இது வேற லெவல்.. டிவிட்டர் பறவையை வறுத்து பொறித்து பார்சல் அனுப்பி ஆந்திரா காங்கிரஸ் அதகளம்!
அமராவதி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கை அந்த நிறுவனம் முடக்கியுள்ளதை கண்டித்து ஏதோ ஒரு பறவையை எண்ணெயில் பொறித்து டிவிட்டர் பறவை (twitter bird) என கூறி, பாஜகவுக்கு எதிராக கோஷங்களை ஆந்திர காங்கிரஸ் கட்சியினர் எழுப்பினர்.
டெல்லியில் கடந்த 1ஆம் தேதி தலித் சமூகத்தை சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இதையடுத்து அச்சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த ராகுல் காந்தி, சிறுமியின் தாயுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டிருந்தார்.
போக்ஸோ சட்டப்படி, பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்ட சிறுமி, அவரின் குடும்பத்தினர் குறித்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதோ, பத்திரிகை, தொலைக்காட்சிகளில் வெளியிடுவதோ குற்றமாகும்.

தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம்
இது தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் ட்விட்டர் நிறுவனத்துக்கு கடிதம் எழுதி ராகுலின் கணக்கு மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியது. இதைத் தொடர்ந்து டிவிட்டர் நிறுவனமே அந்த புகைப்படத்தை நீக்கியது. பின்னர் ராகுலின் ட்விட்டர் கணக்கையும் முடக்கிவைத்தது. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

காங்கிரஸ் கட்சியினர்
இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் வித்தியாசமான முறையில் தங்களது எதிர்ப்பை காட்ட முயன்றனர். அதன்படி இன்றைய தினம் ஒரு டேபிளில் அடுப்பை வைத்தனர். ஒரு கடாயில் எண்ணெய்யை ஊற்றி ஏற்கெனவே தயார் நிலையில் வைத்திருந்த சிறிய பறவையை போட்டு வறுத்தனர்.

ஆந்திரா காங்கிரஸ் கண்டனம்
இதை முன்னாள் எம்பி ஹர்ஷகுமாரின் மகன் செய்தார். அவர் கூறுகையில் இந்த கண்டனத்தை ஆந்திர காங்கிரஸ் கட்சியினர் தெரிவிக்கிறார்கள். இதுதான் ட்விட்டர் பேர்டு என கூறி சிரித்த அந்த நபர் ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கை முடக்கி நிறுவனம் தவறிழைத்துவிட்டது. அவரது ட்வீட்களை சரி வர பிரசுரிப்பதும் இல்லை.

டிவிட்டர் பறவை
இதனால் நாங்கள் இந்த டிவிட்டர் பேர்டை வறுத்து அதை குர்கான் மற்றும் டெல்லி தலைமையகத்திற்கு பார்சல் அனுப்புகிறோம் என கூறி மசாலா தடவி வைக்கப்பட்டிருந்த பறவைகளை பொறித்து எடுத்தார். அப்போது பாஜகவுக்கு எதிராக கோஷமிட்டனர். பின்னர் பொறித்த பறவைகளை நன்றாக பெட்டியில் பேக் செய்தனர்.

கொரியர் மூலம் டிவிட்டர்
அதை டிவிட்டரின் தலைமையகத்திற்கு கொரியர் மூலம் அனுப்பி வைத்தனர். அது என்ன பறவை என தெரியவில்லை, காடையாக இருக்கலாம் என சிலர் சொல்கிறார்கள். இது போல் ஆந்திர காங்கிரஸ் கட்சி நூதனமாக செய்வது இது முதல் முறையல்ல. கடந்த 2015 ஆம் ஆண்டு தீபாவளி ராக்கெட்டுகளை புறாவில் வைத்து கட்டி அதற்கு நெருப்பு வைத்தார்கள். இந்த சம்பவம் மேற்கு கோதாவரி மாவட்டம் கொவ்வுருவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications