மதுக்கடையை மூடாமல் மருத்துவ பரிசோதனையை அறிவிப்பதா? கேட்கிறார் விஜயகாந்த்
திருச்சி: மதுக்கடைகளை மூடச்சொன்னால் அதற்கு பதில் சொல்லாமல் முழு உடல் மருத்துவ பரிசோதனை திட்டத்தை அறிவிக்கிறார் முதல்வர் ஜெயலலிதா என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
திருச்சியில் அருகே நடைபெற்ற ‘மக்களுக்காக மக்கள் பணி' நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய விஜயகாந்த் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள், ஆனால் ஓட்டு மட்டும் எங்களுக்கு போடுங்கள் என்றும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.

மதுக்கடைகள் அதிகம்
தமிழகத்தில் பள்ளி கூடங்களை விட மதுக்கடைகளை அதிகமாக திறந்துள்ளனர். மதுகுடிப்பதனால் கல்லீரல் நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

முழு உடல் பரிசோதனை
மதுவிலக்கு போராட்டத்தை மறைப்பதற்காகதான் சட்டசபையில் அம்மா உடல் முழு பரிசோதனை திட்டம் போன்ற புதிய திட்டங்களை அறிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய காவல்துறை டாஸ்மாக் கடைகளுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.

டாஸ்மாக் காவல்துறை
ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையான தமிழக காவல்துறை டாஸ்மாக் காவல்துறையாக மாறிவிட்டது. நான் இப்படி பேசுவதால் இதற்கு கூட வழக்கு போடலாம். நான் வழக்குகளை கண்டு அஞ்சமாட்டேன்.

அவதூறு வழக்கு
எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன். வழக்கு பதிவு செய்ய வேண்டும் ஜெயலலிதாவும், மோடியும் சந்தித்து பேசியதை இளங்கோவன் அவதூறாக பேசியதாக ஜெயலலிதா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

போராட்டம் ஏன்?
மதுரையில் நீதிமன்ற உத்தரவுபடி கையெழுத்து போட சென்ற இளங்கோவன் மீது முட்டை, செருப்பு, தக்காளிகளை அ.தி.மு.க.வினர் வீசியுள்ளனர்.இளங்கோவனுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டாம் என ஜெயலலிதா கூறிய பின்பும் அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தியுள்ளனர். இதற்காக முதல்வர் ஜெயலலிதா மீதும் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

அரசியல் மட்டுமே
எனக்கு இரண்டு குதிரைகளில் சவாரி செய்ய பிடிக்காது. அதனால்தான் நடிப்பை விட்டு விட்டு அரசியலுக்கு வந்தேன். ஒரே குதிரையில் இப்போது பயணித்து கொண்டிருக்கிறேன்.

ஓட்டுக்குப் பணம்
தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுத்து ஜெயித்து விடலாம் என்று ஆளும்கட்சியினர் நினைத்து கொண்டுள்ளனர். ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள், ஆனால் ஓட்டு மட்டும் எங்களுக்கு போடுங்க மக்களே! என்று முடித்தார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications