ஆரம்பமே அமர்க்களம்.. தவெக 2ம் ஆண்டு துவக்க விழாவில் குளறுபடி.. நிர்வாகிகளுக்கிடையே தள்ளுமுள்ளு
மாமல்லபுரம்: பூஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெற உள்ளது. இவ்விழாவில் அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் பங்கேற்க உள்ளார். விழா அரங்கில் நுழைய நிர்வாகிகள் முண்டியடித்து வருகின்றனர். பாஸ் வைத்திருந்தும் அறைக்குள் அனுமதிக்காததால் நிர்வாகிகள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரியில் உள்ள நட்சத்திர விடுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா இன்று நடைபெறவுள்ளது. அந்த ரிசார்ட்டில் விழாவுக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் அக்கட்சியின் பொதுச் செயலர் புஸ்ஸி ஆனந்த் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

தவெக கட்சியின் இரண்டாம் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 2,500 க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வருகை தந்துள்ளனர். அதற்கேற்ப முன்னேற்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இன்று காலை 10 மணிக்கு தொடங்கவுள்ள இந்த நிகழ்ச்சி இரவு 8 மணி வரை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. ஈசிஆர் முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சியின் கொடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் பங்கேற்பதற்காக உறுப்பினர்கள் பலருக்கு பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த சொகுசு விடுதியில் 2 ஆயிரம் பேர் மட்டுமே அமர முடியும். ஆனால், ஏராளமான பாஸ் வழங்கப்பட்டுள்ளதால் அரங்கிற்குள் நுழைய நிர்வாகிகள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. விழா நடைபெறும் போர் பாயிண்ட் ரிசார்டின் அரங்கத்தில் இடவசதி குறைவாக இருப்பதால் தொடர்ந்து தொண்டர்கள் நின்றுகொண்டே இருக்கின்றனர். 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே இருக்கை உள்ள நிலையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாஸ் வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
பாஸுடன் வந்தவர்கள் குறிப்பாக மாவட்ட செயலாளர்கள் கூட உள்ளே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். கூடுதல் இருக்கைகளை தொடர்ந்து நிர்வாகிகள் போட்டு வருகின்றனர். ஆனாலும், இடவசதி இல்லாததால் தொடர்ந்து நின்று கொண்டே இருக்கின்றனர். இதனால், அப்பகுதியில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் அரசியல் ரீதியான பல்வேறு முக்கிய முடிவுகளை தவெக விஜய் அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பிரசாந்த கிஷோர் தமிழக அரசியலில் ஒரு சில கட்சிகளுக்கு கடந்த காலத்தில் தேர்தல் வியூகங்களை அமைத்துக் கொடுத்தார். அதேபோல, 2026 தேர்தல் களத்தில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்ற இலக்கோடு பிரசாந்த் கிஷோருடன் நேற்று தவெக தலைவர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார்.
அதுதொடர்பாக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது குறித்து நிர்வாகிகளுடன் தவெக தலைவர் விஜய் பேசவுள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications