விஜய் ஆக்ஷன் பிளான் என்ன? கோவை மக்களின் முக்கிய கேள்வி.. எல்லாமே இருக்கு.. ஆனா மெட்ரோ!
தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய பொருளாதார நகரமாகவும், வேகமாக வளர்ந்து வரும் நகரமாவும் விளங்கும் கோயம்புத்தூரில் மெட்ரோ ரயில் திட்டம் மீண்டும் அரசியல் மற்றும் நிர்வாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. திமுக ஆட்சியில் கிட்டத்தட்ட 3 வருட போராட்டத்தில் மத்திய அரசிடம் ஒப்புதல் பெற முடியாத நிலையில், இந்த மெகா திட்டத்தின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியானது.
புதிதாக முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அரசு, கோவை மெட்ரோ திட்டத்திற்கு மத்திய அரசின் இறுதி ஒப்புதலை பெறுவது புதிய அரசின் மிக முக்கியமான டார்கெட் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோயம்புத்தூரின் மக்கள் தொகை, தொழில் வளர்ச்சி, ஐடி நிறுவனங்கள், ஏற்றுமதி வர்த்தகம் மற்றும் விமான நிலைய விரிவாக்கம் ஆகியவை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், நகரின் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க மெட்ரோ ரயில் திட்டம் அவசியமான கட்டமைப்பு திட்டமாக மாறியுள்ளது.

ரூ.10,740 கோடி மதிப்பிலான திட்டம்
தமிழ்நாட்டின் இரண்டாம் அடுக்கு நகரங்களுக்கு மெட்ரோ சேவையை விரிவுபடுத்த மாநில அரசு ரூ.60,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருந்தது. அதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூருக்கான மெட்ரோ திட்டம் உருவாக்கப்பட்டது.
சுமார் ரூ.10,740 கோடி மதிப்பிலான கோவை மெட்ரோ திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) 2023 ஜூலை மாதத்தில் தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் 2024 பிப்ரவரி மாதத்தில் மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.
இதன் பின்னர் மத்திய அரசு Comprehensive Mobility Plan (CMP) மற்றும் Alternative Analysis Report உள்ளிட்ட கூடுதல் ஆவணங்களை கோரிய நிலையில், தமிழ்நாடு அரசு அவற்றை 2024 டிசம்பர் மாதத்தில் சமர்ப்பித்தது.
மத்திய அரசு ஏன் மறுத்தது?
இதற்கிடையில் 2025 நவம்பர் மாதத்தில் கோவை மற்றும் மதுரை மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகின. கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்டங்களின் DPR-ஐ மத்திய அரசு திருப்பி அனுப்பியது.
இதற்கான முக்கிய காரணமாக 2017-ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் கொள்கை குறிப்பிடப்பட்டது. அந்த கொள்கையின் படி 20 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்களுக்கு மெட்ரோ திட்ட அனுமதி வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி கோயம்புத்தூரின் மக்கள் தொகை 15.84 லட்சம் மட்டுமே இருப்பதாக மத்திய நகர்ப்புற விவகார அமைச்சகம் குறிப்பிட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனால் கோவை மெட்ரோ திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை என்ற தகவல் பரவியது.
பாரபட்சம் காட்டப்படுகிறதா?
மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டுக்கு அப்போதைய முக.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. 20 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பல வடமாநில நகரங்களுக்கு மெட்ரோ திட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டிற்கு மட்டும் வேறுபட்ட அணுகுமுறை கடைபிடிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதன் காரணமாக கோவை மெட்ரோ விவகாரம் சாதாரண போக்குவரத்து திட்டத்தை தாண்டி அரசியல் விவாதமாகவும் மாறியது.
பீயூஷ் கோயல் விளக்கம்
இந்த விவகாரம் சட்டமன்ற தேர்தல் அரசியலிலும் எதிரொலித்தது. 2026 ஏப்ரல் மாதம் மதுரையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய தொழில்துறை அமைச்சர் பீயூஷ் கோயல் பேசுகையில், "கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துவிட்டது என்ற தகவல் தவறானது" என்று கூறினார்.
மேலும், DPR அறிக்கையில் திருத்தங்கள் செய்யுமாறு மத்திய அரசு கேட்டபோதும், அதனை திருத்தாமல் அரசியல் காரணங்களுக்காக தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
விஜய் அரசின் அடுத்த நடவடிக்கை என்ன?
தற்போது புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், கோவை மெட்ரோ திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலை எவ்வாறு பெறப்போகிறார் என்பது மிகப்பெரிய கேள்வியாக மாறியுள்ளது.
கோவை தற்போது தமிழ்நாட்டின் முக்கிய தொழில், ஏற்றுமதி மற்றும் ஐடி மையமாக வளர்ந்து வருகிறது. அவிநாசி சாலை, சரவணம்பட்டி, நீலாம்பூர், விமான நிலைய பகுதி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நெரிசலும், வாகன போக்குவரத்தும் வேகமாக அதிகரித்து வருகிறது.
இந்த சூழலில் மெட்ரோ திட்டம் தாமதமானால், நகரின் எதிர்கால வளர்ச்சி பாதிக்கப்படும் என்ற அச்சமும் தொழில்துறையினர் மத்தியில் உள்ளது.
நிலம் கைப்பற்றும் பணி தொடர்கிறது..
இந்த விவகாரத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண் இயக்குநர் சித்திக் கடந்த ஜனவரி 2026-ல் முக்கிய விளக்கம் அளித்திருந்தார். "கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்டங்கள் நிறுத்தப்படவில்லை. நிலம் எடுக்கும் முதற்கட்ட பணிகள் முடிவடைந்துள்ளன. மேம்படுத்தப்பட்ட DPR மீண்டும் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
இதன் மூலம் திட்டம் முழுமையாக கைவிடப்படவில்லை என்றும், மத்திய அரசின் இறுதி ஒப்புதலுக்காக காத்திருக்கிறது என்பது தெளிவானது.
கோவை மெட்ரோ திட்டம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது. திட்டம் முழுமையாக செயல்படுத்த சுமார் ஐந்து ஆண்டுகள் வரை ஆகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டு முக்கிய வழித்தடங்கள்
சிவப்பு வழித்தடம் உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து நீலாம்பூர் வரை செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பாதையில் கோவை விமான நிலையம் உட்பட மொத்தம் 18 மெட்ரோ நிலையங்கள் இடம்பெறுகின்றன.
பச்சை வழித்தடம் அவிநாசி சாலை மற்றும் சத்யமங்கலம் சாலையை இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதை கோவையின் முக்கிய வர்த்தக மற்றும் குடியிருப்பு பகுதிகளை இணைக்கும் முக்கிய போக்குவரத்து இணைப்பாக இருக்கும்.
கோவையின் எதிர்கால வளர்ச்சி
கோயம்புத்தூரில் தற்போது விமான நிலைய விரிவாக்கம், புதிய தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள், ஏற்றுமதி வளர்ச்சி மற்றும் ரியல் எஸ்டேட் விரிவாக்கம் ஆகியவை நகரின் பொருளாதாரத்தை வேகமாக மாற்றி வருகிறது.
இந்த வளர்ச்சியை தக்கவைக்க மெட்ரோ திட்டம் மிக முக்கியமான உள்கட்டமைப்பு முதலீடாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக போக்குவரத்து நெரிசலை குறைத்து, வேலைக்கு செல்வோரின் பயண நேரத்தை குறைத்து, நகர வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் திட்டமாக உள்ளது.
இதனால் கோவை மெட்ரோ திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலை பெறுவது, விஜய் தலைமையிலான புதிய அரசின் முதல் பெரிய நிர்வாக மற்றும் அரசியல் சோதனையாக தற்போது மாறியுள்ளது.















Click it and Unblock the Notifications