டிரைவர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 2.30 கோடி மோசடி: மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு
கரூர்: அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் டிரைவர், கண்டக்டர் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.2.30 கோடி மோசடி செய்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை நீலாங்கரையைச் சேர்ந்த கோபி என்பவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.
செந்தில் பாலாஜியின் பெயரைக் கூறி திருச்சியை சேர்ந்த ஒருவர் வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக ஏற்கெனவே ஒரு வழக்கு உயர் நீதிமன்றத்தில் உள்ளது. செந்தில் பாலாஜி மீது ஏராளமானோர் பணமோசடி புகார் கொடுத்துள்ளனர்.

அமைச்சர் பதவியில் இருந்தும் கட்சிப்பதவியில் இருந்து நீக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு இம்முறை போட்டியிட சீட் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் செந்தில் பாலாஜி.
நம்பிக்கையோடு பிரச்சாரத்தை தொடங்கியுள்ள நிலையில் கோபி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர், உதவிப் பொறியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியானது. பலர் விண்ணப்பித்தோம். நேர்முகத் தேர்விலும் கலந்துகொண்டோம்.
அப்போது போக்குவரத்து அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் உறவினர் கார்த்திக் என்பவர் எங்களை தொடர்புகொண்டு, நடத்துநர், ஓட்டுநர் பணிக்கு ரூ.3 லட்சம், உதவிப் பொறியாளர் பணிக்கு ரூ.6 லட்சம் கொடுத்தால், வேலை உறுதி என்றார்.
மொத்தம் 107 பேர் சுமார் ரூ.2.30 கோடி கொடுத்தோம். இத்தொகையை அமைச்சர் செந்தில் பாலாஜியே நேரில் எங்களிடம் வாங்கினார். அவரது சகோதரர் அசோகன், பி.ஏ. பாஸ்கர் உடனிருந்தனர். ஆனால், பணி நியமன உத்தரவு எங்களுக்கு வரவில்லை. கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டபோது, செந்தில் பாலாஜி தரப்பினர் மிரட்டல் விடுக்கின்றனர்.
இதுதொடர்பாக போலீஸ் ஆணையரிடம் கடந்த மார்ச் 8-ம் தேதி புகார் கொடுத்தோம். இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.2.30 கோடி மோசடி செய்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மாலா, விசாரணையை ஜூன் முதல் வாரத்துக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
செந்தில்பாலாஜிக்கு எதிராக கிளம்பியுள்ள இந்த பூதம் அவருக்கு எதிராக என்னென்ன செய்யப்போகிறதோ? அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜி போட்டியிடுவாரா? வேட்புமனு தாக்கல் செய்து வாபஸ் பெறும் வரைக்கும் எதுவும் நடக்கலாம்.












Click it and Unblock the Notifications