வாயை திறக்க முடியல.. அப்படியே ஸ்டன் ஆகி உட்கார்ந்துட்டாரே.. முதல்நாளே ஜோசியரால் படாதபாடு பட்ட விஜய்
சென்னை: இன்று தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் விஜய்க்கு எதிராக பல விமர்சனங்கள் வைக்கப்பட்டன. முதலமைச்சரின் தனிப்பணி அதிகாரியாக - ஸ்பெஷல் பணி பிரிவின் கீழ் (OSD) ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டிருந்தது இதில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது.
இந்த விமர்சனங்களுக்கு பதில் அளிக்க முடியாமல் முதல்வர் விஜய் அமைதியாக இருந்தார். ஜோசியர் விவகாரம் இன்று பெரும்பான்மையை நிரூபித்த முதல் நாளே அவருக்கு பெரிய தலைவலியாக இருந்தது.

கடுமையான விமர்சனம்
விஜய் தனது தனிப்பட்ட ஜோதிடராக அறியப்படும் ராதன் பண்டிட் வெற்றிவேலை, அரசாங்கத்தின் முக்கியப் பொறுப்பான OSD பதவியில் அமர்த்தியது ஒரு நவீன கால அரசாங்கத்திற்கு அழகல்ல என்ற விமர்சனம் எழுந்தது. முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரி (Special Officer - Political Wing) பதவி என்பது அரசியல் மற்றும் நிர்வாக ஒருங்கிணைப்பை கவனிக்கும் முக்கிய பொறுப்பாக கருதப்படுகிறது. நிர்வாகம் என்பது கோள்களின் நகர்வுகளால் அல்ல, மாறாக கொள்கைகளின் முடிவுகளால் அமைய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
இன்று தமிழ்நாடு சட்டசபையிலும் நம்பிக்கை கோரும் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் இது தொடர்பாக விவாதம் நடத்தப்பட்டது. பல கட்சியினரும் முதல்வர் விஜயின் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்தனர். இதை தொடர்ந்து தற்போது ராதன் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.
சிதம்பரம் எம்எல்ஏ தமிமுன் அன்சாரி பேசுகையில், ஜோதிடத்தை ஒரு நாடாளும் நபர் நம்பக்கூடாது என்பதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன. அதற்கு ஒரு கதை சொல்கிறேன், பண்டைய சேர நாட்டில், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தார். அவனுக்குச் செங்குட்டுவன், இளங்கோ என இரண்டு மகன்கள் இருந்தனர். மூத்தவர் செங்குட்டுவன் வீரத்தில் சிறந்தவனாக வளர்ந்து வந்தார்.
ஒருநாள், அரண்மனைக்கு வந்த ஒரு ஜோதிடர், இரு இளவரசர்களையும் உற்றுப் பார்த்தார். பின்னர் மன்னனிடம், "அரசே, உங்கள் இளைய மகன் இளங்கோவின் முகத்தில் பேரரசர்க்குரிய லட்சணங்கள் தெரிகின்றன. வருங்காலத்தில் அவரே இந்த நாட்டை ஆளுவார்" என்று கணித்துக் கூறினார்.
மூத்த மகன் இருக்கும்போது தம்பிக்கு முடிசூட்டு விழா நடக்கும் என்ற ஜோதிடரின் பேச்சு, அங்கிருந்தவர்களுக்கு அதிர்ச்சியைத் தந்தது. ஆனால் கட்டம் சரியில்லை என்று ஜோதிடர் உறுதியாக இருந்தார். குறிப்பாக, தன் அண்ணன் செங்குட்டுவன் இதனால் மனவருத்தம் அடைவதை இளங்கோ கவனித்தார். அண்ணன் மேல் இருந்த பாசத்தாலும், முறைப்படி மூத்தவனே அரசாள வேண்டும் என்ற எண்ணத்தாலும் இளங்கோ ஒரு அதிரடி முடிவை எடுத்தார்.
"ஜோதிடர் சொன்னது பலிக்காது. என் அண்ணன் இருக்கும்போது நான் அரசாள மாட்டேன்," என்று கூறி, அங்கேயே தன் இளவரசர் பதவியைத் துறந்தார். அரண்மனை வாழ்வை விட்டு வெளியேறி, ஒரு மடத்தில் சேர்ந்து துறவியாக மாறினார். அவரே 'இளங்கோ அடிகள்' என்று அழைக்கப்பட்டார்.
தம்பியின் தியாகத்தால், செங்குட்டுவன் எந்தச் சிக்கலும் இன்றி சேர மன்னனாகப் பொறுப்பேற்றார். அவர்இமயம் வரை சென்று வெற்றி பெற்று, மிகப்பெரிய வீரனாகத் திகழ்ந்தான். அதே சமயம், துறவறம் பூண்ட இளங்கோ அடிகள், காலத்தால் அழியாத 'சிலப்பதிகாரம்' என்ற காவியத்தைப் படைத்தார். நாட்டை ஆளும் வாய்ப்பை இளங்கோ விட்டுக் கொடுத்தாலும், தமிழ் இலக்கிய உலகின் மன்னராக இன்றும் அவர் போற்றப்படுகிறார். அதே சமயம் ஜோதிடம் புரட்டு என்று இளங்கோவடிகளின் தியாகம் நிரூபித்தது, என்று கடுமையாக குறிப்பிட்டார். ஜோசியர் ஒருவரை அரசு பொறுப்பில் மக்கள் வரிப்பணத்தில் நியமித்ததை மக்கள் பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
வன்னியரசு அட்டாக்
விசிகவின் எம்எல்ஏவும், அக்கட்சியின் சட்டசபை குழுத் தலைவருமான வன்னியரசு பேசுகையில், நமது அரசு, நமது அரசு என குறிப்பிட்டிருந்தார். அப்போது தவெக ஆட்சி 5 ஆண்டுகள் தொடர வேண்டும் என பேசியிருந்தார். வன்னியரசு இந்த அரசுக்கு நீண்ட கோரிக்கையை வைத்திருந்தார். குறிப்பாக மீனவர்களின் துயரத்தை எடுத்துரைத்தார். மேலும் ராதன் பண்டிட்டின் பெயரை சொல்லாமல் மூடநம்பிக்கை ஒழிக்கப்பட வேண்டும். ஜோதிடரை நம்பாதீர்கள் என தெரிவித்திருந்தார்.
ஆஸ்தான ஜோதிடர்கள்' என்பவர்கள் மன்னர்களின் அரசவையில் ஆலோசனை கூறும் ராஜகுருக்களாக வலம்வந்தவர்கள். ஆனால் இன்று மன்னர்களும் இல்லை, மன்னராட்சியும் இல்லை, அவர்களை ஆட்டிப்படைத்த வேதகுப்பைகளும் இல்லை. சனநாயக இந்தியாவின் தந்தையான புரட்சியாளர் அம்பேத்கர் வகுத்தளித்த அரசியலமைப்பு சட்டத்தின் துணையோடு மக்களாட்சி நடைபெறுகிறது.
இன்றைய காலகட்டத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை தலைமையேற்று நடத்தும் முதலமைச்சருக்கு ஆலோசனை கூறும் அரசுப்பதவியில், 'ஹார்ட் அட்டாக் வந்தால் பதற்றப்படாதீர்கள், மந்திரம் சொல்லுங்கள்' 'தலைவிதி இருந்தால் தான் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்கும்' என்று அறிவுரை சொல்லும் நபரை நியமிப்பது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
'அறிவியலார்ந்த உளப்பாங்கு, மனிதநேயம், ஆய்ந்து தெளிந்து சீர்திருத்தும் ஆர்வம் ஆகியவற்றை வளர்த்தல்' ஒவ்வொரு குடிமகனின் கடமையாக இந்திய அரசியலமைப்பு சட்டம் பகுதி 51A (h) வரையறுக்கிறது.
அரசியலமைப்பு சட்டம் பரிந்துரைக்கும் கடமையை குடிமக்கள் மேற்கொள்வதற்கு ஊக்கப்படுத்த வேண்டியது தான் அரசின் தலையாய பணி. 'அறிவியல் மனப்பான்மையை' (Scientific Temper) வளர்த்தெடுக்க வேண்டிய அரசு, முதல்வருக்கே ஆலோசனை சொல்லும் அரசுப் பதவியை அறிவியலுக்கு புறம்பான பிற்போக்கு கருத்துகளை பரப்புவதையே 'தொழிலாக' கொண்டிருப்பவருக்கு வழங்கினால், அது மக்களுக்கு சொல்லும் செய்தி என்னவாக இருக்கும்?
மக்களை இருளில் தள்ளும் பிற்போக்கு, மூடநம்பிக்கைகளுக்கு எதிராக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைமுறையில் உள்ள மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை விரிவாக ஆராய்ந்து தமிழ்நாட்டிலும் அத்தகைய சட்டத்தை கொண்டு வருவது தான் மதச்சார்பற்ற அரசின் பணியாக இருக்க வேண்டும்.
அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமான அறிவியலுக்கு புறம்பான இந்த நியமனத்தை தமிழ்நாடு அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்! என குறிப்பிட்டிருந்தார்.
தேமுதிக பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், "முதலமைச்சராக விஜய் செய்த நல்ல விஷயங்களையும் நாம் பாராட்டி இருக்கிறோம். எதிர்க்கட்சிகளை எதிரி கட்சியாக நினைக்காமல், அனைவரையும் சந்தித்து அரசியலில் ஒரு மாண்பையும், மரபையும் நீங்க ஏற்படுத்தியிருக்கீங்க வரவேற்கத்தக்கது. அதுபோல உங்களுடைய முதல் அறிவிப்பிலேயே பெண்களை பாதுகாக்கவும், மதுக்கடைகளை மூடுவோம் என்று சொன்னதும் மக்களால் வரவேற்கப்பட்டது. முதலில் 717 மது கடைகளை மூடியது ஒட்டுமொத்த தமிழக மக்களால் வரவேற்கப்பட்டது.
இவை அனைத்தையும் தேமுதிக வரவேற்கிறது. இருப்பினும் முதல்வர் அவர்களே நீங்கள் அன்றைக்கு பதவி ஏற்கும்போது உங்களுடைய ஆட்சி வெளிப்படையான ஆட்சியாக இருக்கும், மக்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் ஒரு முன்னுதாரணமான ஆட்சியாக இருக்கும் என்று சொன்னீர்கள்.
ஆனால், வரலாற்று சிறப்புமிக்க இந்த அவையிலே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய தருணத்தில், குதிரை பேரம் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் அனைத்தும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பதை நான் மன வேதனையோடு இங்கு பதிய வைக்கிறேன்.
முதலமைச்சர் அனைவருக்கும் ஒரு வெளிப்படையான ஆட்சி தான் செய்வோம் என்று கூறியிருந்தார். அப்படி இருக்கையில் முதல்வர் அவர்களை சந்திக்க யார் முகத்தை மூடிக்கொண்டு அன்று வாகனத்தில் சென்றார்கள்? என்பதை நிச்சயமாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதை இந்த நேரத்திலே நான் கேட்டுக்கொள்கிறேன்.
அதற்கு காரணம் குதிரை பேரம் என்றால் இதை விட ஒரு தலைகுனிவு இந்த வரலாற்று சிறப்புமிக்க அவையில் எதுவுமே கிடையாது. நிச்சயம் முதல்வர் அதற்கு பதில் சொல்வார் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
அதேபோல அரசு குடும்பத்தில் இருந்து நான் வந்தவன் இல்லை என்று முதல்வர் சொல்லும் பொழுது அனைவரும் வரவேற்றார்கள். ஆனால் இன்றைக்கு உங்களுடைய ராஜகுருவாக இருக்கும் ராதன் பண்டிட் என்பவரை, அரசு சிறப்பு அதிகாரியாக, அரசு வேலையில் அமர்த்தியதை ஒட்டுமொத்த தமிழக மக்கள் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.
அப்படி உங்களுக்கு ராஜகுருவா இருந்தா.. பர்சனலா அவரை வச்சுக்கணும். அரசு உயர் பதவியிலே கொண்டுவந்து, உங்ளை நம்பி வாக்களித்த இளைஞர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புறீங்க? வருங்கால இளைஞர்களுக்கும் எதிர்காலத்திற்கும் இதன் மூலம் என்ன மெசேஜ் நீங்க சொல்றீங்க என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்" என்று பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications