'லூக்கா சுரேஷ், சைக்கோ விமல், தீச்சட்டி முருகன்..' 6 மாசத்துக்கு ஊரை விட்டு ஓடிப் போய்டுங்க!
சென்னை: சென்னை போலீஸார் 29 ரவுடிகளை அடையாளம் கண்டு அவர்களை நகரை விட்டே வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளனர்.
அவர்களைப் பிடித்துக் கைது செய்து சிறையில் அடைக்காமல் இப்போதைக்கு நகரை விட்டு வெளியேறி விடுங்கள் என்று போலீஸார் கூறுவது பொதுமக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், நகரில் வெறும் 29 பேர் மட்டுமே பயங்கரமான ரவுடிகளா என்றும் மக்களிடையே கேள்வி எழுந்துள்ளது.

ஏரியா ரவுடிகள்
சென்னையில் ரவுடிகளுக்குப் பஞ்சமே இல்லை. ஏரியாவுக்கு பத்துப் பேராவது ரவுடித்தனம் செய்கிறார்கள்.
ஈவ் டீசிங் முதல் செயின் பறிப்பு வரை
ஈவ் டீசிங் முதல் செயின் பறிப்பு வரை சகலவிதமான ரவுடித்தனத்திலும் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தும், போலீஸார் அவர்களைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுத்தும் கூட ரவுடித்தனம் முழுமையாக அடங்காத நிலைதான் காணப்படுகிறது.
நகரை விட்டு டிரான்ஸ்பர் ஆன ரவுடிகள்
தற்போது தேர்தல் காலம் வந்து விட்டதால் ரவுடிகளை களையெடுக்கவும், கட்டுக்குள் வைக்கவும் போலீஸார் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளனர். ஏற்கனவே கத்தி கலைமணி, கொடுங்கையூர் பன்னீர்செல்வம் ஆகிய இரு மிரட்டல் ரவுடிகளை நகரை விட்டு வெளியேற்றியுள்ளனர் போலீஸார். இவர்கள் 6 மாத காலத்திற்கு நகருக்குள் பிரவேசிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி வந்தால் கைது செய்யப்படுவார்களாம்.
மேலும் 29 பேருக்கு டிரான்ஸ்பர் ஆர்டர்
இந்த நிலையில் தற்போது ரவுடிகள் பட்டியல், குற்றப் பட்டியலில் உள்ள 29 பேரை பட்டியல் போட்டுள்ளது போலீஸ்.
வட சென்னையில் ஒரே ஒரு ரவுடி
பிராந்திய வாரியாக இந்த ரவுடிகளை பட்டியல் போட்டுள்ளனர் போலீஸார். இதில் வட சென்னையில் ஒரே ஒரு ரவுடியின் பெயர் மட்டும் இடம் பெற்றுள்ளது.
தென்சென்னையில்தான் ஜாஸ்தி
தென் சென்னையில்தான் அதிக அளவாக 16 ரவுடிகளின் பெயர் இடம் பெற்றுள்ளது. கிழக்கு சென்னையில் அடுத்து 12 பேர் உள்ளனர்.
இவங்கதாங்க அந்த ரவுடிகள்...
தண்டையார்பேட்டை சரவணன், தி.நகர் சுரேஷ் என்ற லூக்கா சுரேஷ், மாம்பலம் ராஜா என்ற புஷ்பராஜ், கே.கே.நகர் முரளி (35), விருகம்பாக்கம் கார்த்திகேயன், எம்.ஜி.ஆர். நகர் ஆல்பர்ட், எம்.ஜி.ஆர். நகர் பிரபு என்ற சுவீட் பிரபு, மேற்கு ஜாபர்கான் பேட்டை பாலாஜி, பெருங்குடி ரஜினி, பெருங்குடி தனசேகரன் என்ற தனசேகர், கண்ணகி நகர் ராஜேஷ், பெசன்ட் நகர் கார்த்திக், பெசன்ட் நகர் மகேஷ், உள்ளகரம் தாஸ் என்ற அரிதாஸ், பழவந்தாங்கல் கிறிஸ்துராஜ், திரிசூலம் வெங்கடேசன், ஆலந்தூர் வேளாங்கண்ணி, மயிலாப்பூர் சிவகுமார், மயிலாப்பூர் மகேஷ் என்ற பெரிய மகேஷ், ராயப்பேட்டை ராஜ்குமார், ராயப்பேட்டை விமல் என்ற சைக்கோ விமல், மந்தைவெளி முருகன், கோட்டூர்புரம் நெல்சன், டி.பி.சத்திரம் தட்சிணாமூர்த்தி என்ற தட்சிணா, டி.பி.சத்திரம் முருகன் என்ற தீச்சட்டி முருகன், பெரியமேடு ரமேஷ்பாபு, அயனாவரம் ஞானம் என்ற ஞானசேகரன், பல்லவன் சாலை ஆரோக்கியதாஸ், நுங்கம்பாக்கம் மோகன்.
ஆஜராக உத்தரவு
இவர்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட கோட்ட துணை கமிஷனர்கள் முன்பு ஆஜராக வேண்டும் என்றும், அதன் பின்னர் நகரை விட்டு வெளியேறி விட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 6 மாதங்களுக்கு இவர்கள் நகருக்குள் வரக் கூடாது.












Click it and Unblock the Notifications