பழனி முருகன் கோயிலுக்கு போறீங்களா.. அப்போ இன்று முதல் அமலுக்கு வந்த விதியை படிச்சிட்டு போங்க!
பழனி: பழனி முருகன் கோயிலுக்குள் செல்போன், கேமராக்களை கொண்டு செல்ல இன்று முதல் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளன. அவற்றில் முதலாவது வீடு திருப்பரங்குன்றம், 2ஆவது திருச்செந்தூர், 3ஆவது பழனி, 4ஆவது சுவாமி மலை, 5ஆவது திருத்தணி, 6ஆவது பழமுதிர்சோலை ஆகும்.

அப்படி அறுபடை வீடுகளுக்கும் பக்தர்கள் செல்வது வழக்கம். அதிலும் கிருத்திகை, சூரசம்ஹாரம் போன்ற விசேஷ தினங்களில் முருகனை மக்கள் தரிசனம் செய்ய விரும்புவர். அந்த வகையில் மூன்றாவது படை வீடான பழனி மிகவும் பிரசித்தி பெற்றது.
அதாவது பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் வெளியூரில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். குறிப்பாக திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள்.
இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் செல்போன், கேமரா உள்ளிட்டவைகள் மலைக்கோயிலுக்குள் கொண்டு வந்து புகைப்படம் எடுக்கிறார்கள். அவ்வாறு கடந்த சில நாட்களுக்கு முன்பு கருவறையில் உள்ள தண்டாயுதபாணியை புகைப்படம் எடுத்தது சமூகவலைதளங்களில் வைரலானது. இது திருக்கோயில் நிர்வாகத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த நிலையில் மலைக்கோயிலுக்கு செல்போனை எடுத்துச் செல்ல தடை கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் பழனி கோயிலில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அறநிலையத் துறைக்கு உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி பழனி முருகன் கோயிலுக்குள் இன்று முதல் செல்போன், கேமரா கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் செல்போன், புகைப்படம் எடுக்கும் வீடியோ, சாதனங்களை கோயிலுக்கு கொண்டு வரக் கூடாது என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்போனை மலைக்கோயில் அடிவாரத்தில் மின் இழுவை ரயில் நிலையம், ரோப் கார் உள்ளிட்ட பாதுகாப்பு நிலையங்களில் ரூ 5 கட்டணமாக செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். தரிசனம் முடிந்த பின்னர் ரசீதை கொடுத்து செல்போனை பெற்றுக் கொள்ளலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த கோயில் மதுரையிலிருந்து 115 கி.மீ. மேற்கே உள்ள பழனியில் அமைந்துள்ளது. இங்குள்ள முருகன் சிலை போகர் சித்தரால் உருவாக்கப்பட்டது. ஞானப்பழம் கிடைக்காத கோபத்தில் முருகன் வந்து அமர்ந்த இடம் பழம் நீ= பழனி என அழைக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications