போராட்டத்தால் பலனில்லை.. நைசாக டிக்கெட் விலையேற்ற சுமையை ரசிகர்கள் மீது தூக்கி போட்ட தியேட்டர்கள்
சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வந்த தியேட்டர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஆனால் பாரம் என்னவோ மக்கள் தலை மீது தூக்கி வைக்கப்பட உள்ளது.
சினிமா தியேட்டர்கள் மீது 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது மத்திய அரசு. மாநில அரசு கூடுதலாக 30 சதவீத கேளிக்கை வரியை உள்ளாட்சிகள் மூலம் வசூலிக்க முடிவு செய்துள்ளது.
பிற மாநிலங்களில் இதுபோன்ற இரட்டை வரி முறை இல்லை என்பதால் கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி கடந்த திங்கள்கிழமை முதல் இன்றுவரை 4 நாட்களாக தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டன.

அசையாத அரசு
அரசுடன் தியேட்டர் அதிபர் சங்க நிர்வாகிகள், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தினர். முதல்வர், அமைச்சர்களை சந்தித்தனர். இருந்தாலும் அரசு அசைந்து கொடுக்கவில்லையாம்.

தேவை வரி
இன்று சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் இப்பிரச்சினையை எழுப்பியபோதும், உள்ளாட்சிகளுக்கு வருமானம் தேவை என்பதால் கேளிக்கை வரியை ரத்து செய்வது முடியாத காரியம் என்ற ரீதியில்தான் அமைச்சர்களிடமிருந்து, பதில் வந்தது.

குழு அமைக்க முடிவு
இந்த நிலையில், இன்று மீண்டும் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தனர் தியேட்டர் அதிபர் சங்கத்தினர். ஆனால், பலன் கிடைக்கவில்லை. பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமானால் ஒரு குழு அமைக்கலாம் என்று மட்டும் அரசு தரப்பிலிருந்து பதில் வந்துள்ளது.

நஷ்டம்
இனிமேலும் தியேட்டர்களை மூடினால், உரிமையாளர்களுக்கு நஷ்டம் அதிகரிக்கும் என்பதை உணர்ந்த தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர், நாளை, வெள்ளிக்கிழமை முதல் தியேட்டர்களை திறக்க முடிவு செய்துவிட்டனர். நாளை ரிலீசாகும் புதுப்படங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதும் இதற்கு காரணம்.

நழுவிய ராமநாதன்
தியேட்டர் உரிமையாளர்களின் கோரிக்கை நிறைவேறாத நிலையில், தியேட்டர்கள் நாளை முதல் திறக்கப்படுகிறது. மல்டிபிளெக்ஸ் தியேட்டர்களில் அதிகபட்ச டிக்கெட் கட்டணம் ரூ.120ஆகத்தான் இருக்க வேண்டும் என்பது அரசு விதி. எனவே நாளை முதல் டிக்கெட் கட்டணங்களை கூட்டுவீர்களா என்ற நிருபர் கேள்விக்கு, சாமர்த்தியமாக "டிக்கெட் விலையை கூட்டமாட்டோம்" என்று பதிலளித்தார் அபிராமி ராமநாதன். அப்படியானால் ஜிஎஸ்டி வரியை எப்படி செயல்படுத்துவீர்கள் என்ற நிருபர் கேள்விக்கு, "பிற பொருட்களில் ஜிஎஸ்டி எப்படி வசூலிக்கப்படுகிறதோ, அப்படித்தான். டிக்கெட் விலைக்கு மேல் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். என்னிடம் இப்போது கால்குலேட்டர் இல்லை, எனவே மொத்தமாக டிக்கெட்டுக்காகும் செலவை என்னால் இப்போது சொல்ல முடியாது" என நைசாக நழுவினார் அவர்.

டிக்கெட் விலை கிடுகிடு
அபிராமிராமநாதன் சொல்வதை போல என்றால் ரூ.120 டிக்கெட் விலையின்மீது 28 சதவீத ஜிஎஸ்டி வரி என்பது, ரூ153.60 என்ற அளவில் வந்து நிற்கும். கேளிக்கை வரி குறித்த உறுதியான தகவல் இன்னும்வரவில்லை. ஒருவேளை அதுவும் விதிக்கப்பட்டால் என்னவாகும். நினைத்து பார்த்தாலே தியேட்டர் பக்கம் போக யாருக்கும் மனசு வராது இல்லையா?

கொள்ளைகளுக்கு முடிவில்லை
பார்க்கிங் கட்டணம், தியேட்டருக்குள் கொள்ளையடிக்கப்படும் ஸ்நாக்ஸ், கூல்ட்ரிங்ஸ், குடிநீர் பாட்டில் விலைகளை குறைக்க முன்வராத தியேட்டர் அதிபர்கள், நைசாக வரி ஏற்ற பழுவை ரசிகர்கள் தலை மீது போட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்படப்போவது ரசிகர்கள்தான். அவர்கள், சினிமா பார்க்க மாற்று வழிகளை யோசிக்க தியேட்டர் அதிபர்களும், அரசுமே உடந்தையாக இருப்பது வேதனை.












Click it and Unblock the Notifications