சேலம் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்..மேட்டூர் அணையை ஜூன் 12ல் திறக்கிறார்..கடைமடை வரை தண்ணீர் வருமா
சேலம்: காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையில் தண்ணீரை திறந்து வைப்பதற்காக இன்று சேலம் செல்கிறார். மேட்டூர் அணை திறக்கப்படுவதன் மூலம் காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இந்த தண்ணீர் திறப்பு அணையில் இருக்கும் நீரை பொறுத்து குறித்த நாளில் அல்லது அதற்கு முன்பாகவோ, அதன் பின்பாகவோ திறந்து வைக்கப்படுகிறது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், புதுக்கோட்டை, நாகை ஆகிய 12 மாவட்ட விவசாயிகள் காவிரி நீரைக் கொண்டும், வடிமுனைக் குழாய் மூலமாகவும் குறுவை, சம்பா, தாளடி ஆகிய பருவங்களில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.

மேட்டூர் அணையில் 90 அடிக்கு மேல் நீர் இருப்பு இருக்கும்பட்சத்தில், குறுவை சாகுபடிக்கு ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும். உரிய காலத்தில் அணை திறக்கப்பட்டு, கடைமடை வரை முழுமையாக தண்ணீர் சென்று சேரும்பட்சத்தில் வழக்கமாக குறுவை நெல் சாகுபடி ஏறத்தாழ 3.50 லட்சம் ஏக்கரில் நடைபெறும்.
கடந்த ஆண்டு மேட்டூர் அணையில் நீர் இருப்பும், அணைக்கு நீர்வரத்தும் அதிகமாக இருந்ததால் மே 24ஆம் தேதியே திறக்கப்பட்டது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் மிக அதிக அளவாக 4.26 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்றது. இதற்கு ரூ.61 கோடி மதிப்பீட்டில் குறுவை தொகுப்புத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டதும் முக்கிய காரணமாக அமைந்தது. இந்த ஆண்டும் அதே அளவு நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது மேட்டூர் அணையில் நீர்மட்டம் 103.61 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 750 கனஅடியாக உள்ளது. தற்போது கோடை மழை பல்வேறு இடங்களில் பரவலாக பெய்துள்ள நிலையில், ரூ.80 கோடி மதிப்பில் டெல்டா மாவட்டங்களில் ஆறுகள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளன. இதனால் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரும் கடைமடை வரையில் விரைவாக சென்று சேரும் வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த ஆண்டு 4 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற வாய்ப்புள்ளதாகவும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் கூட்டு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைக்கவும், மேட்டூர் அணையை திறந்து வைப்பதற்காகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 3 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமான நிலையம் வருகிறார். 3 நாட்கள் பயணமாக சேலம் செல்லும் முதல்வர் இன்று சேலத்தில் தங்குகிறார். இன்று மாலையில் சேலத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. நாளைய தினம் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். ஜூன் 12ஆம் தேதி திங்கட்கிழமை முதல்வர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைக்கிறார்.
மேட்டூர் அணை தண்ணீர் மூலம் காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. கடந்த ஆண்டு மேட்டூர் அணை மே மாதம் இறுதியில் திறக்கப்பட்டது. நடப்பாண்டு மேட்டூர் அணை சரியான நேரத்தில் திறப்பது குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி என்றாலும் கடைமடைவரை தண்ணீர் சென்று சேர வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாகும்.












Click it and Unblock the Notifications