உடனே பணிக்கு வர வேண்டும்.. போக்குவரத்து ஊழியர்களுக்கு போன உத்தரவு.. பொங்கல் பஸ் சேவை பாதிப்பு?
சென்னை: போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு வர வேண்டும் என்று தமிழ்நாடு போக்குவரத்துத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளதால், வரும் ஜனவரி 9-ஆம் தேதி முதல் தமிழகத்தில் அரசுப் பேருந்து சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. பொங்கலை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

போராட்டம் ஏன்: சிறந்த ஊதியம் (15வது ஊதிய திருத்த ஒப்பந்தம்), காலியாக உள்ள பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்புதல், அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கும் மாநில அரசின் நிதியுதவி, ஓய்வூதியர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்குதல் உள்ளிட்ட 6 முக்கிய கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ளன. இதை முன் வைத்து தொடர் போராட்டங்களை அவர்கள் அறிவித்துள்ளனர்.
தொழிற்சங்கங்கள் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளுக்கு இடையே சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதில் அதிகாரிகள்) மீண்டும் ஒருமுறை அவகாசம் கோரினர். அவர்களின் பதிலில் நாங்கள் திருப்தி அடையவில்லை, என்று சிஐடியு தலைவர் ஏ சௌந்தரராஜன் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.
உத்தரவு: இந்த நிலையில் தான் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு வர வேண்டும் என்று தமிழ்நாடு போக்குவரத்துத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், வேலை நிறுத்தம் செய்வது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும்.
பணிக்கு வந்து சீரான பேருந்து இயக்கம் அமைய உதவ வேண்டும். ஊழியர்கள் பணி விடுப்பு, மாற்று விடுப்பு, ஈட்டிய விடுப்பு என அனைத்து விதமான விடுப்புகளையும் தவிர்த்து, பணிக்கு வர வேண்டும்
சேம மற்றும் தினக்கூலி பணியாளர்கள் கட்டாயமாக பணிபுரிய வேண்டும் போக்குவரத்து ஊழியர்கள், வரும் 9ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் வேலை நிறுத்தம் அறிவித்திருந்த நிலையில் போக்குவரத்துத்துறை உத்தரவு.
பொங்கல் பாதிப்பு: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு பஸ்களில் ஏற்கனவே முன்பதிவு துவங்கி உள்ளது. பேருந்து முன் பதிவு இணையதளம் வழியாகவும், முகாம் மூலமாகவும் துவங்கி உள்ளது. பொதுவாக நீண்ட விடுமுறை வரும் போதெல்லாம் தமிழ்நாட்டில் சிறப்பு பேருந்துகள் விடப்படுவது வழக்கம். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மக்கள் அதிக அளவில் பயணம் மேற்கொள்வார்கள். சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் வேலை பார்க்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.
இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, பேருந்துகளின் தேவை அதிகரிக்கும். அதிக நெரிசலில் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். சமயங்களில் போதிய பேருந்துகள் இல்லாத காரணத்தால் மக்கள் கஷ்டப்படும் அவலமும் ஏற்படும். இந்த நிலையில்தான் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் தமிழ்நாட்டில் பண்டிகை நாட்களில் இயக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல் தற்போது பொங்கலுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 17 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் பொங்கலை முன்னிட்டு இயக்கப்பட உள்ளன.
புக்கிங் மையங்கள்: பொங்கல் சிறப்பு பேருந்து முன்பதிவுக்கு கோயம்பேட்டில் 10 மையங்களும், தாம்பரத்தில் ஒரு மையமும் செயல்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மையங்களில் நேரடியாக சென்று புக் செய்ய முடியும். உதாரணமாக கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளே 10 மையம் உள்ளது. இங்கே சென்று பணம் கொடுத்து புக் செய்ய முடியும்.
இல்லையென்றால் https://www.tnstc.in/home.html பக்கத்தில் புக் செய்ய முடியும். அதில் லாக் இன் செய்து அல்லது செய்யாமல் விவரங்களை கொடுக்கலாம். செல்ல வேண்டிய இடம் , புறப்படும் இடம், நாள் தேதி குறிப்பிட்டால் பேருந்துகள் காண்பிக்கப்படும். அதில் தேவையான டிக்கெட்டுகளை புக் செய்ய முடியும்.
ஆனால் தற்போது ஸ்டிரைக் காரணமாக பொங்கல் பேருந்து சேவை முடங்கும் வாய்ப்புகள் ஏற்பட்டு உள்ளன.












Click it and Unblock the Notifications