சட்டசபையை கூட்டாமல் கடந்த முறை போல ஓ.பி.எஸ். "ஓபி" அடிக்க முடியுமா?
சென்னை: தமிழக முதல்வராக 2வது முறையாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு இம்முறை சட்டசபையை கூட்டியாக வேண்டும் என்ற கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
2001-ம் ஆண்டு ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா முதல்வராக நீடிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததால் அவர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் செப்டம்பர் மாதம் 21-ந் தேதி முதல் முறையாக முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார்.
அதன் பின்னர் ஜெயலலிதாவுக்கு சாதகமாக தீர்ப்பு வர மார்ச் 1-ந் தேதி ஓ. பன்னீர்செல்வம் பதவி விலகினார். இந்த இடைப்பட்ட காலத்தில் நவம்பர் மாதம் குளிர்காலக் கூட்டத்தொடர் என்றும் ஜனவரியில் ஆளுநர் உரை என்றும் தமிழக சட்டசபை கூடியிருக்க வேண்டும். ஆனால் முதல்வராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் அப்போது சட்டசபையைக் கூட்டவில்லை. காரணம், சட்டசபையில் அவரை முதல்வர் என்று அழைத்தாக வேண்டும். அது சட்டமன்ற ஆவணங்களில் பதிவாகிவிடும். மேலும் சட்டசபையில் முதல்வரின் இருக்கையிலும் அமர ஓ.பி. விரும்பவில்லை.

பட்ஜெட்டுக்கு முன்பு
இப்போது 2வது முறையாக ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். அடுத்த மாதம் குளிர்கால கூட்டத் தொடர் மற்றும் ஜனவரியில் ஆளுநர் உரைக்கான சட்டசபையை கூட்ட வேண்டிய நிலைமை இருக்கிறது. ஆனால் முந்தைய பதவி காலத்தைப் போல சட்டசபையை கூட்டாமலேயே முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விட்டுவிட நினைக்கலாம்.

ஜெ. வழக்கின் யதார்த்தம்
அதாவது ஜெயலலிதாவுக்கு சாதகமான தீர்ப்பு வந்து விடாதா என்ற நம்பிக்கையோடு சில மாதங்கள்தான் இப்படியும் ஓ.பன்னீர்செல்வத்தால் காலங்கடத்த முடியும். தற்போதைய நிலையில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன்தான் கிடைக்க வாய்ப்பிருக்கிறதே தவிர அவரது தண்டனையை ரத்து செய்யவோ நிறுத்தி வைக்கவோ வாய்ப்பு இல்லை என்பதே யதார்த்தம்.

பட்ஜெட் கூட்டம்..
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர், ஆளுநர் உரை ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் தவிர்த்தாலும் அடுத்த ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்தியாக வேண்டிய நெருக்கடி இருக்கிறது.

ஆபத்தாக முடியும்
மேலும் தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுவதாக எதிர்க்கட்சிகள் புகார் எழுப்புகின்றன. மத்திய அரசும் கண்கொத்தி பாம்பாக தமிழக நிலவரங்களைப் பார்த்து வரும் நிலையில் இப்படி சட்டசபையை நீண்டகாலம் முதல்வரே முடக்கி வைத்திருக்க முடியாது. அதுவும் பட்ஜெட் தாக்கல் செய்யாமல் காலத்தை ஓட்டவும் முடியாது..

ஏற்கெனவே சிக்கல்..
ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்ட நாள் முதலே தமிழகத்தில் அரசு ஒன்று இயங்கவில்லை.. சட்டம் ஒழுங்கு மோசமாகிவிட்டது என்று எதிர்க்கட்சிகள் விஸ்வரூபம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் சட்டசபையையும் நீண்டகாலம் கூட்டாமல் இருந்தால் அது எதிர்க்கட்சிகளுக்கே மிக மிக சாதகமாக அமையும்.

ஓபி அடிக்க முடியாது..
இதனால் கடந்த காலத்தைப் போல சட்டசபையை கூட்டாமல் ஓ.பி.எஸ். "ஓ.பி" அடித்த கதை இந்த முறை செல்லாது என்றே சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications