ஏக்கருக்கு ரூ.25000 வெள்ள நிவாரணம் கோரி போராடிய டெல்டா மாவட்ட விவசாயிகள், தேமுதிக எம்.எல்.ஏ கைது
நாகப்பட்டிணம்: அரசு அறிவித்துள்ள வெள்ள நிவாரணத்தொகை யானைப்பசிக்கு சோளப்பொரி போன்றது என்று விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். கூடுதல் நிவாரணம் கேட்டு காவிரி டெல்டா மாவட்டங்களிலும், கடலூரிலும் மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். சீர்காழியில் சாலைமறியலில், ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தேமுதிகவைச் சேர்ந்த மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் அருட்செல்வன் உள்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் கொட்டித்தீர்த்த வரலாறு காணாத மழை - வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடு, உடைமைகளை இழந்துள்ளனர். பல லட்சம் ஏக்கர் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய தொழிலாளர்கள் மாத கணக்கில் வேலை செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை போதுமானது அல்ல என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டாகும்.
வடகிழக்குப் பருவமழையின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டது. தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட 15 காவிரி டெல்டா மாவட்டங்களில் 22 லட்சம் ஏக்கரில் சம்பா நடவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு சராசரி அளவை விட அதிகமாக மழை பெய்துள்ளது.

டெல்டா மாவட்டங்களில் மழை
தஞ்சாவூர் மாவட்டத்தில் 39 சத வீதமும், திருவாரூர் மாவட்டத்தில் 58 சதவீதமும், நாகை மாவட்டத்தில் 64 சதவீதமும் சராசரியை விட கூடுதலாக மழை பெய்தது. குறிப்பாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மழைப் பொழிவு அதிகமாக இருந்தது. இதன் காரணமாக சம்பா, தாளடி பருவத்தில் நெல் சாகுபடி செய்யப் பட்டுள்ள, ஏறத்தாழ 4.10 லட்சம் ஹெக்டேர் பரப்பில், பெரும்பாலான இடங்களில் மழை, வெள்ளத்தால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

பயிர்கள் பாதிப்பு
கடந்த செப்டம்பர் மாதம் வரையில் நடவு செய்த பயிர்கள் சூல், பூக்கும் மற்றும் இளம் பால் பருவம் ஆகிய நிலைகளில் இந்த தொடர் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடவு செய்யப்பட்ட இளம் பயிர்களும் நீரில் மூழ்கி அழுகிவிட்டன. மீதமுள்ள பயிர்களும் தூர் கட்டாமல் உள்ளன என்று கூறியுள்ள விவசாயிகள், இதன் காரணமாக ஏறத்தாழ 80 சதவீதம் அளவுக்கு விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்படும் என்று அச்சம் தெரிவித்துள்ளனர்.

உண்ணாவிரதம்
காவிரி டெல்டாவை வெள்ளம் பாதித்த பகுதியாக அறிவிக்கக் கோரி, திருவாரூரில் சனிக்கிழமை திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 12 டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த இரு தினங்களுக்கு முன்புஉண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது காவிரி டெல்டாவை வெள்ளம் பாதித்த மாவட்டங்களாக அறிவித்து, ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகள் பெற்ற கூட்டுறவுக் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்வதோடு, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், வணிக வங்கிகளில் பெற்ற கடனை மத்திய அரசின் மூலம் தள்ளுபடி செய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தினர்.

சாலை மறியல் எம்.எல்.ஏ கைது
இதனிடையே இன்று காலையில் கடலூர், திருவாரூர்,நாகை, உள்ளிட்ட பல பகுதிகளில் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சீர்காழியில் சாலைமறியலில், ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தேமுதிகவைச் சேர்ந்த மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் அருட்செல்வன் உள்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போது அவர்கள், தமிழக அரசு கூடுதல் வெள்ள நிவாரணத்தொகையை அறிவிக்க வேண்டும் என்று முழக்கமிட்டனர்.

ஏக்கருக்கு ரூ. 25000
நெல், மரவள்ளி, பருத்தி உள்ளிட்ட பாசன பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25000 வழங்க வேண்டும். கரும்பு, வாழை, வெற்றிலை போன்ற பயிர்கள் பாதிப்புக்கு ஏக்கர் ஒன்றுக்கு ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். ரப்பர், சவுக்கு, நாற்றங்கால் போன்றவற்றிற்கு பாதிப்பிற்கேற்ப நட்ட ஈடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பயிர்கடன் தள்ளுபடி
விவசாயிகள் பெரிதும் பாதித்துள்ள நிலையில் அவர்கள் பெற்றுள்ள பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். மண்மேடிட்ட நிலங்களை சீர்செய்யவும், பாசன கிணறுகள் பம்ப்செட்டுகளை புணரமைக்கவும் அரசு உதவிட வேண்டும் என்றும் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் கவனம் செலுத்துவாரா?
அதிகாரிகள் உரிய முறையில் கணக்கெடுப்புகளை நடத்தி, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரண உதவி கிடைக்கச் செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் நேரடியாக கவனம் செலுத்தி, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications