ஓய்ந்தது சட்டக் கல்லூரி மாணவர்களின் உள்ளிருப்பு போராட்டம் - 10 நாட்களுக்கு பின் வாபஸ்
சென்னை: சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் 10 நாட்களாக நடைபெற்று வந்த மாணவர்களின் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரிக் கட்டடம் மிகவும் மோசமாக இருப்பதால் அதை புனரமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக கல்லூரியை இடமாற்றம் செய்யவும் தீர்மானித்தது. ஆனால் இடம் மாற்றம் செய்யக் கூடாது என்று கோரிக்கை விடுத்து அக்கல்லூரி மாணவர்கள் கடந்த 10 நாட்களாக பல்வேறு போராட்டங்களில்ல குதித்தனர் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அவர்களுக்கு ஆதரவாக மதுரை சட்டக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரி மாணவர்களும், பல்வேறு வழக்கறிஞர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுருந்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது. ஆனால் அதை விசாரித்த நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்தனர். சட்டக் கல்லூரி கட்டிடங்கள் வலுவில்லாமல் பலவீனமாக இருப்பதால் மாற்றம் அவசியம் என்றும் நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இன்று இன்னொரு வழக்கும் விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதிகள் வக்கீல்களின் போராட்டம் குறித்து வருத்தம் தெரிவித்தனர். சட்டத்தை கடைப்பிடிக்க வேண்டியவர்களே சட்டத்தை மீறி நடக்கலாமா என்று நீதிபதிகள் கேட்டனர். இதையடுத்து அந்த மனுவை வழக்குத் தொடுத்த வழக்கறிஞர் திரும்பப் பெற்றுக் கொண்டார்.
இந்தப் பின்னணியல், சட்டக் கல்லூரி மாணவர்களின் உள்ளிருப்பு போராட்டம் இன்று கைவிடப்பட்டுள்ளது. இது தற்காலிகமான நிறுத்தம்தான் என்றும், பிற மாணவர்கள் மற்றும் கல்லூரிகளுடன் அடுத்த போராட்டம் குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் போராட்டக் குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications