செம்பரம்பாக்கம் ஏரி திறப்பில் அரசின் குளறுபடி- 'செயற்கை பேரிடராக' விஸ்வரூபமெடுத்த விபரீதம்!!
சென்னை: சென்னையை மூழ்கடித்த பெருவெள்ளமானது செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு தொடர்பாக முடிவெடுக்க முடியாமல் மெத்தனம் காட்டிய அரசின் குளறுபடியால் உருவான 'செயற்கை' பேரிடர்தான் என்கிற குற்றச்சாட்டு வலுத்து வருகிறது.
சென்னையில் 100ஆண்டுகாலம் காணாத கனமழை வெளுத்து வாங்கியது... இந்த கனமழையால் ஏரிகள், குளங்கள் நிரம்பி வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியதால் அடையாறு ஆறு பொங்கி பிரவாகமெடுத்தது.. இதனால்தான் தென்சென்னையின் பல பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டன. சில மணிநேரங்களிலேயே லட்சக்கணக்கான சென்னைவாசிகள் அகதிகளாக்கப்பட்ட பேரவலம் நிகழ்ந்தது என்றே கூறப்பட்டு வருகிறது.
ஆனால் இவ்வளவு பெரிய பேரிடரையும் பெருந்துயரையும் சென்னை மக்கள் சந்திக்க காரணமே தமிழக அரசின் படுமோசமான மெத்தனமே காரணம்... அதுவும் செம்பரம்பாக்கம் ஏரி நீரை திறந்துவிடுவதில் முடிவெடுக்க முடியாமல் நீடித்த குழப்பம், தாமதம் இதனால் பெருமளவு ஏரி நீர் ஒரே நேரத்தில் திறந்துவிடப்பட்டு சென்னை மூழ்கடிக்கப்பட்டது என்பதுதான் குற்றச்சாட்டு.

நவம்பரில் நீர் திறப்பு
நவம்பர் மாதம் பெய்த மழையின் போது செம்பரம்பாக்கம் ஏரியும் நிரம்பியது. நவம்பர் 17-ந் தேதியன்று செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மொத்தம் 18,000 கன அடிநீர் வெளியேற்றப்பட்டது. அதன் பின்னர் இந்த நீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு நவம்பர் 28-ந் தேதியன்று 500, 29-ந் தேதியன்று 570, 30-ந் தேதியன்று 600 கன அடிநீர் வெளியேற்றப்பட்டதாக கூறுகிறது தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம்.

கனமழை எச்சரிக்கை
இதே காலகட்டத்தில் நவம்பர் 22,23களிலேயே சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் "அதிக" கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் ரமணன் முன்னெச்சரிக்கை விடுத்திருந்தார். அதே போல் நவம்பர் 30-ந் தேதியன்று பி.பி.சி. தொலைக்காட்சியின் வானிலை பிரிவும் சென்னையில் 50 செ.மீ. மழை பெய்யக் கூடும் என எச்சரித்திருந்தது.

கண்டுகொள்ளப்படாத வார்னிங்
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை கணக்கில் கொண்டு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் கொள்ளளவை வெகுவாக குறைத்து அதாவது படிப்படியாக நீரை வெளியேற்றிவிட்டு வரப்போகும் கனமழையை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டியது ஒரு அரசின் இயல்பான நடவடிக்கை. இதைத்தான் நவம்பர் 19-ந் தேதியன்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் செய்ததாக கூறப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து படிப்படியாக நீரை குறைக்கலாம் என்ற கோப்பு கோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவே கூறப்படுகிறது.

ஒப்புதல் தராத 'கோட்டை'
ஆனால் அந்த கோப்பு, ஒப்புதல் அளிக்கப்படாமலேயே கிடப்பில் போடப்பட்டு விட்டது... இதனால் நவம்பர் 30-ந் தேதி தொடங்கி 40 மணிநேரம் சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. பி.பி.சி. எச்சரித்தபடியே தாம்பரத்தில் 49 செ.மீ மழையும் பெய்தது.

திடுமென பல்லாயிரம் கன அடிநீர் திறப்பு
இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து டிசம்பர் 1-ந் தேதி காலையில் இருந்து 3,000; 5,000, 7,500 கன அடிநீர் என படிப்படியாக திறக்கப்பட்ட நீர் திடுமென மாலையை நெருங்க நெருங்க 29,000 கன அடி நீர் வரை போய்விட்டது. ஊடகங்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி அனுப்பிய பத்திரிகை செய்தியில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமோ வெறும் 900 கன அடிநீர்தான் திறக்கப்பட்டதாகவும் டிசம்பர் 2-ந் தேதியன்றுதான் 29,000 கன அடிநீர் திறக்கப்பட்டதாகவும் கூறுகிறது.
நவம்பர் 25-ந் தேதிக்கு பின்னரே பெருமளவிலான ஏரி நீரை படிப்படியாக திறந்துவிட உரிய உத்தரவு பிறப்பிக்கப்படாத ஒரே ஒரு காரணத்தால்தான் கனமழை கொட்டிய நேரத்தில் அடையாறுக்கு வந்து சேரும் குளங்கள், ஏரிநீர் பெருக்கெடுத்து ஓடும் நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கணக்கின்றி பெருமளவு நீர் 2 நாட்களாக தொடர்ந்து திறந்துவிடப்பட தென்சென்னையே வெள்ளத்தில் மூழ்கிப் போனது.

முன்யோசனையே இல்லை
இது முழுக்க முழுக்க பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தலைமைச் செயலர் ஞானதேசிகன் மற்றும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் எந்த ஒரு முன்யோசனை, திட்டமிடல் எதுவும் இல்லாமல் செயல்பட்டுள்ளனர் என்பதை பட்டவர்த்தனமாக அம்பலப்படுத்தியிருக்கிறது. வேறுவழியே இல்லாமல் கடைசிநேரத்தில் திடீரென பல்லாயிரம் கண அடிநீரை செம்பரம்பாக்கத்தில் இருந்து திறந்துவிட்ட அதே நேரத்தில் அடையாறு ஆற்றுக்கு இயல்பாக வந்து சேரும் இதர வெள்ள நீரும் சேர்ந்து கொள்ள சுமார் 1,00,000 கன அடிநீர் அடையாறு ஆற்றில் பெருக்கெடுத்து ஓடியதால் தென்சென்னை மூழ்க நேரிட்டது.

செயற்கையான பேரிடரே
இப்படி செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பில் ஏற்பட்ட மெத்தனம், குழறுபடியால்தான் அடையாறு ஆற்றில் வெள்ளம் வரப்போகிறது என்ற முன்னெச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை; நிவாரண மையங்கள் விடுக்கப்படவில்லை; மீட்புப் பணிக்கும் மாநில அரசு தயாராகவும் இல்லை.. இப்படி தமிழக அரசின் செயலற்ற தன்மையால் ஒரு செயற்கையான பேரிடரை தென்சென்னை எதிர்கொள்ள நேரிட்டு லட்சக்கணக்கானோர் ஒரு சில மணிநேரத்தில் மரணத்தின் வாசலை தொட்டு அகதிகளாக நடுத்தெருவில் நிற்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளது.
இந்த அகதி வாழ்க்கை அந்த ஒரு சில நாட்களோடு முடிந்து போய்விடவில்லை... அரசின் மெத்தனமான செயலற்ற தனத்தால் இத்தகைய செயற்கை பேரிடரால் லட்சக்கணக்கான நடுத்தர மக்களின் பல்லாண்டுகால உழைப்பு, சேமிப்பு அத்தனையும் சூனியமாகிப் போய் பூஜ்யத்தில் இருந்து வாழ்வைத் தொடங்க வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.. அவர்கள் மீள்வது எப்போதோ?
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications