பஞ்சு லாரியில் தீ - கவனிக்க தவறிய டிரைவர் - 2 குடோன்கள் சாம்பல்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் கழிவு பஞ்சு ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்தது. இதனால் இரண்டு குடோன்கள் எரிந்து பல லட்சம் நாசம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்தவர் பெருமாள்சாமி. சொந்த லாரி வைத்து் தொழில் செய்து வந்தார். அதிகாலை 3 மணி அளவில் தனது லாரியில் கழிவு பஞ்சு மூடைகளை ஏற்றி கொண்டு விஎம்எஸ் நகரிலிருந்து நெல்லை மாவட்டம் வள்ளியூரில் இறக்குவதற்காக புறப்பட்டார்.
பஞ்சு மூடை என்பதால் லாரியில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி இருந்தார். லாரி ஒரு குறுகலான சந்து வழியாக வரும் போது மேலே சென்ற மின்வயரில் உரசியுள்ளது. இதனால் குபீரென தீப்பிடித்துள்ளது. இதை பெருமாள்சாமி கவனிக்காமல் தொடர்ந்து ஓட்டி வந்துள்ளார்.
பஞ்சு மூ்ட்டைகள் தீப்பிடித்து அவை தொடர்ந்து ரோட்டில் விழுந்து கொண்டே வந்துள்ளன. நகருக்கு வெளியே வந்த போது குறிஞ்சிநகர் கண்ணன் என்பவரது குடோன் முன்புறம் தீப்பற்றிய பஞ்சு மூட்டை விழுந்துள்ளது. அந்த சமயம் காற்று பலமாக வீசி கொண்டிருந்தால் அங்கிருந்த மூங்கில் கம்புகள் தீயால் வெடித்து சிதறின.
இதில் அருகிலுள்ள மற்றொரு குடோனிலும் தீப்பிடித்தது. அங்கு சணல் சாக்கு மற்றும் பிளாஸ்டிக் சாக்குகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றிலும் தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கின. காற்றின் வேகத்தால் அடுத்துள்ள தும்பு என்பவரது குடோனிலும் தீப்பிடித்துள்ளது.
இதற்குப் பிறகுதான் பெருமாள் சாமிக்கு லாரியில் தீப்பிடித்த விவரமே தெரிய வந்தது. உடனடியாக லாரியை நிறுத்திய அவர் தீயை அணைக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கோட்ட தீயணைப்பு அதிகாரி பாலசுப்பிரமணியன் தலைமையில் டவுன், சிப்காட், துறைமுகம், ஸ்டெர்லைட் ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வண்டிகள் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்க வீரர்கள் கடுமையாக போராடினர். தீ அதிக உயரம் கொளுத்து விட்டு எரிந்ததால் தீயை அணைக்க முடியவில்லை.
இன்று காலை 6 மணிக்குதான் தீயை முற்றிலுமாக அணைக்க முடிந்தது. இதில் பல லட்சம் மதிப்பிலான வைக்கோல், டயர், கம்புகள், சாக்குகள் எரிந்து நாசமாயின.


Click it and Unblock the Notifications
