சுவாதி வழக்கில் கொலையாளியை பிடிக்க "ஸ்பெஷல்" திட்டம் - டி.கே.ராஜேந்திரன்
சென்னை: சுவாதி படுகொலை வழக்கை விசாரிக்க பிரத்யேகத் திட்டம் வகுத்துள்ளதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் டி.கே.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். கொலையாளி குறித்து தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும் டி.கே.ராஜேந்திரன் கூறியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காலை மின்சார ரயிலுக்காக காத்திருந்தபோது சூளைமேட்டைச் சேர்ந்த இளம் பெண் பொறியாளர் சுவாதி, மர்ம இளைஞரால் படுகொலை செய்யப்பட்டார். காலை 6.30 மணி அளவில் நிகழ்ந்த இக் கொலை, பொது மக்கள், ரயில் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பான வழக்கு ரயில்வே போலீசாரிடம் இருந்து சென்னை போலீசாருக்கு மாற்றப்பட்டு அவர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுவாதி கொலை பற்றி ஆலோசிப்பதற்காக சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் டி.கே.ராஜேந்திரன், நேற்று உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட் டார். நேற்று மாலையில் தொடங்கிய இந்த ஆலோசனை கூட்டம் நள்ளிரவு 1 மணி வரை நீடித்தது. அப்போது சுவாதி கொலை வழக்கில் தீவிரமாக துப்பு துலக்கி கொலையாளியை விரைவில் கைது செய்ய வேண்டும் என்று அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
சுவாதியின் செல்போன் எண்ணை வைத்தும் துப்பு துலக்கப்பட்டது. யார் யாருடன் சுவாதி பேசி இருக்கிறார் என்பது பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்தனர். இதன் மூலமாக 100க்கும் மேற்பட்ட செல்போன் எண்களை கண்டுபிடித்த போலீசார் சுவாதியிடம் போனில் பேசிய அனைவரிடமும் விசாரித்தனர். ஆனால் எந்தவித துப்பும் துலங்கவில்லை. சுவாதியின் செல்போனில் முக்கியமான ஆதாரங்கள் இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக் கிறார்கள்.
இதையடுத்து சுவாதியின் ஃபேஸ்புக் கணக்கை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அவருடன் நண்பர்கள் 2 பேர் தொடர்ந்து பேசியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரையும் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், சுவாதி படுகொலை தொடர்பாக கொலையாளியை பிடிக்க பிரத்யேகத் திட்டம் வகுத்துள்ளதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் டி.கே.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், சுவாதியின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களிடம் இருந்து பல்வேறு தகவல் கிடைத்துள்ளன. இந்த வழக்கின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
சுவாதி கொலை சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் காவல்துறையினரிடம் தகவல் தெரிவிக்கலாம். தகவல் கொடுப்பவர்கள் பற்றிய ரகசியம் பாதுகாக்கப்படும். கொலையாளியை நேரில் பார்த்தவர்கள் 98401 90505 என்ற எண்ணிலோ, தெற்கு மண்டல கூடுதல் ஆணையர், நுங்கம்பாக்கம் உதவி ஆணையர், நுங்கம்பாக்கம் காவல் ஆய்வாளர் செல்போன் எண்களிலும் தகவல் தெரிவிக்கலாம் என்றும் டி.கே.ராஜேந்திரன் கூறியுள்ளார்.
இதனிடையே சுவாதி படுகொலை தொடர்பாக அவரது சொந்த ஊரான ஸ்ரீரங்கத்தில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். குடும்ப தகராறு காரணமாக சுவாதி கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
