அந்தோணியார் கோயில் திறப்பு விழா.. தமிழக மீனவர்களை அனுமதிக்க கோரி பிரதமருக்கு பன்னீர்செல்வம் கடிதம்
அந்தோணியார் கோயில் திறப்பு விழாவில் கட்டுப்பாடு ஏதுமின்றி தமிழக மீனவர்கள் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை: கச்சத்தீவில் நடைபெறும் அந்தோணியார் கோயில் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழக மீனவர்களை அனுமதிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதலமைச்சர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை அரசு சார்பில் கச்சத்தீவில் ரூ.1 கோடி மதிப்பில் புதிய அந்தோணியார் தேவாலயம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா கடந்த மே 8 -ம் தேதி அன்று நடைபெற்றது. இதையடுத்து கட்டுமாணப் பணிகள் நடைபெற்று புதிய கட்டடம் கட்டிமுடிக்கப்பட்டது. கட்டட திறப்பு விழா டிசம்பர் 7-ல் நடைபெறவுள்ளதாக இலங்கை அரசு அறிவித்திருந்தது.

அதற்கான ஏற்பாடுகளை யாழ்ப்பாணம், நெடுந்தீவு மறைமாவட்ட ஆயர்கள் செய்து வந்தனர். இதனிடையே தமிழக முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை காலமானதை அடுத்து தேவாலய புதிய கட்டடத்தின் திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திறப்பு விழா நிகழ்ச்சியில் தமிழக மீனவர்களையும் அனுமதிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதலமைச்சர் பன்னீர்செல்வம் இன்று கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், கச்சத்தீவில் நடைபெறும் புனித அந்தோணியார் கோயில் திருவிழாவில் தமிழக மீனவர்களை அனுமதிக்க வேண்டும். திறப்பு விழாவிற்கு கட்டுப்பாடுகள் ஏதுமின்றி தமிழக மீனவர்கள் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திறப்பு விழாவில் தமிழக மீனவர்கள் கலந்து கொள்ள அனுமதி கிடையாது. அதேபோல இலங்கை பக்தர்களுக்கும் கலந்து கொள்ள அனுமதி கிடையாது என வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.


Click it and Unblock the Notifications
