இந்தியாவின் செவ்வாய் பயணம்... நாளை செவ்வாய்க்கிழமையன்று ஏவப்படுகிறது மங்கள்யான்
சென்னை: மங்கள்யான் விண்கலம் செவ்வாய்கிரகத்துக்கு நாளை தனது பயணத்தைத் தொடங்குகிறது. விண்கலம் ஏவுவதற்கான கவுண்டன் நேற்று காலை 6:08 மணிக்கு கவுண்டன் தொடங்கியது.
செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யான் விண்கலம் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஏவப்படுகிறது. செவ்வாய் கிரகத்தரையின் மேற்பரப்பு குறித்தும், அங்கு மீத்தேன் வாயு உற்பத்தி ஆகும் இடம் குறித்தும் ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் சதிஸ்தவான் ராக்கெட் தளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி- சி25 ராக்கெட் மூலம் மங்கள்யான் விண்கலத்தை நாளை பிற்பகல் 2.36 மணிக்கு ஏவுகிறது.
ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் தளத்தில் 2 ராக்கெட் ஏவுதளங்கள் உள்ளன. அவற்றில் முதல் ஏவுதளத்தில் இருந்து மங்கள்யான் விண்கலம் செவ்வாய்கிரகத்துக்கு ஏவப்படுகிறது.

செவ்வாய் ஆராய்ச்சி
சூரியனைச் சுற்றிவரும் மூன்றாவது கிரகம், பூமி. நான்காவது கிரகம், செவ்வாய். சிவப்பு கிரகமான செவ்வாய் கிரகத்தை பற்றி ஆராய்வதில் உலக நாடுகள் மிகுந்த ஆர்வம் கொண்டு உள்ளன.பூமிக்கு அடுத்தபடியாக, செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுவதே இதற்கு காரணம் ஆகும்.

போர்க்கடவுள்
ஆங்கிலத்தில் 'மார்ஸ்' என்றால் போர்க் கடவுள் என்று பொருள். யுத்தம், கோபம், ரத்தம் இவற்றின் குறியீடாக விளங்கும் செந்நிறத்தில் தகதகக்கும் கிரகத்துக்கு, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் புராணங்கள் அங்காரகன், செம்மீன், செவ்வாய் என்று பெயர் சூட்டியுள்ளன.

பூமி – செவ்வாய்
பூமிக்கும் செவ்வாய்க்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. பூமி ஒருமுறை தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணி நேரம் பிடிக்கும்; செவ்வாய்க்கு 24 மணி நேரமும் 37 நிமிடங்களும் பிடிக்கும். பூமி, தன் சுற்றுப்பாதையில் ஒருமுறை சூரியனைச் சுற்றிவர 365 நாட்கள் ஆகும்; செவ்வாய்க்கு 687 நாட்கள் தேவைப்படும்.
செவ்வாய் கிரகத்தின் பரப்பில் கரியமில வாயு 97 சதவிகிதம், பிராண வாயு 0.13 சதவிகிதம் என்ற அளவில் உள்ளன. பூமியில் நைட்ரஜன் 77 சதவிகிதமும் பிராண வாயு 21 சதவிகிதமும் உள்ளன.

விண்வெளி ஆராய்ச்சி
சந்திரனை பற்றி ஆய்வு செய்வதற்காக ‘சந்திரயான்' விண்கலத்தை ஏவி அதில் வெற்றி கண்ட இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ), அடுத்த கட்டமாக செவ்வாய்கிரகத்தை பற்றி ஆராய்வதற்காக ‘மங்கள்யான்' என்ற விண்கலத்தை அனுப்புகிறது.

ரூ.450 கோடி செலவில்
இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தை சுற்றியபடி அந்த கிரகத்தின் மேற்பரப்பு பற்றியும், அங்கு மீத்தேன் வாயு இருக்கிறதா? என்பது பற்றியும் ஆய்வு செய்து தகவல்களை அனுப்பும்.
1,350 கிலோ எடை கொண்ட மங்கள்யான் விண்கலத்தில் 14.49 எடைகொண்ட ஆராய்ச்சி கருவிகள், புகைப்பட கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. விண்கலம் தயாரிப்பு மற்றும் விண்கலத்தை ஏவுவதற்கான மொத்த திட்ட செலவு ரூ.450 கோடி ஆகும்.

மணிக்கு 25000 கி.மீ
அக்டோபர் 2-ம் தேதி அதிகாலை, பெங்களூரூ 'இஸ்ரோ'விலிருந்து பலத்த பாதுகாப்புடன், விண்கலம் சாலை வழியாக தன் முதல் பயணத்தைத் தொடங்கியது. 345 கி.மீ. தொலைவில் ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்துக்கு, மணிக்கு சுமார் 10 கி.மீ. வேகத்தில் அது பயணித்துப் பத்திரமாக வந்து சேர்ந்தது. சாலை வழியாக 10 கி.மீ. வேகத்தில் பயணம் செய்த விண்கலம், விண்வெளியில் மணிக்கு 25,000 கி.மீ. வேகத்தில் பறக்க இருக்கிறது!

செவ்வாய்க்கு விண்கலம்
செவ்வாய் கிரகத்தை பற்றி ஆய்வு செய்வதற்காக ஏற்கனவே அமெரிக்கா, ரஷியா ஆகிய நாடுகள் விண்கலத்தை அனுப்பி உள்ளன. ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமும் ஒரு விண்கலத்தை அனுப்பியுள்ளன. இவற்றில் ஜப்பானும் சீனாவும் தோல்வி அடைந்துவிட்டன.

இந்தியா சாதனை
விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வரும் இந்தியாவும், இப்போது செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்ப இருக்கிறது.
இந்தியா செவ்வாய்க்கு அனுப்பும் விண்கலத் திட்டம் வெற்றி பெற்றுவிட்டால், வெற்றிபெற்ற நான்காவது நாடு என்ற பெருமையும், ஆசியாவின் முதல் வெற்றி நாடு என்ற பெருமையும் கிடைக்கும்!.

சுப்பையா அருணன்
செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் திட்டத்தின் திட்ட இயக்குநர் சுப்பையா அருணன், திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரை ஒட்டிய கோதைச்சேரி கிராமத்தில் பிறந்தவர். மனைவி கீதா, பெங்களூரூவில் நேஷனல் பப்ளிக் பள்ளியில் ஆசிரியை. மகள் ஸ்ருதி அருணன், பெங்களூரூவில் எம்.பி.பி.எஸ். மாணவி. அருணனின் தாயார் மாணிக்கம், ராக்கெட் உளவு வழக்கில் சிக்கி, நிரபராதி என்று விடுதலைசெய்யப்பட்ட பிரபல இஸ்ரோ விஞ்ஞானியான நம்பி நாராயணனின் மூத்த சகோதரி. அருணனின் மனைவி கீதா, நம்பி நாராயணன் - மீனா தம்பதியரின் மகளாவார்.

பூமியை பாதுகாக்கும்
ஒருகாலத்தில் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. காலக்கிரமத்தில் சுற்றுச்சூழல் மாசுபட்டு, அங்கு உயிரினம் வாழமுடியாத நிலை ஏற்பட்டதாகத் தெரிகிறது. பூமியிலும் நாம் பல தவறுகளைச் செய்து வருகிறோம். சுனாமி, புயல் போன்றவை பூமியில் அடிக்கடி நிகழ ஆரம்பித்துள்ளன. ஓர் அனுமானத்தில் நாம் மேற்கொள்ளும் செவ்வாய் கிரக ஆராய்ச்சி, பூமிக் கிரகத்தை அழிவில் இருந்து பாதுகாக்க வழிகாட்டலாம்!'' என்கிறார் விஞ்ஞானி சுப்பையா அருணன்.

செவ்வாயில் பயணம்
சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து செவ்வாய்கிழமை பிற்பகல் 2 மணி 36 நிமிடத்திற்கு மங்கள்யான் விண்கலம் பி.எஸ்.எல்.வி. சி-25 மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான ஒத்திகை கடந்த 31-ந் தேதி நடந்தது. ராக்கெட்டின் எந்திரங்கள், மின் இணைப்பு உள்ளிட்டவை சரியாக இருக்கிறதா? என்று அப்போது ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் அவை அனைத்தும் சரியாக இருப்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்தனர்.

கவுண்டவுன் தொடக்கம்
இதைத்தொடர்ந்து, விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான 56½ மணி நேர ‘கவுண்ட்டவுன்' (இறுதிக்கட்ட ஆயத்த பணிகள்) நேற்று காலை 6 மணி 8 நிமிடத்திற்கு தொடங்கியது.
பி.எஸ்.எல்.வி. சி-5 ராக்கெட் மூலம் நாளை ஏவப்படும் மங்கள்யான் விண்கலம் 300 நாட்கள் விண்வெளியில் பயணம் செய்து அடுத்த ஆண்டு செப்டம்பர் 24-ந் தேதி செவ்வாய் கிரகத்தின் அருகே செல்லும். செவ்வாய் கிரகத்தை நீள்வட்ட பாதையில் சுற்றியபடி, அந்த கிரகத்தை பற்றி ஆய்வு செய்து தகவல்களை பூமிக்கு அனுப்பும்.

2 சந்திரன்
பூமியில் இருக்கும் நமக்கு, ஒரு சந்திரன்தான் துணைக்கோளாக உள்ளது. ஆனால், செவ்வாய்க்கு இரண்டு துணைக்கோள்கள் உள்ளன. இந்தியா அனுப்பவுள்ள விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள கருவி மூலம், செவ்வாயிலிருந்து தரையையும் துணைக்கோள்களையும் கண்காணித்து, உயிரினம் வாழத் தேவையான மீத்தேன் வாயு, தாதுக்கள், நீர் போன்றவை இருக்கின்றனவா என்று விண்கலத்தில் இணைத்து அனுப்பப்படும் கருவிகள் சொல்லும்.












Click it and Unblock the Notifications