'காலனி' சொல் நீக்கம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பை வரவேற்று கொண்டாடும் அம்பேத்கர், பெரியாரிஸ்டுகள்!
சென்னை: தமிழ்நாட்டின் ஆதி குடிமக்களான ஆதி திராவிடர்கள் வசிக்கும் பகுதிகளை இழிவாகக் குறிப்பிடும் 'காலனி' என்ற சொல் நீக்கம் செய்யப்படுவதாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதை அம்பேத்கரிய, பெரியாரிஸ்டுகள் வரவேற்றுள்ளனர்.
தமிழக சட்டசபையில் இன்று பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்த மண்ணின் ஆதி குடிகளை இழிப்படுத்தும் அடையாளமாக "காலனி" என்ற சொல் பதிவாகியிருக்கிறது. ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமைக்கான குறியீடாகவும் வசை சொல்லாக மாறியிருப்பதால் இனி இந்த சொல் அரசு ஆவணங்களில் இருந்தும், பொது புழக்கத்திலிருந்தும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என அறிவித்தார்.

தமிழ்நாடு முதல்வரின் இந்த அறிவிப்பை திராவிடர் இயக்கங்கள், தலித் இயக்கங்கள் வரவேற்றுள்ளன.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: புரட்சிக்கவிஞரின் 135 ஆம் ஆண்டு பிறந்த நாளில், இது ஒரு போனஸ் மகிழ்ச்சி அறிவிப்பாகும். எப்படி என்றால், இதுவரையில், அந்த வார்த்தையை, ஒடுக்குமிடம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வைத்திருந்தார்கள். புரட்சிக்கவிஞர் அவர்கள் நம்முடைய இயக்கத்தினுடைய நோக்கம், வாழ்வின் நோக்கம் இரண்டு என்றார். ஒன்று, ஜாதி ஒழிப்பு; இரண்டாவது, தமிழ் வளர்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தமிழ் வளர்க்கின்ற அதே நேரத்தில், ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடித்ததைப்போல, நம்முடைய முதலமைச்சர் அவர்கள், ''இனிமேல் காலனி என்ற சொல் இருக்கக்கூடாது''என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். தொடக்கத்திலிருந்தே, ஆதிதிராவிட மக்களுக்கு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு வீடு கட்டிக் கொடுத்தால்கூட, அதனை ஒதுக்குப் புறத்திலே கட்டிக் கொடுக்கக் கூடாது; எல்லோரும் வசிக்கக்கூடிய இடத்தில் இருக்கவேண்டும் என்ற முத்தமிழறிஞர் கலைஞரின் சிந்தனையின் வெளிப்பாடு தான், நாடெங்கும் கலைஞர் அவர்களாலே உருவாக்கப்பட்ட ''பெரியார் நினைவு சமத்துவபுரம்'' என்ற ஜாதி ஒழிப்பாகும். அதிலே மேலும் ஒரு கூடுதல் (Addition) என்று சொல்லக்கூடிய அளவிற்கு நமது முதலமைச்சரின் இந்த அறிவிப்பு வந்திருக்கிறது. அதற்காக முதலமைச்சர் அவர்களைப் பாராட்டுகிறோம், நன்றி செலுத்துகிறோம், வாழ்த்துகிறோம்! காலனிகள் இல்லை - மனிதர்கள் வசிக்கக்கூடிய குடியிருப்புகள் மட்டுமே இனி உண்டு. இதுதான் திராவிடத்தின் சாதனை! வெல்லட்டும் திராவிடம்! சொல்லட்டும் சரித்திரம்!
ஆதித்தமிழர் பேரவைத் தலைவர் அதியமான்: காலனி என்ற சொல் நீக்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பு, ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மற்றும் பட்டியலின மக்களிடையே மன அளவில் மிகப்பெரிய மாற்றத்தையும், நல்ல எண்ணத்தையும் ஏற்படுத்தும்.
ஆதவன் தீட்சண்யா, பொதுச் செயலாளர், தமுஎகச: காலனி என்கிற சொல்லை நீக்கும் முடிவு வரவேற்கத்தக்கது. ஆனால் காலனிய/சாதிய மனநிலையை எப்படி நீக்குவது? பறையப்பட்டி கவுண்டம்பாளையம் ரெட்டியார்பட்டி நாய்க்கன்கொட்டாய் செட்டியூர் என்றெல்லாம் ஊர்களின் பெயரிலேயே உள்ள சாதியை எப்படி நீக்குவது?
தலித் முரசு ஆசிரியர் புனிதபாண்டியன்: காலனி' என்ற சொல் நீக்கப்பட்டது பாராட்டுக்குரியது. அதேபோல, தலித் மக்களை தாழ்த்தப்பட்டோர் என்று அரசு ஆவணங்களில் குறிப்பிடப்படுவதையும் நீக்க வேண்டும்.
தபெதிக பொதுச்செயலாளர் கோவை கு.ராமகிருட்டிணன்: சாதி ஒழிப்பில் இது ஒரு மைல்கல் அறிவிப்பாகும். இதனை வரவேற்கிறோம்.
அமைச்சர் மனோதங்கராஜ்: கலைஞரின் சமத்துவபுரம் போன்று - திராவிட மாடல் முதல்வரின் காலனி சொல்லாடல் நீக்கமும் வரலாற்றில் நிலைபெறும். மனுஸ்மிருதியின் ஆதிக்கம் நிலைபெற்ற காலத்தில் மக்களை ஜாதியால் பிரித்தாளும் சூழ்ச்சியின் ஒரு வடிவமே இன்று காலனியாக மாற்றப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட ஜாதியின் பெயரால் உழைக்கும் மக்களை தனிமைப்படுத்தி காலனி என்ற சொல்லால் இழிவுப்படுத்தும் அவலம் கொடுமையிலும் கொடுமை. 1929 ல் பெயருக்கு பின்னால் இருந்த ஜாதி பட்டங்களை தந்தை பெரியார் துறந்தார். சாதி, மதம், இனம் என்று எந்தப் பாகுபாடும் கூடாது, அனைவரும் சமம் என்ற அடிப்படையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 1997 ல் பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் உருவாக்கப்பட்டன.
2024 ல் திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிப் பாடத்தில் தலைவர்களுக்கு பின்னால் இருக்கும் ஜாதிய பட்டங்களை எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது திராவிடக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாளில், #காலனி என்ற சொல் தீண்டாமைக்கான குறியீடாகவும், இழிசொல்லாகவும் பயன்படுத்தப்படுவதால் அந்த சொல்லை ஆவணங்களிலிருந்தும், புழக்கத்திலிருந்தும் நீக்கி இருப்பது ஜாதி ஒழிப்பிற்கான மற்றொரு மைல்கல்.












Click it and Unblock the Notifications