இறையன்பு ஐஏஎஸ்ஸின் ஸ்பெஷல் அட்வைஸ்.. கல்லூரி கல்வியை ஊக்குவிக்கும் புதுமை பெண் திட்டம்.. சபாஷ்
சென்னை: அரசு பள்ளிகளில் பயின்ற பெண்கள் இப்போது உயர் கல்வியை தொடர்ந்து வருகிறார்கள் அவர்களை ஊக்குவிப்பதற்காக புதுமை பெண் என்ற திட்டத்தின் மூலம் மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தினை தமிழ்நாடு அரசு தொடங்கி உள்ளது. இதனை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று வெ.இறையன்பு கேட்டுக் கொண்டுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டு அதற்கு பதில் பள்ளி படிப்பு முடித்து உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையாக மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டம் என்ற பெயரில் "புதுமைப் பெண்" திட்டம் என்றும் இதற்கு பெயரிடப்பட்டது.

தமிழக அரசு: இந்த திட்டத்திற்காக தமிழக அரசு ரூ.698 கோடி ஒதுக்கி உள்ளது. இந்த திட்டத்தில் உதவித் தொகை பெற விரும்பும் மாணவிகளின் விபரங்கள் கடந்த சில மாதங்களாக கல்லூரிகளின் வாயிலாக சேகரிக்கப்பட்டு வந்தது. அதன்படி சுமார் 3 லட்சம் மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதில் முதல் கட்டமாக 1 லட்சம் மாணவிகளின் வங்கிக் கணக்குக்கு ரூ.1000 உதவித் தொகை அனுப்பப்படுகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் மறுகட்டுமான திட்டத்தின் கீழ் சென்னை ஆண்டிமானியம் தோட்டம் திட்டப்பகுதியில் 480 பழைய அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்கப்பட்டு வரும் பணிகளை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு பார்வையிட்டு ஆய்வு செய்தார். வன்னியபுரம் திட்டப்பகுதியில் 192 பழைய அடுக்குமாடி குடியிருப்புகள் முழுவதுமாக இடிக்கப்பட்டு புதிதாக 216 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணியினையும் மற்றும் நாட்டான் தோட்டம் திட்டப்பகுதியில் விரைவில் இடிக்கப்படவுள்ள 266 அடுக்குமாடி குடியிருப்புகளை தலைமைச் செயலாளர் ஆய்வு செய்தார்
குடியிருப்பு: அப்போது, பழைய குடியிருப்புகளை பாதுகாப்பான முறையில் இடித்து புதிய குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகளை விரைவில் தொடங்கி பயனாளிகளுக்கு ஒப்படைக்க வேண்டும் என்று இறையன்பு உத்தரவிட்டார்.. மேலும், இடிக்கப்படவுள்ள பழைய குடியிருப்புகளிள் வசிக்கும் மக்களிடம் பேசி அவர்களை அங்கிருந்து விரைவில் அப்புறப்படுத்தி, அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்கும் பணியினை சீக்கிரமாக தொடங்கிட வேண்டும் என்றும் என்றும் அலுவலர்களை இறையன்பு கேட்டுக்கொண்டார்.
பெரும்பாக்கம்: பின்னர், பெரும்பாக்கம் திட்டப்பகுதி-1 மற்றும் முன்மாதிரி திட்டப்பகுதி குடியிருப்போர் நலச் சங்கங்களின் பிரிதிநிதிகளுடன் கலந்து உரையாடினார். இதையடுத்து, தோழமை தொண்டு நிறுவனம் மற்றும் சுமைதாங்கி தொண்டு நிறுவனம் சார்பில் 10 மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையாக ரூ.1,81,500-க்கான காசோலையை தலைமைச் செயலாளர் வழங்கினார்... பின்னர். பெரும்பாக்கத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகளை சந்தித்து தலைமைச் செயலாளர் இறையன்பு பேசினார்..

அப்போது, "இக்கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியர்கள் ஆர்வமாக கல்வி கற்று வருகின்றனர் என தங்களுடைய ஆசிரியர்கள் சொன்னதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.. இதில் பொரும்பாலோர் முதல் தலைமுறை பட்டதாரியாக உள்ளீர்கள் என்பதை அறிந்து நான் பெருமை கொள்கிறேன்.
உயர்ந்த பதவிகள்: கல்வியை நாம் ஒரு உயர்ந்த நோக்கத்தோடு கற்க வேண்டும்... நாம் முன்னேறி, உயர்ந்த பதவியை அடைய வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டுமல்ல நம்மை போல் கஷ்டபடும் மக்களையும் நாம் உயர்த்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு கல்வி கற்க வேண்டும். அரசு பள்ளிகளில் பயின்ற பெண்கள் இப்போது உயர் கல்வியை தொடர்ந்து வருகிறார்கள் அவர்களை ஊக்குவிப்பதற்காக புதுமை பெண் என்ற திட்டத்தின் மூலம் மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தினை தமிழ்நாடு அரசு தொடங்கி உள்ளது. இதனை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்" என்று இறையன்பு கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications