வருமான வரி வழக்கில் ஜெயலலிதாவுக்கு மோடி உதவினாரா?: கருணாநிதி சந்தேகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி உதவி செய்தாரா என்று திமுக தலைவர் கருணாநிதி சந்தேகம் எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக முரசொலியில் கட்சித் தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

உடன்பிறப்பே,

1991 முதல் 1993ம் ஆண்டு வரையிலான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வில்லை என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, மற்றும் சசி எண்டர்பிரைசஸ் நிறுவனம் மீது சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வருமான வரித் துறை உதவி ஆணையாளர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த 1997ஆம் ஆண்டு முதல் 17 ஆண்டுகளாக விசாரணையில் இருந்து வந்து தற்போது ஒரு முடிவுக்கு வரும் கட்டத்தை எய்தியுள்ளது.

Karunanidhi, Jayalalitha and Modi

ஜெயலலிதா, சசிகலா மற்றும் சசி என்டர்பிரைசஸ் நிறுவனம், வருமான வரித்துறையிடம் சமரசம் செய்துகொள்வதாகவும், இதற்காக அபராதத் தொகை கட்டுவதாகவும் கூறி, 1 கோடியே 44 லட்சத்து 43 ஆயிரத்து 61 ரூபாய் அபராதமாக கட்டப்பட்டுள்ளது. இதன் இறுதி உத்தரவை வருமான வரித்துறை இன்னும் பிறப்பிக்கவில்லை.

இதற்கு முன்பு பலமுறை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டி உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என மனு தாக்கல் செய்தவர்கள், தற்போது அபராதம் செலுத்த முன்வந்திருப்பது, குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவே பொருள்படுகிறது.

இது குறித்த வழக்கு 21-8-1997 அன்று முதன் முதலாகத் தாக்கல் செய்யப்பட்டது. வருமான வரித் துறையினர் குறிப்பிட்டுள்ள அந்தக்கால கட்டத்தில், தனக்கு வருமானம் இல்லை எனவும், அதனால் கணக்குத்தாக்கல் செய்யவில்லை எனவும் ஜெயலலிதா தரப்பிலே தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதனை வருமான வரித்துறையினர் ஏற்றுக்கொள்ளவில்லை. வருமான வரிச் சட்டப்படி, வருமான வரி செலுத்துபவர்கள், வருமானம் இல்லாத காலத்திற்கும் கணக்குக் காட்ட வேண்டும் என்பதுதான் சட்டம்.

ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் 1993-94ஆம் ஆண்டுக்கான தங்களது வருமான வரி கணக்கைத்தாக்கல் செய்யாதது பற்றிய வழக்கு உச்ச நீதி மன்றத்தில் 24-2-2006 அன்று நீதிபதிகள் பி.என். அகர்வால், ஏ.கே. மாத்தூர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதாவின் வக்கீல் ஆறு வாரம் அவகாசம் வேண்டுமென்றார்.

(அப்போது நீதிபதிகள் கூறியது என்ன தெரியுமா?

"நீதி பரிபாலன முறையையே நீங்கள் கேலிக்கூத்தாக்கி வருகிறீர்கள். இன்னும் எவ்வளவு காலத்திற்கு இந்த நீதிமன்ற நடவடிக்கைகளை இழுத்துச் செல்ல முடியும்? குற்றவியல் நடைமுறைச் சட்டம் 313வது பிரிவின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜராகி கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லி மற்றவர்களுக்கெல்லாம் முன்மாதிரியாக நீங்கள் இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் என்ன பதில் மனுவை உங்களால் தாக்கல் செய்ய முடியும்? (ஜெயலலிதாவின் வழக்கறிஞரைப் பார்த்து) உங்கள் கட்சிக்காரர் நீதிமன்றத்தில் ஆஜராகி கேட்கப்படும் கேள்விகளுக்குப்பதில் சொல்ல வேண்டுமென்று நாங்கள் இன்றைக்கே ஆணை பிறப்பிக்க விரும்புகிறோம்.")

இந்த வழக்கு பற்றி மேலும் ஒரு தகவலைக் கூறவேண்டுமேயானால், 1998ம் ஆண்டிலேயே, அப்போது மத்திய அரசிலே பா.ஜ.க. ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், அந்த ஆட்சியில் கூட்டணி வைத்திருந்த அ.தி.மு.க. தலைவி, இந்த வருமான வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க முயற்சி மேற்கொண்டது பற்றி, 15-7-1998 அன்றே "ஸ்டேட்ஸ்மேன்" நாளேடு வெளியிட்ட ஒரு செய்தியில், "மத்திய அரசுடன் ஜெயலலிதா செய்து கொண்டுள்ள தற்காலிக சமாதான உடன்பாட்டைத்தொடர்ந்து, அவர்மீது உள்ள வருமான வரி மற்றும் இதர வழக்குகளில் இருந்து அவரை விடுவிக்க பா.ஜ.க. அரசு வழிவகைகளை மேற்கொண்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்குகளை மேற்பார்வையிட்டு வந்த ஆணையாளர் எஸ்.சி. ஜாதவ் மும்பையில் சிறந்த பதவி எனக்கருதப்படும் ஒரு பதவிக்கு மாற்றப்பட்டார். அவருடைய பதவியை கே.கோபாலன் என்பவர் ஏற்றுக்கொண்டார். நேர்மையுடன் செயல்படக் கூடியவரான பி.கே. ஸ்ரீதரன் வேறு ஒரு முக்கிய பொறுப்புக்கு மாற்றப்பட்டார். அவரது இடத்துக்கு என்.பி. திரிபாதி என்பவர் நியமிக்கப்பட்டார். இப்படிப்பட்ட மாறுதல்கள் மூலம் ஜெயலலிதாவும், சசிகலாவும் அவருடைய உறவினர்களும் ஒரு தற்காலிக விடுதலையை அடையக்கூடும் என்று வருமான வரித் துறை அதிகாரிகள் குற்றம் சாட்டினர். ஜெயலலிதாவை சமாதானப்படுத்தியதன் மூலம் பா.ஜ.க. அரசு தனக்குத் தேவையான ஆதரவைப் பெற்றது. அதற்குப்பதிலாக தமிழ்நாட்டில் தி.மு.க. அரசைக் கலைக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தற்காலிகமாக நிறுத்திக் கொண்டுள்ளனர்" என்று எழுதியிருந்தது.

இன்னும் சொல்லப்போனால், பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்து, மத்திய ஆட்சியில் இருந்த போது, நிதியமைச்சராக இருந்த பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான திரு. யஷ்வந்த் சின்கா அவர்கள் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அந்தப் புத்தகத்தின் பெயர் "‘Confessions Of Swadhesi Reformers' " (சுதேசி சீர்திருத்தவாதியின் வாக்குமூலம்). அந்த நூலில் பக்கம் 226இல், "சென்னையில் காலையில் என்னுடைய நிகழ்ச்சிகள் முடிந்தவுடன், நான் ஜெயலலிதா வீட்டிற்குச் சென்றேன். நல்லவேளையாக அங்கே எந்த புகைப்படக்காரரும் காத்திருக்கவில்லை. ஜெயலலிதா இருந்த அறைக்கு நான் சென்று சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, மதிய உணவு அருந்தினோம். மூன்று பேர் மட்டுமே சாப்பிட்டோம் - ஜெயலலிதா, திலிப் ரே (நிலக்கரித்துறை இணை அமைச்சர்), நான். சாப்பாடு நன்றாக இருந்தது. நான் புறப்படும்போது என்னிடம் ஜெய லலிதா ஒரு கவரைக்கொடுத்தார். பிறகு நான் அதனைத்திறந்து பார்த்த போது அவருடைய வருமான வரி வழக்குகள் பற்றிய குறிப்புகள் இருந்தன. சில நாட்கள் கழித்து நான் பிரதமரைச் சந்தித்தேன். சென்னையில் ஜெயலலிதா வுடன் நடந்த பேச்சுவார்த்தை விவரங்களை அவரிடம் தெரிவித்தேன். ஆனால் ஜெயலலிதா கொடுத்த கவர் பற்றி சொல்ல மறந்து விட்டேன். அப்போது பிரதமர் (வாஜ்பாய்) "ஜெயலலிதா கொடுத்த கவரில் என்ன விஷயங்கள் இருந்தன?" என்றார். நான் திடுக்கிட்டுப் போனேன். நாட்டில் நடக்கும் விஷயங்களைத் தெரிந்து கொள்ள பிரதமர் நினைத்தால் அது முடியுமென்பதை நான் அறிந்து கொண்டேன்." இவ்வாறு யஷ்வந்த் சின்ue, முன்னாள் மத்திய நிதியமைச்சர், தான் எழுதிய நூலிலே குறிப்பிட்டிருக்கிறார்.

இது 1998ல் அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணியில் அங்கம் வகித்த போது நடைபெற்ற ஒரு சம்பவம். அதுவும் வருமான வரி வழக்கு குறித்த சம்பவம். அப்போது மத்திய நிதி அமைச்சரை ஜெயலலிதா அவருடைய வீட்டிற்கே அழைத்து உணவளித்து பரிந்துரை கவரையும் கொடுத்தார் என்பதை முன்னாள் மத்திய நிதி அமைச்சர் திரு. யஷ்வந்த் சின்கா அவர்களே தன் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். தற்போது என்ன நிலை? இதற்கு முன்பு பிரதமர் தமிழகம் வந்த போது, அவரை வரவேற்கச் செல்லாத தமிழக முதல்வர் ஜெயலலிதா தற்போது விமான நிலையத்திற்குச் சென்று வரவேற்கிறார், வழி அனுப்புகிறார். பதினைந்து நிமிடம் தனித்து உரையாடுகிறார். அதற்குப்பிறகுதான் எழும்பூர் நீதிமன்றத்தில் வருமான வரித் துறை சார்பாக பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள மனுகொடுத்து, அது பரிசீலனையில் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். வருமான வரித்துறை வழக்கறிஞரும் அதற்கு எதுவும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று பேட்டி அளிக்கிறார்.

இப்படியெல்லாம் 17 ஆண்டுகாலம் பயணம் செய்த இந்த வழக்கில்தான் - தற்போது வருமான வரி சட்ட விதிகளின்படி, தாங்கள் செலுத்த வேண்டிய வருமான வரி கட்டணத்தை அபராதத்துடன் சேர்த்து செலுத்துவதற்கு தயாராக உள்ளதாக வருமான வரித்துறை இயக்குனர் ஜெனரலுக்கு ஜெயலலிதா, சசிகலா மற்றும் சசி எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் மனு கொடுக்கப்பட்டு, அந்த மனுவைப் பரிசீலித்து வருமான வரித்துறை இயக்குனர் ஜெனரல் அதை ஏற்றுக் கொண்டு விட்டாராம். இந்த வழக்கு 1ம் தேதியன்று விசாரணைக்கு வந்த போது, நீதிபதி என்ன காரணத்தாலோ (?) விடுப்பு எடுத்துள்ளதால், அவர் வரவில்லையாம்.

அப்போது ஜெயலலிதா தரப்பினரின் வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த மனுவில், "ஜெயலலிதா, சசிகலா, சசி எண்டர் பிரைசஸ் நிறுவனம் சார்பில் கொடுக்கப்பட்ட சமரச மனுவை வருமான வரித்துறை ஏற்றுக் கொண்டது. இதையடுத்து சசி எண்டர்பிரைசஸ் நிறுவனம் 1990-91ம் ஆண்டுகளுக்கு 75 லட்சத்து 33 ஆயிரத்து 330 ரூபாயும், 1992-93ஆம் ஆண்டு களுக்கு 65 லட்சத்து 67 ஆயிரத்து 872 ரூபாயும் அபராதத்துடன் வருமான வரிக் கட்டணத்தைச் செலுத்தி விட்டது. அதுபோல் ஜெயலலிதா30 லட்சத்து 83 ஆயிரத்து 887 ரூபாயும், சசிகலா 28 லட்சத்து 7 ஆயிரத்து 972 ரூபாயும் செலுத்தி விட்டார்கள். ஆக மொத்தம் 1 கோடியே 44 லட்சத்து 43 ஆயிரத்து 61 ரூபாயும் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கான இறுதி உத்தரவினை வருமான வரித்துறை பிறப்பிக்கவில்லை. எனவே இந்த வழக்கு விசாரணைக்காக ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் நேரில் ஆஜராகத் தேவையில்லை. இந்த வழக்கை 2 வாரங்களுக்குத்தள்ளி வைக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறே வழக்கும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு முடிவடையப்போவதாக ஏடுகள் எல்லாம் எழுதியுள்ளன.

இந்த நேரத்தில் நமக்கும் - நாட்டு மக்களுக்கும் இந்த வழக்கு பற்றி எழுந்துள்ள சில கேள்விகள்-

17 ஆண்டுகள் வழக்கு நடைபெற்று அதற்காக பல்வேறு நீதிமன்றங்களும், நீதியரசர்களும், அரசும், வழக்கறிஞர்களும், நீதிமன்ற அலுவலர்களும் பல மணி நேரத்தை இந்த வழக்குக்காகச் செலவிட்டதற்கு யார் பொறுப்பாளி? அவ்வாறு இவர்களது நேரத்தை வீணடித்தவர்களுக்கு தண்டனை வெறும் அபராதம்தானா? காசு உள்ளவர்கள் அதைச் செலுத்தி விட்டால் அவர்கள் செய்த குற்றம் எல்லாம் மறக்கப்பட்டுவிடுமா? தற்போது அபராதத்துடன் செலுத்திய தொகையை 17 ஆண்டுகளுக்கு முன்பே செலுத்தியிருந்தால், இத்தனை பேருடைய உழைப்பும் வீணடிக்கப்பட்டிருக்காது அல்லவா?

இந்த வழக்கில் இதற்கு முன்பு குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா தரப்பினர் பற்றி உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த கருத்துகள் என்னவாயிற்று? இந்த வழக்கிற்காக பல்வேறு பத்திரிகையாளர்கள் செலவிட்ட நேரம் எவ்வளவு? 1998ம் ஆண்டில் மத்தியில் இதே பா.ஜ.க. அரசு நடைபெற்ற போது, இந்த வருமான வரி வழக்கினைத் திரும்பப் பெறச் செய்ய முயற்சி நடைபெற்றதாக ஏடுகளிலே செய்தி வந்ததே, அதுபோன்ற நடவடிக்கை இப்போதும் எடுக்கப்பட்ட தாக பலரும் கருதினால் அது தவறா? இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க ஜெயலலிதா தரப்பினர் கீழ் கோர்ட்டிலும், பிறகு உயர் நீதிமன்றத் திலும், அதன் பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் அடுத்தடுத்து மனுக்களைத் தாக்கல் செய்தனரே, அதற்குப் பதிலாக அப்போதே வருமான வரித் துறையினரிடம் அபராதத் தொகையை கட்டுவதாக கூறியிருக்கலாம் அல்லவா?

நீதிபதி பல முறை, நீதிமன்றத்திலே ஜெயலலிதா ஆஜர் ஆக வேண்டுமென்று வலியுறுத்திய போதிலும், அவர் ஆஜராகாமல் இருந்தது பற்றி, தே.மு.தி.க. தலைவர் குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் - சராசரி இந்தியக் குடிமகன் ஒருவர் இவ்வாறு செயல்பட்டிருக்க முடியுமா என்றும், ஜெயலலிதா வருமான வரித்துறைக்கு இத்தனை ஆண்டு களுக்குப் பிறகு விடுத்துள்ள வேண்டுகோளை வருமான வரித்துறை ஏற்கலாமா என்றும் கடிதம் எழுதியிருந்தாரே, அந்தக்கடிதங்கள் என்னவாயின?

இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டுமென்ற வேண்டுகோளை நீதிமன்றங்கள் 2006ம் ஆண்டு தள்ளுபடி செய்த போதே, ஜெயலலிதா வருமான வரித்துறையோடு சமரசம் செய்து கொள்வதற்கு மனு செய்திருக்கலாம் அல்லவா? அப்போது மத்தியிலே அவருடைய கோரிக்கையைக் கேட்கின்ற அரசு இல்லை என்ற காரணத்தால், அப்போது இந்த வேண்டுகோளை வைக்கவில்லையா?

ஜெயலலிதா தரப்பினர் இப்போது அபராதத் தொகையைக் கட்டியிருக்கிறார்கள் என்றால், தாங்கள் செய்த குற்றத்தை அவர்களே ஒப்புக்கொண்டு விட்டனர் என்றுதானே பொருள்! ஜெயலலிதாவைப்போல வேறு யாராவது 17 ஆண்டுக்காலம் வழக்கை நடத்தி தீர்ப்பு வெளியிடப்படவுள்ள நேரத்தில், தப்பிக்க வேறு வழியில்லாமல், அபராதத் தொகையை தானே கட்டி விடுவதாகக் கூறினால், அதனை வருமான வரித் துறை ஏற்றுக் கொள்ளுமா?

ஜெயலலிதா சமாதானமாகச் செல்லாமல் நீதிமன்றம் தண்டனை விதித்திருக்குமானால், வரி ஏய்ப்புத் தொகை ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால், அபராதத்துடன் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள், அதிகப்பட்சம் 7 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள். இந்தத் தண்டனையிலிருந்து தப்பிக்கவே ஜெயலலிதா தரப்பினர் பிடிக்க வேண்டியவர்களைப் பிடித்து வருமான வரித் துறையுடன் சமரசம் கண்டு விட்டாரோ என்றும் கூறுகிறார்கள். எப்படியோ வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது ஏற்கப்படாத வேண்டுகோள், மோடி பிரதமராக இருக்கும்போது ஏற்கப்பட்டு விட்டதோ என்ற கேள்வி எல்லோரின் மனத்திலும் எழுந்துள்ளது!

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+