வகுப்பு புறக்கணிப்பு... தலைமைச்செயலகம் முற்றுகை.. அனிதாவிற்கு நீதி கேட்டு திணறடித்த சென்னை மாணவர்கள்
அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் சென்னையில் கல்லூரி மாணவர்கள் திடீரனெ தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்றததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை : அனிதாவின் மரணத்திற்கு காரணமான நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திடீரென தலைமைச் செயலகத்தை முற்றுகையிட பேரணியாக செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், ஏழைகளின் மருத்துவ கனவை நசுக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். சென்னை நுங்கம்பாக்கம் சாலையில் உள்ள லயோலா கல்லூரி வாசல் முன்பு மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் மாணவர்கள் கல்லூரி வாயில் முன் அமர்ந்து மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து கோஷமிட்டு வருகின்றனர். 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று கூடி நீட் தேர்வை தடை செய்ய வேண்டும் என்று ஒரே குரலில் கூறி வருகின்றனர்.

லயோலா மாணவர்கள் பேராட்டம்
ஏழைக் குழந்தைகளின் கல்வியை பறிக்காதீர்கள், அனிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் பதாகைகளை ஏந்தியுள்ளனர். நீட் என்ற ஒன்று எப்படி ஏழை மாணவர்களை பாதிக்கிறது என்பதையும் மாணவர்கள் ஒவ்வொருவராக வந்து தங்களது கருத்துகளை தெரிவித்துவிட்டு செல்கின்றனர்.
பச்சையப்பன் மாணவர்கள் புறக்கணிப்பு
இதே போன்று சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் குதித்துள்ளனர். மத்திய, மாநில அரசுகள் தாமதப்படுத்தாமல் தமிழகத்தில் இருந்து நீட் தேர்வை விலக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்

ஒய்எம்சிஏ மாணவர்கள்
சென்னையின் பரபரப்பான மவுண்ட் சாலையில் வரும் நந்தனம் ஒய்எம்சிஏ கல்லூரி மாணவர்களும் வெயிலையும் பொருட்படுத்தாமல் போராட்டக் களத்தில் இறங்கியுள்ளனர். மாணவர்கள் ஒன்றுதிரண்டால் மட்டுமே நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியும் என்பதால் போராட்டத்தில் இறங்கியுள்ள மாணவர்கள் நீட் என்னும் கொடுந்தேர்வு தமிழகத்திற்கு வேண்டாம் என்றனர்.

குருநாநக் மாணவர்கள் உள்ளிருப்பு
வேளச்சேரியில் உள்ள குருநாநக் கல்லூரி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி வளாகத்தினுள்ளேயே உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். நீட் தேர்வுக்கு தடை விதிக்கும் வரை போராட்டம் ஓயாது என்றும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாநிலக் கல்லூரி, சென்னை பல்கலையின் நிலை
இதே போன்று மெரினா கடற்கரை சாலையில் உள்ள மாநிலக் கல்லூரி மற்றும் சென்னைப் பல்கலைக்கழக மாணவர்களும் உள்ளிருப்புப் போராட்டங்களில் ஈடுபட்டனர். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பதாகைகளை ஏந்தி அமைதியான முறையில் போராட்டம் செய்தனர் சென்னை பல்கலைக்கழக மாணவர்கள், சென்னை பிரசிடென்சி கல்லூரியில் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டனர்.

தலைமைச் செயலகம் முற்றுகை
அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இந்திய ஜனசாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முதல்வர் பழனிசாமி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி பேரணியாக சென்ற மாணவர்கள் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்றனர். மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications