திமுக வுக்கு பிஷப் கவுன்சில் ஆதரவு- வில்லங்கமாகிறது விவகாரம்

Subscribe to Oneindia Tamil

-ஆர்.மணி

வரும் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தரப் போவதாக தமிழ் நாடு பிஷப் கவுன்சில் வெளிப்படையாக அறிவித்து விட்டது. பிஷப் கவுன்சில் தலைவரும், மதுரை ஆர்ச் பிஷப்புமான அந்தோனி ப ப்புசாமி இது தொடர்பாக மே 3 ம் தேதி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மாநிலத்தின் மதச் சார்பற்ற, ஜனநாயக பண்புகளை காப்பாற்றும் பொருட்டு இந்த முடிவினை தாங்கள் எடுத்திருப்பதாகக் கூறியிருக்கிறார். ‘'இந்த முடிவின் காரணமாக இந்தக் குறிப்பிட்ட கட்சிகள் சுத்தமானவர்கள் என்று நாங்கள் கூறவரவில்லை... மாறாக இருப்பவர்களில் இவர்கள்தான் குறைந்த தீமையைக் கொண்டவர்கள் என்பதனால்தான் இந்த முடிவினை எடுத்திருக்கிறோம்'' என்கிறார். பிஷப் கவுன்சிலின் இந்த முடிவு அந்தந்த குறிப்பிட்ட சர்ச்சுகளில் உரிய நேரத்தில் தெரிவிக்கப் படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

தங்களுடைய முக்கியமான கோரிக்கைகளாக பிஷப் கவுன்சில் வைப்பது, தலித் கிறிஸ்த்துவர்களை தாழ்த்தப் பட்டவர்கள் பட்டியலில் சேர்ப்பதற்கான சட்டமன்றத் தீர்மானம், மிகவும் பிற்படுத்ப் பட்டோர் சமூகத்திலிருந்து (எம்பிசி) கிறிஸ்த்துவ மதத்திற்கு மாறியவர்களை எம்.பி.சி பட்டியிலுக்கு உட்பட்ட ஜாதிகளில் சேர்ப்பதற்கான அரசாணை, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் குறைந்தது 10 சதவிகிதத்தினர் கிறிஸ்த்துவ சமூகத்திலிருந்து வர வேண்டும், சிறுபான்மையினர் நடத்தும் நிறுவனங்களுக்கு விதிக்கப் படும் சொத்து வரி ரத்து செய்யப் பட வேண்டும், மதவாத சக்திகளிடமிருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் மற்றும் பூரண மதுவிலக்கு ...

கடந்த பல வாரங்களாகவே பிஷப் கவுன்சிலுக்கும் திமுக வுக்கும் பேச்சு வார்த்தை நடை பெற்று வந்திருக்கிறது. இந்த குறிப்பிட்ட அமைப்புடன் சம்மந்தப் பட்ட பல்வேறு சர்ச்களும் நடத்திய பேச்சு வார்த்தைகளின் அடிப்படையில் கோரிக்கைகள் முறைப்படி தொகுக்கப் பட்டிருக்கின்றன. இது கத்தோலிக்க பிஷப்புகளின் அமைப்பாக இருந்தாலும் மற்றோர் முக்கியமான பிரிவான சிஎஸ்ஐ அமைப்புடன் பேச்சு வார்த்தை நடைபெற்றிருக்கிறது. செவ்வாய் கிழமை மதுரை சென்றிருந்த திமுக தலைவர் மு.கருணாநிதியை மதுரை ஆர்ச் பிஷப் சந்தித்தார். அப்போது திமுக வுக்கு ஆதரவு தருவதென்ற முடிவு பிஷப் புகள் தரப்பில் இறுதி செய்யப் பட்டதாக மதுரை ஆர்ச் பிஷப் புடன் தொடர்புள்ளவர்கள் கூறுகின்றனர்.

Controversy erupts over Bishop's Council support to DMK

ஒவ்வோர் தேர்தலின் போதும் சர்ச் ஒரு அரசியல் நிலைப்பாட்டை எடுத்து வந்திருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது மதச் சார்பற்ற சக்திகளுக்கு வாக்களிக்குமாறு வெளிப்படையாகவே கோட்டார் சர்ச் அறை கூவல் விடுத்தது. ஆனால் 2011 சட்டமன்றத் தேர்தலின் போது - 2ஜி மற்றும் ஈழ விவகாரத்தால் - யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை அவரவர் முடிவு செய்து கொள்ளலாம் என்று நடுநிலையானதோர் நிலைப் பாட்டை எடுத்து விட்டது.

இந்த முறை வெளிப்படையாகவே திமுக ஆதரவு நிலைப்பாட்டை மதுரை ஆரச் பிஷப் எடுத்திருப்பது கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறது. ‘'இது போன்று கடந்த காலங்களில் நடைபெற்றதில்லை... அப்பட்டமாக மதத்தின் பெயரால் ஒரு கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கப் படுகிறது... இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 123 ன் கீழ் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப் படக்கூடிய குற்றம். இரண்டாவது இந்த செய்தியை பார்த்தாலே இது பெய்டு நியூஸ் என்பது தெரிகின்றது. இதற்காகவும் சம்மந்தபட்ட அந்தக் குறிப்பிட்ட பத்திரிகை மீது தேர்தல் ஆணையத்தில் புகார்கள் தெரிவிக்கலாம். வழக்கும் போடலாம். நாங்கள் இந்த விவகாரத்தை மிகவும் சீரியசாக எடுத்துக் கொண்டுள்ளோம்'' என்று ஒன் இந்தியா விடம் கூறினார் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், கத்தோலிக்கர்களுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் அமைப்பின் (Forum for Catholic Unity) ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான எம்.ஜி. தேவசஹாயம்.

இந்த குறிப்பிட்ட மதுரை பிஷப்புக்கு தமிழ் நாட்டு கிறிஸ்த்துவர்கள் மத்தியில் 001 சதவிகிதம் கூட ஆதரவு இல்லை என்று கூறும் தேவசஹாயம் இது போன்ற முடிவுகள் பாரதூரமான விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்தும் என்கிறார். ‘'இது அப்பட்டமான ஒரு அரசியல் முடிவு, அரசியல் தலையீடு. நீங்கள் மதத்தின் பெயரால் வாக்கினை கேட்கிறீர்கள், ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவை கொடுக்கிறீர்கள். இதற்கு சட்டத்தில் இடமில்லை. மேலும் பெரும்பான்மை மதத்தினை சார்ந்தவர்கள் மத்தியில் இது போன்ற ஆதரவு எதிர்மறையான விளைவுகளைத் தான் ஏற்படுத்தும். தங்களது முடிவை, அறிவிப்பை மதுரை பிஷப் திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் நாங்கள் உரிய இடங்களுக்கு எங்களது மேல் முறையீட்டை கொண்டு செல்லுவோம். பெய்டு நியூஸ் சம்மந்தமாகவும் தேர்தல் ஆணையத்துக்கு அந்தக் குறிப்பிட்ட பத்திரிகைக்கு எதிராக போகப் போகிறோம்'' என்று மேலும் கூறுகிறார் தேவசஹாயம்.

இது அபாயகரமான போக்கு என்று விவரிக்கும் வேறு சிலர் இதன் மூலமாக சமூக நல்லிணக்கம் கெடுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகின்றன என்றும் எச்சரிக்கின்றனர். ‘'வளர்ந்து வரும் மதவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் எல்லோரும் சிறுபான்மையினர் உட்பட இணைந்தே போராட வேண்டும். இது போன்று தேர்தல் காலத்தில் ஒரு குறிப்பிட்ட மத பிரிவைச் சார்ந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவு என்று கூறுவது எதிர்மறைவான விளைவுகளை பெரும் பான்மை சமூகத்தில் ஏற்படுத்தி விடும் ஆபத்து இருக்கிறது. கேரளாவில் பெரும்பாலான சர்ச்சுகளில் இது போன்ற அறிவிப்புகள் தேர்தல் காலங்களில் வெளியாகின்றன. டில்லியின் ஜூம்மா மஸ்ஜித் இமாம் இது போன்ற அறிவிப்புகளுக்குப் பெயர் போனவர். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் இது போன்ற அறிவிப்புகளால் அந்தந்த குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் அப்படியே வாக்குகளை செலுத்தினார்களா என்பதல்ல, மாறாக இது போன்ற அறிவிப்புகள் எத்தகைய அளவுக்கு பெரும்பான்மை மதவாதம் வளர தூண்டு கோலாக இருந்தது என்பதுதான் என்றே எச்சரிக்கிறார் ஃப்ரண்டுலைன் ஆங்கில இதழின் ஆசிரியர் ஆர்.விஜயஷங்கர்.

ஆனால் ஒரு சில அரசியல் பார்வையாளர்கள் பிஷப்புகளின் முடிவில் எந்த தவறும் இல்லை என்கின்றனர். ‘'இன்று எல்லா அரசியல் கட்சிகளிலும் வேட்பாளர்கள் ஜாதி, மத அடிப்படையில்தான் தேர்வாகின்றனர். ஒவ்வோர் சர்ச்சிலும், பள்ளிவாசலிலும் தேர்தல் நேரத்தில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது பற்றி விவாதங்கள் நடக்கின்றன. இதில் எந்தத் தவறும் இல்லை. இன்று வெளிப்படையாக பிஷப் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார். எஸ்றா சற்குணம் ஏற்கனவே வெளிப்படையாக திமுக கூட்டங்களில் பேசிக் கொண்டிருக்கிறார். அரசியலில் மதத்தை கலக்கக் கூடாதென்று நம்முடைய அரசியல் சாசனம் சொல்லியிருப்பதே தவறு என்பதுதான் எனது பார்வை. யாவரும் அறிந்த இன்றைய நடைமுறை ஜாதியும், மத மும் அரசியலில் இரண்டற கலந்து இருப்பதுதானே? என் கருத்து எல்லா ஜாதிக்கும், மதத்திற்கும் பொருந்தும் தான்'' என்று கூறுகிறார் வலது சாரி சிந்தனையாளரும், எழுத்தாளருமான பத்ரி சேஷாத்திரி....

இருந்த போதிலும் பெரும்பாலான அரசியல் பார்வையாளர்கள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்களின் கருத்து பிஷப் கவுன்சிலின் முடிவு அபாயகரமானது என்பதுதான். ‘'இது ரொம்பவும் தவறானது. அந்தந்த சமூகத்திற்குள் இருக்கும் தனி நபரின் தேர்வு உரிமையை அதாவது சாய்ஸ் ஸை இது கிள்ளி எறிந்து விடுகிறது. கிறிஸ்த்துவ சமூகத்திற்குள் திமுக, அஇஅதிமுக, மநாகூ ஏன் பாஜக வுக்கு வாக்களிப்பவர்கள் கூட இருப்பார்கள். அவர்களது தேர்வு உரிமையை இது அழிக்கிறது. ஒவ்வோர் தேர்தலின் போதும் கடற்கரையோர கிராமங்களில் மறைமுக மாக கடைசி நேரத்தில் நடப்பது இப்போது வெளிப்படையாக நடக்கத் துவங்கியிருக்கிறது. பிஷப்புகளின் வேலை இது கிடையாது. ஆனால் உள்ளூர் சர்ச் சொன்னால் அதனை மீறி சாதாரணமாக சம்மந்தப்பட்டவர்கள் வாக்களிப்பதில்லை. மற்றோன்று நன்றாக கட்டமைக்கப் பட்ட கிறிஸ்த்தவம் போன்ற மதங்களில் (organized religions)இருக்கும் இந்த கட்டுப்பாடான போக்கு, கட்டமைக்கப் படாத (un organized religions) ஹிந்து மதங்கள் போன்ற மதங்களில் இல்லை. ஒரு சங்கராச்சாரியாரோ அல்லது ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரோ சொன்னால் ஹந்துக்கள் அப்படியே வாக்களித்து விட மாட்டார்கள்.

இதனை விட முக்கியமானது இது போன்ற ஆதரவுகளால் உருவாகும் பெரும்பான்மை சமூகத்தின் எதிர்வினைகள்'' என்று எச்சரிக்கிறார் எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான ஆழி. செந்தில்நாதன்.

இதனிடையே பிஷப் கவுன்சிலின் முடிவு பாஜக வை குஷிப் படுத்திக் கொண்டிருக்கிறது. ‘'எவர் ஒருவருக்கும். எந்த ஸ்தாபனத்துக்கும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று முடிவு செய்யவும் அதனை பிறருக்கு சிபாரிசு செய்யவும் உரிமை உண்டுதான். ஆனால் ஒரு கிராம பூஜாரிகள் சங்கமோ அல்லது வேறு அமைப்போ பாஜக வுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறினால் அதனை மத வாதம் என்று கூக்குரலிடுபவர்கள் இப்போது ஏன் மெளனியாக இருக்கிறார்கள்? பாஜக வுக்கு எதிராக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் வாக்களிக்க வேண்டும் என்று வெளிப்படையாகவே அறிவிப்பது பச்சையான மதவாத அரசியல் அறைகூவல்... ஆனால் அதற்கு எதிராக பெரும்பான்மை சமூகத்தினர் பாஜக வுக்கு ஆதரவாக அணி திரண்டால் அது மதவாத அரசியல்... என்னே உங்கள் நியாயம்?'' பிஷப் கவுன்சிலின் இந்த முடிவு தென் மாவட்டங்களில் பாஜக வின் வெற்றி வாய்ப்பை பிரகாசமாக்கியிருக்கிறது'', என்று உற்சாகமாக ஒன் இந்தியா விடம் கூறினார் பாஜக வின் தமிழக பொருளாளர் எஸ்.ஆர். சேகர்.

எதையோ பிடிக்கப் போய் அது எதுவாகவோ ஆனது என்று ஒரு பழமொழி உண்டு... அது போல கருணாநிதி தன்னுடைய குறுகிய அரசியல் லாபங்களுக்காக செய்யும் காரியங்கள் இன்று ஏற்கனவே தமிழகத்தில் கால் பதித்து விட்ட புதிய அபாயங்களை மேலும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை... திமுக தலைவர் நடத்திக் கொண்டிருக்கும் வாக்கு வங்கி அரசியல் அவரை மீண்டும் அரியணையில் அமர்த்தப் போகிறதோ இல்லையோ அது நமக்கு இப்போதைக்கு தெரியாது. ஆனால் இந்த அவல அரசியலுக்கு தமிழகம் கொடுக்கப் போகும் விலை மிகவும் அதிகமானதாக இருக்கப் போகிறது. இதுதான் மறுக்க முடியாத ஒரே உண்மை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+