ஜெ.விடம் தன்னிலை விளக்கம் கேட்கும் விஜயகாந்த்... முதலில் தன் உடல்நிலையை விளக்கினாரா?
சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தன்னிலை விளக்கம் தரவேண்டும் என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை கூறி வரும் நிலையில் தன்னிலை விளக்கம் தரவேண்டும் என்று கூறுவது சரியல்ல என்பது அரசியல் வல்லுனர்களின் கருத்தாகும்.
மனிதராக பிறந்த அனைவருக்கும் உடல்நிலை சரியில்லாமல் போவதும், பின் குணமடைவதும் இயற்கையான ஒன்று. எனவே, முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மூடி மறைக்க வேண்டிய அவசியமில்லை என்பதைக் கருத்தில் கொண்டு உரிய அறிவிப்பை இந்த அரசு உடனே மேற்கொள்ள வேண்டும் என்றும் தன்னிலை விளக்கம் தரவேண்டும் என்றும் கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், மருத்துவமனை தரும் அறிக்கையில்தான் மாற்றம் உள்ளதே தவிர, ஜெயலலிதா உடல்நிலை எந்த மாற்றமோ, முன்னேற்றமோ இருப்பதாக தெரியவில்லை. இந்த நிலையில் முதலமைச்சரின் இலாக்காகளை நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் அவர்களிடம் ஒப்படைத்ததாக ஆளுநர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. செயல்படாத முதல்வரும், நிரந்தர ஆளுநரும் இல்லாத தமிழகமாக உள்ளது.
முதல்வர் உடல்நிலை பற்றி வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை மக்களையும், பத்திரிக்கையாளர்களையும், மருத்துவமனை ஊழியர்களையும், மிரட்டுவதை காட்டிலும், இந்த வதந்திகளுக்கு காரணமான முதல்வர் ஜெயலலிதா, தன்னிலை விளக்கம் தந்து வாக்களித்த மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது அவசியமாகிறது என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.
இதே போலத்தான் திமுக தலைவர் கருணாநிதியும், அப்பல்லோவில் சிகிச்சைப் பெறும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்தையோ, அல்லது ஆடியோவை வெளியிடவேண்டும் என்று கேட்டார். இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.

பண்ருட்டி ராமச்சந்திரன்
அதிமுகவின் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் அளித்த பதிலில், இந்த கோரிக்கையை வைப்பதற்கு கருணாநிதிக்கு எந்த உரிமையும் கிடையாது. முதல்வரின் உடல்நிலை குறித்து டாக்டர்களால் மட்டுமே கருத்து கூறமுடியும். டாக்டர்களும் அவ்வப்போது ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து தெரிவித்து வருகின்றனர். முதல்வரின் உடல்நிலை குறித்து அரசியல் கட்சித்தலைவர்கள் பேசுவதற்கு உரிமை இல்லை என்று கூறினார்.

விஜயகாந்த உடல்நிலை
விஜயகாந்த் உடல் நிலை குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே பல தகவல் பரவியது. கேரளா போன்ற அண்டை மாநிலங்களுக்கும், சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளி நாடுகளுக்கும் வைத்திய சுற்றுலா மேற்கொண்டு வருகிறார் என்று தகவல் கிளம்பியது. கல்லீரல் பிரச்சினை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார் என கடந்த சட்டசபை தேர்தலின் போதும் செய்திகள் பரவின.

விஜயகாந்த் சிசிக்சை
அப்போது விஜயகாந்த் எதுவுமே கூறியதில்லை. ஆனால் தேர்தல் பிரச்சாரத்தின் போது தன் உடல்நிலை குறித்து பரவிய வதந்திகள் பற்றி பேச்சோடு பேச்சாக தகவல் கூறுவார். ஆனால் தனக்கு என்ன நடந்தது. என்ன நோய், என்ன சிகிச்சை எடுத்தேன் என்பது பற்றி எதுவும் வெளிப்படையாக கூறமாட்டார். இன்றைக்கும் இரண்டு பேர் விஜயகாந்தை கை தாங்கலாக அழைத்துக்கொண்டுதான் செல்கின்றனர்.

தலைவர்களின் உடல்நிலை
இதேபோலத்தான் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் அடிக்கடி வெளிநாடு பயணப்படுகிறார். சோனியாகாந்தியின் வெளிநாட்டு சிகிச்சை பயணம் பற்றி தகவலும் வெளிப்படையாக கூறப்படுவதில்லை. கருணாநிதி கூட கடந்த காலங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருக்கிறார்.

ஜெயலலிதாவின் நிலை
இந்தியாவைப் பொறுத்த அளவில் தலைவர்களின் உயிர் ஓருயிர் அல்ல. தினசரி ஊடகங்களில் முகத்தை காட்டினால் மட்டுமே மக்கள் நிம்மதியடைகின்றனர். சில நாட்கள் அறையை விட்டு வெளியே வராமல் இருந்தாலே வதந்திகள் பரவுகின்றன. கடந்த காலத்தில் சிறையில் இருந்து அக்டோபர் 18, 2014ம் ஆண்டு வெளியில் வந்த ஜெயலலிதா, மே 22ம் தேதி முதல்வராக பொறுப்பேற்ற போதுதான் மக்களை சந்தித்தார். அதுவரைக்கும் அவர் போயஸ் தோட்டத்திலேயேதான் இருந்தார் அப்போதும் அவரைப் பற்றி எதிர்கட்சியினர் கேள்வி எழுப்பினர்.

அண்ணா, எம்.ஜி.ஆர்
தமிழகத்தில் அண்ணா நோய் வாய்ப்பட்டபோது தகவல்கள் பொதுவெளியில் பகிரப்பட்டன. எம்ஜிஆர் விஷயத்தில் எல்லாத் தகவல்களும் பகிர்ந்துகொள்ளப்பட்டதாகச் சொல்ல முடியாது என்றாலும், நிலைமை இன்றளவுக்கு இல்லை. எம்ஜிஆருக்கு நெருக்கமானவர்கள் என்று சொல்லப்பட்ட ஒரு வட்டம் அவரைத் தொடர்ந்து சந்திக்க முடிந்தது. அமைச்சரும் மருத்துவருமான ஹண்டே தொடர்ந்து அறிக்கை கொடுத்தார்.

யாரும் பார்க்கவில்லை
ஜெயலலிதா விவகாரத்தில் பலவிதமான தகவல்கள் பரவி வருகின்றன. இந்த 22 நாட்களுக்குள் பல அறிக்கைகள் வெளியாகிவிட்டன. பலரும் மருத்துவமனைக்கு போய் வந்து விட்டனர். முதல்வரை நான் சந்தித்தேன், அவர் என்னுடன் பேசினார் என்று இதுவரை ஒருவர் கூட சொல்லவில்லை. அவரை வெளியிலிருந்து சந்திக்கச் சென்ற மத்திய அமைச்சர்கள், ஆளுநர், ராகுல்காந்தி ஆகிய யாருமே முதல்வர் இருந்த அறை பக்கம் கூட போகவில்லை என்பதுதான் உண்மை. இதுதான் வதந்தி பரவ காரணமாக உள்ளது.

உலகம் முழுவதும் இதே நிலை
உலகில் எல்லா மனிதர்களும் நோய் பாதிப்புக்குள்ளாவது இயல்பானது. மக்களால் கொண்டாடப்படும் அரசியல் தலைவர்கள் தம்முடைய உடல் உபாதைகளைப் பொதுவெளியில் பகிர்ந்து கொள்வது, சமூகத்தில் ஏனையோர் மத்தியில் அன்பையும் நல்லெண்ணத்தையும் அதே நோய் பாதிப்புக்குள்ளாகும் ஏனையோரிடத்தில் தன்னம்பிக்கையையும் விதைக்கும் என்று கூறப்படுகிறது. இங்கு ஜெயலலிதாவை முன்வைத்து நடத்தும் இதே விவாதம் அமெரிக்காவில் அதிபர் பதவிக்கு போட்டியிடும் ஹிலாரியை முன்வைத்து நடந்து கொண்டிருக்கிறது.

தன்னிலை விளக்கம் தேவையா?
அதே நேரத்தில் தமிழகத்தின் தவிர்க்க இயலாத தலைவரான ஜெயலலிதா தன்னுடைய உடலில் உள்ள நோய் பற்றியும், தன்னுடைய உடல்நலம் பற்றியும் தன்னிலை விளக்கம் தர வேண்டும் என்று விஜயகாந்த் கேட்பது சரியல்ல என்றும் அது அவசியமற்றது என்றும் கூறியுள்ளார் மருத்துவரும் தமிழக பாஜக தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன். ஜெயலலிதாவின் உடல்நிலையை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என்பதே தமிழிசையின் கருத்தாக உள்ளது. இதுதான் நடுநிலை அரசியல் நிபுணர்களின் கருத்தாகவும் உள்ளது.












Click it and Unblock the Notifications