தேமுதிகவை திமுக கூட்டணிக்கு கொண்டு வர படாதபாடுபடும் காங்கிரஸ்... வெல்லுமா ராகுல் வியூகம்?
சென்னை: தேமுதிகவை எப்படியாவது திமுக கூட்டணியில் இணைத்துவிட வேண்டும் என்பதற்கான பேச்சுவார்த்தைகளை காங்கிரஸ் கட்சி மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் பாஜக தலைமையில் ஒரு வலுவான அணி அமைந்துவிடக் கூடாது என்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் வியூகத்தின் அடிப்படையில் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
தேமுதிக எடுக்கப் போகும் முடிவில்தான் சட்டசபை தேர்தல் வெற்றி- தோல்வி இருக்கப் போகிறது என்பதை திமுகவும் அதிமுகவும் திடமாக நம்புகின்றன. இதனால் தங்களது அணியில் தேமுதிக இடம்பெற வேண்டும் என்று திமுக விரும்பியது. இதற்காக முறைப்படியான அழைப்பு விடுக்கப்பட்டது.
தேமுதிக தரப்பில் இருந்தும் சிக்னல் கொடுக்கப்பட்டதால் அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. தேமுதிக நிர்வாகிகள், தேமுதிகவின் வேட்பாளர்கள் தேர்வு குழு என பலரும் திமுகவுடனான கூட்டணிதான் சரியானதாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த பேச்சுவார்த்தைகளை எதிர்பார்த்தனர்.

தனித்துப் போட்டி
இப்பேச்சுவார்த்தைகளும் வெற்றிகரமாக நடைபெற்றதால் திமுக தலைவர் கருணாநிதி, பழம் நழுவி பாலில் விழும் என்றார். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என விஜயகாந்த் அறிவித்தார். அவரது மனைவி பிரேமலதாவோ, விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி எனக் கூறி புதிய குழப்பத்தை உருவாக்கினார்.

ஆராவார வரவேற்பு
இப்படி ஒரு அறிவிப்பை தேமுதிக வெளியிட்ட உடனேயே திமுகவுடன் சேராமல் போனது மகிழ்ச்சி என்று பாரதிய ஜனதா மற்றும் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் கூறினர். விஜயகாந்த், பிரேமலதா அறிவிப்பை ஆராவாரத்துடன் வரவேற்கவும் செய்தனர்.

களமிறங்கிய ராகுல்
ஆனால் காங்கிரஸ் மேலிடத்துக்கு தேமுதிகவின் முடிவு கடும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. திமுக- தேமுதிக- காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் அடுத்த லோக்சபா தேர்தலில் கணிசமான இடங்களைக் கைப்பற்றலாம் என கணக்குப் போட்டு வைத்திருந்தது காங்கிரஸ் மேலிடம். இதனால் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியே விஜயகாந்த்துடன் தொலைபேசியில் பேசி, அடுத்த லோக்சபா தேர்தலை முன்வைத்து தற்போது திமுக கூட்டணியில் இணைய வலியுறுத்தியிருக்கிறார். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் தரப்பு தொடர்ச்சியாக தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி அழைப்பு விடுத்து வருகிறது.

துறைமுகத்தார்...
இந்த கோதாவில் அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட துறைமுகத்தாரும் களத்தில் குதித்திருக்கிறார். திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்க வேண்டும் என்பதை விஜயகாந்த்திடம் தொடர்ந்து அவர் வலியுறுத்தி வருகிறாராம்.

அறிவாலயம் நோக்கி தேமுதிக?
இதனால் தேமுதிகவின் தனித்துப் போட்டி என்ற திடமான அறிவிப்பில் அசைவு ஏற்பட்டுள்ளதாம். தேமுதிகவின் இந்த ஊசலாட்டத்தை தொடக்கத்திலேயே நிறுத்த வேண்டும் என்பது அதிமுகவின் ப்ளான். இதனை நிறைவேற்றும் வகையில்தான் தற்போது பாஜக, மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் திடீரென 'தேமுதிக'வுடன் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக அறிவித்து வருகின்றனர்.

கருணாநிதி அதிருப்தி
அதே நேரத்தில் திமுக தலைவர் கருணாநிதியோ, விஜயகாந்த் அவசரப்பட்டு அறிவித்ததால் பழம் நழுவி பாலில் விழும் என்ற தமது கருத்து மிக கேவலமாக விமர்சனத்துக்குள்ளாகிவிட்டது; அவர் இல்லாமலேயே தேர்தலை சந்திக்கலாம் என்கிறாராம். கருணாநிதியின் இந்த கருத்தைத்தான் அண்மையில் பொதுக்கூட்டம் ஒன்றில் திமுக மூத்த தலைவர் துரைமுருகன், திமுக என்பது ஐஸ்கிரீம்; தேமுதிக என்பது செர்ரி பழம் என கூறி விமர்சித்திருந்தார்.

காத்திருக்கும் ஸ்டாலின்
ஆனால் மு.க.ஸ்டாலின் தரப்பு, லோக்சபா தேர்தலில் தேமுதிக நெருங்கி வந்த போது அழகிரி அதை உடைத்தார்; தற்போதும் அப்படியான உள்ளடி வேலைகளைச் செய்வதா? என கொந்தளிக்கிறார்களாம்... அத்துடன் தேமுதிகவுடன் நாம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை; காங்கிரஸ்தானே அழைத்து வருகிறது... அதில் என்ன நட்டம் என்ற கேள்வியையும் ஸ்டாலின் தரப்பு முன்வைக்கிறதாம்.
தேமுதிகவை இழுத்துக் கொண்டு வருவது என்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலின் இந்த வியூகம் என்னவாகப் போகிறது என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications