புத்தகத்தைவிட சாப்பாட்டுக்கு அதிகம் செலவு.. சென்னை புத்தக கண்காட்சிக்கு வந்தோர் குமுறல்
சென்னை: சென்னை புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவடையும் நிலையில், வந்திருந்த வாசகர்கள், உணவு விலையை அதிகப்படியாக ஏற்றி வைத்திருந்த உணவு கூடங்களுக்கு சாபம் விட்டு திரும்பினர்.
சென்னை, தீவுத்திடலில் கடந்த 1ம் தேதி தொடங்கிய 39வது புத்தக கண்காட்சி, இன்றுடன் நிறைவடைந்தது. இம்முறையும் மக்கள் ஆர்வத்தோடு புத்தக கண்காட்சிக்கு விரைந்தனர். இன்று காலை நிலவரப்படி 12 லட்சம் பேர் புத்தக கண்காட்சிக்கு வருகை தந்ததாகவும், ரூ.15 கோடி மதிப்புக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

இம்முறை, சிறுவர்கள் தங்கள் பெற்றோருடன் அதிக அளவில் புத்தக கண்காட்சிக்கு அழைத்துவரப்பட்டிருந்ததை பார்க்க முடிந்தது. சிறுவர்கள் வருகையால் கண்காட்சி வளாகத்திலுள்ள உணவகங்களுக்கு மக்கள் படையெடுத்தனர்.
ஆனால், இந்த உணவகங்கள், ஈக்கள் மொய்க்கும் பகுதியாக சுகாதாரமற்று இருந்ததாக முகம் சுளிக்கிறார்கள் அங்கு சென்ற வாசகர்கள். அதுமட்டுமின்றி, உணவு பொருள் விலை அநியாயத்திற்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் புகார் கூறுகிறார்கள்.
ஒரு வாசகர் இப்படி கூறுகிறார் "ஒரு கைப்பிடி அளவே கொண்ட லெமன் சாதம் ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டது.., ஒரு ஜூஸ் ரூ.60. அதிலும் நூதனமாக, ஒரே பில்லாக தராமல், ரூ.30 மதிப்புள்ள 2 பில்களை கொடுத்து 60க்கு ஜூஸ் விற்கப்பட்டது" என்றார்.
புத்தகம் வாங்கிய செலவைவிட சாப்பாட்டுக்கு செலவிட்ட தொகைதான் அதிகம் என்ற புலம்பல் ஒலிகளும் கேட்டன. வாகன பார்க்கிங் வசதி உள்ளிட்ட இன்ன பிற வசதிகளை அருமையாக செய்திருந்ததாக பாராட்டு கிடைத்துள்ள நிலையில், உணவகங்கள் விஷயத்தில் புத்தக கண்காட்சி சறுக்கிவிட்டது என்றுதான் கூற வேண்டும்.
செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்பட்டிருக்க வேண்டாமா..?












Click it and Unblock the Notifications