சென்னை பெண் இன்ஜினியர் மீது ஏறி இறங்கிய டிராக்டர்.. துடிதுடித்து இறந்த தாய்.. ஈரோடு அருகே துயரம்
ஈரோடு : நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே டிராக்டர் மற்றும் இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சென்னையை சேர்ந்த பெண் என்ஜினீயர் மறறும் அவரது தாயார் ஆகியோர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே சின்னார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜவேலு என்பவருடைய மனைவி தவமணிக்கு 50 வயது ஆகிறது. இவர்களுக்கு 25 வயதில் இந்துமதி என்ற பெண் உள்பட 4 மகள்கள் இருக்கிறார்கள்.
இந்துமதி கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் படித்து முடித்து இருந்தார். சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்துமதியின் தங்கை காதல் திருமணம் செய்து கணவனுடன் திருச்செங்கோடு அருகே இறையமங்கலத்தில் வசித்து வருகிறார்

இந்த நிலையில் சனிக்கிழமை தாய், மகள் இருவரும் இருசக்கர வாகனத்தில் இந்துமதியின் தங்கையை பார்க்க சென்றனர். இருசக்கர வாகனத்தை இந்துமதி ஓட்டி சென்றார். அவரது தாயார் இந்துமதி தவமணி பின்னால் அமர்ந்திருந்தார். திருச்செங்கோடு அருகே இறையமங்கலத்தை அடைந்த அவர்கள், இந்துமதியின் தங்கையை பார்த்தார்கள். பின்னர் இந்துமதி தனது தாயாருடன் ஊருக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.
இந்துமதியின் இருசக்கர வாகனம் பள்ளிபாளையத்தை அடுத்த கொக்கராயன்பேட்டை கோம்பைமேடு பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது இருசக்கர வாகனத்தின் முன்னதாக கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது .
அந்த டிராக்டரை இந்துமதி மொபட்டில் முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிரே லாரி வந்து கொண்டிருந்திருந்தது. இதனால் நிலைதடுமாறி இந்துமதி சாலையில் விழுந்தார். இதில் தாயும், மகளும் சாலையில் தடுமாறி விழுந்தனர்.

கண்இமைக்கும் நேரத்தில் சாலையில் உருண்ட இந்துமதியின் மீது டிராக்டர் சக்கரம் ஏறி இறங்கியது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே இந்துமதி பரிதாபமாக இறந்தார். மேலும் சாலையில் விழுந்து படுகாயம் அடைந்த தவமணி உயிருக்கு போராடினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக வந்தவர்கள் தவமணியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பள்ளிப்பாளையம்போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் இந்துமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தவமணியும் சிகிச்சை பலனின்றி இறந்தார். தாய் மகள் இருவரும் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பள்ளிப்பாளையம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications