கைவிட்ட ஜெனரேட்டர்.. பெட்ரோமாக்ஸ் லைட்டுக்கு கூட வழியில்லாத சென்னை மாநகராட்சி!
சென்னை: சென்னை மழை வெள்ள காலத்தில் பழைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட பெட்ரோமாக்ஸ் லைட்டுகள்தான் கை கொடுத்து உதவியுள்ளன.
சென்னை மாநகராட்சியின் தலைமையகம் அமைந்துள்ள ரிப்பன் கட்டிடத்தில் 'நிவாரண உபகரணங்கள்' வைப்பதற்கென்று பாதுகாப்பான நிறைய இடங்கள் உள்ளன.
மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, பெட்ரோமாக்ஸ் லைட்டுகள், சேற்றுப்புண் மருந்துகள் போன்ற பொருட்கள் அந்த இடங்களில் சேமித்து வைக்கப்படுவது நீண்ட காலமாக நடைமுறையிலுள்ள வழக்கம்.

பெட்ரோமாக்ஸ் லைட்டேதான்
பேரிடர் நேரங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை பள்ளிகளிலும், சமூக நல கூடங்களிலும் அரசு தங்க வைக்கும். அப்போது பெட்ரோமாக்ஸ் லைட்டுகளைத்தான் பயன்படுத்தமுடியும்.

காலை வாரும் ஜெனரேட்டர்
ஏனெனில் என்னதான் ஜெனரேட்டர் இருந்தாலும், அதில் வெள்ள நீர் புகுந்துவிட வாய்ப்பிருப்பதால் தக்க நேரத்தில் பயன்தராமல் போய்விடும். மியாட் மருத்துவமனை சம்பவம் இதற்கு ஒரு உதாரணம்.

தீப்பெட்டி, மெழுகுவர்த்தி
இது போன்ற சூழ்நிலைகளை கணித்துதான் மெழுகுவர்த்தி, தீப்பெட்டி போன்றவைகளோடு பெட்ரோமாக்ஸ் விளக்குகளையும் ரிப்பன் பில்டிங் கிடங்கில் வைத்துக் கொண்டிருப்பது வழக்கம்.

அருமை
ஆனால் சமீபகாலமாக பெட்ரோமாக்ஸ் பயன்பாட்டை தவிர்த்துவந்துள்ளது நிர்வாகம். ஆனால், அதன் அருமை, சமீபத்திய பெருமழையின்போதுதான் தெரியவந்துள்ளது.

வாடகை
வார்டுதோறும் பெட்ரோமாக்ஸ் லைட்டுகள் தேவைப்பட்ட நிலையில், பெட்ரோமாக்ஸ் லைட் இல்லாத காரணத்தால் அதை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தியுள்ளது மாநகராட்சி. பல இடங்களில் உயிர்காக்கும் கருவியாக பெட்ரோமாக்ஸ் விளங்கியுள்ளது.

வாங்கியே இருக்கலாம்
புதிதாக பெட்ரோமாக்ஸ் வாங்கினாலே ஒன்றின் விலை 1,500 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரையில் இருக்கும்.
ஆனால் நாள் வாடகை 150 முதல் 200 ரூபாய் கொடுத்து மாநகராட்சி பயன்படுத்தியுள்ளது. அட்வான்சாக, 500 ரூபாயும் கொடுக்கப்பட்டுள்ளது. அப்படி பல நூறு பெட்ரோமாக்ஸ் லைட்டுகள் சென்னை மாநகராட்சியால் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

பந்தமெல்லாம் வேண்டாம்
அமைச்சர்கள் முக்கிய பிரமுகர்கள் சூபர்வைசிங் போகிற இடங்களில் பெட்ரோமாக்ஸ் லைட்டை கையில் தூக்கிக் கொண்டு ஊழியர்கள் பின்னாலேயே சென்றதை பார்க்க முடிந்தது. ஜெனரேட்டரை அப்படி தூக்கிக் கொண்டு போக முடியாது, பந்தத்தையும் மழையின்போது கொழுத்த முடியாது என்பதை உணர்ந்தாவது மாநகராட்சி இனி பெட்ரோமாக்ஸ் லைட்டே வாங்கி வைக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications