கோகுல்ராஜ் கொலை: மார்ச் 3ல் யுவராஜ் உள்ளிட்ட 17 பேருக்கு குற்றப்பத்திரிக்கை நகல்
நாமக்கல்: கோகுல்ராஜ் கொலை வழக்கில், மார்ச் 3 ம்தேதியன்று யுவராஜ் உள்ளிட்ட 17 பேருக்கு குற்றபத்திரிகை நகல் அளிக்கப்படும் என்று நாமக்கல் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மலர்மதி கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கடந்த ஆண்டு ஜூன் 24ம் தேதி ரயில் தண்டவாளம் அருகே தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தனிப்படை போலீசார் விசாரித்து வந்தனர்.

கொலை வழக்கின் விசாரணை அதிகாரி டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, கோகுல்ராஜ் கொலை வழக்கும், விஷ்ணு பிரியா மரண வழக்கும் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த கொலை வழக்கில் தேடப்பட்ட தீரன்சின்னமலை பேரவை நிறுவனர் யுவராஜ், 39 வாட்ஸ் அப் மூலம் போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்து வந்தார். இந்தநிலையில், கடந்த அக்டோபர் 11ம் தேதி சிபிசிஐடி அலுவலகத்தில் சரண் அடைந்தார். பின்னர் அவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் யுவராஜ், அவரது சகோதரர் தங்கதுரை உள்பட 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. யுவராஜ், தங்கதுரை, அருள்செந்தில், செல்வக்குமார், குமார், கார் டிரைவர் அருண், சங்கர் ஆகிய, ஏழு பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். யுவராஜ் வேலூர் சிறையிலும், மற்ற ஆறு பேர் சேலம் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட, 10 பேர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு மாதத்திற்கு முன், கோகுல்ராஜ் கொலை தொடர்பான, 725 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை, நாமக்கல் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்தனர்.
கொலை வழக்கில் கைதான யுவராஜ் உள்பட, 17 பேரிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்க வேண்டும் என்பதால், அனைவரையும், பிப்ரவரி 25ம் தேதி ( நேற்று) நாமக்கல் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி நீதிபதி மலர்மதி உத்தரவிட்டார். இதையடுத்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட யுவராஜ், சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆறு பேர் உள்பட, 16 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சந்திரசேகரன் என்பவருக்கு கண்ணில் ஆபரேசன் செய்யப்பட்டுள்ளதால் கோர்ட்டுக்கு வரமுடியவில்லை. 15 நாள் அவகாசம் அளிக்கவேண்டும் என அவரது வக்கீல்கள் கூறினர். இதை நீதிபதி ஏற்க மறுத்து, மார்ச் 3ம் தேதி அனைவருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்படும். அன்று அனைவரும் ஆஜராகவேண்டும். இல்லாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்றார். இதையடுத்து வழக்கு விசாரணை 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications