்தத் தவறுகளை விசாரணை செய்ய சிபிஐக்கு அதிகாரம் இல்லை. இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
In a landmark judgment, the Madras High Court has ruled that the Central Bureau of Investigation has no jurisdiction to investigate the affairs of any medical institution within the purview of the Medical Council of India (MCI).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X