ரூ.80 கோடி சிலை திருட்டு வழக்கு: பெங்களூரில் சென்னை சப் இன்ஸ்பெக்டர் கைது
சென்னை: ரூ. 80 கோடி ரூபாய் சிலை திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் பெங்களூருவில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வந்தவாசி அருகே உள்ள சவுந்தர்யபுரத்தில் இருக்கும் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 3 சிலைகளும், பையூர் என்ற கிராமத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் 3 சிலைகளும் கடந்த ஜனவரி மாதம் திருடு போனது. அதே ஜனவரி மாதம் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகே இருக்கும் ராமானுஜபுரத்தில் உள்ள மணிகண்டேஸ்வரர் கோவிலிலும் சிவன், பார்வதி சிலைகள் திருட்டு போனது.

ரூ.80 கோடி மதிப்புள்ள இந்த சிலைகளை, சிலை திருட்டு தடுப்பு போலீசார் மீட்டனர். இந்த சிலைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் வழக்கில் தொடர்புடைய சினிமா தயாரிப்பு நிர்வாகி தனலிங்கம், சென்னை அரசு அச்சக ஊழியர் கருணாகரன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டனர்.
சினிமா இயக்குநர் கைது
பிரபல சினிமா டைரக்டர் வி.சேகர் இந்த சிலை திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. சிலைகள் திருடுவது சம்பந்தமாக நடத்திய சதி திட்டத்தில் வி.சேகருக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் திருடப்பட்ட சிலைகளை டைரக்டர் வி.சேகர் வசிக்கும் வீட்டில்தான் மறைத்து வைத்திருந்ததும் அம்பலமானது. இதனால் வி.சேகரை சிலை திருட்டு போலீசார் கைது செய்து புழல் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் போலி பெண் நிருபர் மாலதியும்,35 கைதானார்.
சப் இன்ஸ்பெக்டர் கைது
இதற்கிடையில் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த சென்னை போலீஸ் சப்.இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், மாரி என்ற மாரிசன், கோகுல் ஆகிய 3 பேரை பெங்களூரில் வைத்து கர்நாடக மாநிலம் உப்பரப்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர். உப்பரபேட்டையில் ரூ.30 லட்சம் நகை கொள்ளை அடித்த வழக்கில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பெங்களூரு சிறையில் இவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரையும், தமிழக சிலை திருட்டு தடுப்பு போலீசார் விரைவில் சென்னை அழைத்து வர உள்ளனர்.
சதித்திட்டம்
மாரியும், கோகுலும் சிலையை கோவில்களில் இருந்து திருடி வந்தவர்கள் ஆவார்கள். அவர்களை போலீசார் பிடித்து விட்டார்கள் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது குறிப்பிடத்தக்கது. ரவிச்சந்திரன் சென்னையில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்தவர். தற்போது அவர் பணி இடைநீக்கத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இவர் சிலை திருட்டு சதித்திட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர் ஆவார்.
போலி விஞ்ஞானி
இந்த வழக்கில் திங்கட்கிழமையன்று சிலை திருட்டு தடுப்பு போலீசார் சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலை திருவீதிஅம்மன் கோவில் தெருவைச்சேர்ந்த ஜாய்சன் சாந்தகுமார், 35 என்பவரை கைது செய்தனர். இவர் சென்னை ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக வேலை பார்ப்பதாகவும், தனக்கு வெளிநாடுகளில் நிறைய தொடர்பு இருப்பதாகவும், அதன் மூலம் சிலைகளை கடத்திச்சென்று வெளிநாடுகளில் விற்பதற்கு உதவி செய்வதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் இவர் போலி விஞ்ஞானி என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
8 பேர் கைது
சிலை திருட்டு சதி திட்டத்தில் இவருக்கும் பங்கு உள்ளது. ராணுவ ஆராய்ச்சி மையம் எதிலும் இவர் வேலை பார்க்கவில்லை என்பதையும் போலீசார் கண்டுபிடித்து விட்டனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுவரை 8 பேர் இந்த வழக்கில் கைதாகி இருக்கிறார்கள். சிலை கடத்தல் கும்பல் தலைவனும், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியுமான ஜெயக்குமாரை விரைவில் கைது செய்வோம், என்று சிலை திருட்டு தடுப்பு போலீசார் செய்தியாளர்களிடம் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications
