சின்னம்மாவையே நீக்கனும்னா எப்படி... ஆதங்கப்படும் சி.ஆர்.சரஸ்வதி!
Recommended Video

சென்னை : முன்னாள், இந்நாள் முதல்வர்கள், சசிகலாவை ஒதுக்கி வைப்பது ஏன் என்பதை எதற்கான காரணத்தை விளக்க வேண்டும் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி கேட்டுள்ளார்.
அதிமுக அணிகள் இணைப்பு பரபரப்புக்கு மத்தியில் அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது : சசிகலாவை ஒதுக்கி வைப்பதாக ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் பழனிசாமியும் சொல்கிறார்கள், அவர்கள் என்ன தீங்கு செய்துவிட்டார்கள். சசிகலாவையும், தினகரனையும் ஒதுக்கி வைப்பதாக இருந்தால் எதற்காக ஆதரித்து பிரமாணப் பத்திரங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தனர்.
எதற்காக முதல்வர் பழனிசாமி தினகரனுக்கு ஆதரவாக தொப்பி சின்னம் அணிந்து கொண்டு வாக்கு சேகரித்தார் என்ற கேள்விகளுக்கெல்லாம் நீங்கள் தான் அவர்களிடம் விடை காண வேண்டும். இதற்கு உரிய விளக்கத்தை அவர்கள் கொடுத்தேத் தீர வேண்டும்.

என்ன தீங்கு செய்தார்கள்?
ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளத்தில் இருந்து சென்னை வந்தது எப்படி அவரை யார் அழைத்து வந்தார்கள் என்ற வரலாறு எல்லோருக்கும் தெரியும். இவர்கள் யாருக்குமே தினகரனோ, ஜெயலலிதாவுடன் இருந்த சசிகலாவோ எந்தத் தீங்கையும் செய்துவிடவில்லை. அவர்களை ஒதுக்க வேண்டிய காரணம் என்ன என்று தான் இதுவரை எங்களுக்குத் தெரியவில்லை.

விளக்கம் வேண்டும்
ஒதுக்கி வைப்பதற்கான காரணத்தை அவர்கள் விளக்க வேண்டும். சசிகலாவால் பதவி போனது என்றோ அல்லது அவரால் தங்களால் முன்னேற முடியவில்லை என்றோ கூறுங்கள். மக்களும் தொண்டர்களும் எங்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை அவர்கள் சொல்வார்கள்.

சசிகலாவிடம் கெஞ்சியது யார்?
சசிகலா முதல்வராக வேண்டும் என்று சொன்னது இந்த அமைச்சர்கள் தான். அமைச்சர்கள் உதயகுமார், ஜெயக்குமார், மக்களை துணை சபாநாயர் தம்பிதுரை உள்ளிட்டோர் நீங்கள் தான் முதல்வராக வேண்டும் என்று சசிகலாவிடம் சொன்னார்களா இல்லையா?.போயஸ் கார்டனில் போய் சசிகலாவிடம் நீங்கள் தான் பொதுச்செயலாளர், நீங்கள் தான் முதல்வர் என்று சொன்னார்களா இல்லையா?

இணைய வேண்டும் என்பதே விருப்பம்
நடந்த எல்லா விஷயமும் மக்களுக்கும் தொண்டர்களுக்கும் தெரியும், அப்படி இருந்தும் இவர்கள் ஏன் இப்படி சொல்கிறார்கள் என்று அவர்கள் தான் விளக்கம் அளிக்க வேண்டும். சசிகலாவை எல்லோருக்கும் தெரியும் மற்றவர்கள் முன்னேறத் தான் துணை நின்றிருக்கிறார். எல்லோரும் இணைந்து இருக்க வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம், பிரிவுகள் வேண்டாம் என்பதையே நாங்கள் விரும்புகிறோம்.


Click it and Unblock the Notifications
