திமுகவுடன் பேச்சுவார்த்தை இல்லை.. ஒரு வாரத்தில் கூட்டணி குறித்து முடிவு: ராஜ்நாத்சிங்
சென்னை: பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் திமுக இடம்பெறுவது குறித்து பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என்றும் தமிழகத்தில் கூட்டணி குறித்து ஒருவாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் பாஜகவின் தேசியத் தலைவர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தல் வியூகங்கள் குறித்து தமிழ் நாளேடு ஒன்றுக்கு ராஜ்நாத் சிங் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
குஜராத் கலவரம் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி எந்த தவறையும் இதுவரை இழைத்ததாக நான் கருதவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சியும், அரசும் நாட்டின் சமூக ஒற்றுமையை சீர்குலைக்கிறது. அவர்கள்தான் மன்னிப்பு கேட்க வேண்டும்.

நாங்கள் யாராவது தவறு இழைத்திருக்கிறோம் எனில் மன்னிப்புக் கோருகிறோம். ஏனென்றால் நாங்கள் எப்போதும் மனிதநேயம் மற்றும் நீதியில் நம்பிக்கை வைத்திருக்கிறோம். இவைதான் எங்கள் அரசியல் கொள்கையின் அடிப்படை அம்சம் ஆகும்.
தமிழ்நாட்டில் கண்டிப்பாக பாரதிய ஜனதா தலைமையில் ஒரு கூட்டணி விரைவில் அமையும். யாருடன் கூட்டணி என்பதை இப்போது கூற முடியாது. ஆனால் கூட்டணி உண்டு.
தி.மு.க.வுடன் கூட்டணி தொடர்பாக இதுவரை பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை. பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் மோடி கருணாநிதி புகழ்ந்து பேசியிருக்கிறார்.. ‘நன்றி திரு.கருணாநிதி அவர்களே'. என் நன்றியை அவருக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் எந்த கூட்டணி அமைந்தாலும் அதனை மிகவும் விரைவாக முடிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர்களிடம் கூறினேன். தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பு ஏதாவது ஒரு கூட்டணி கண்டிப்பாக அமையும். நான் சொல்வதை இன்னும் ஒரு வாரம் என்று குறித்து கொள்ளுங்கள்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடையவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். சில கேள்விகளை தவிர்க்கலாம் இல்லையா?












Click it and Unblock the Notifications