தொகுதிகளை விட்டுக்கொடுக்க மறுக்கும் பாமக- பாஜக அணியில் இடம்பெறுவது கேள்விக்குறி!
சென்னை: லோக்சபா தேர்தலில் தாம் போட்டியிட விரும்பும் 10 தொகுதிகளில் ஒன்றைக் கூட விட்டுக் கொடுக்க முடியாது என்று அடம்பிடிப்பதால் பாஜக அணியில் பாமக இடம்பெறுவது கேள்விக்குறியாக இருக்கிறது.
லோக்சபா தேர்தலில் தேசிய கட்சிகளுடனும் திராவிட கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என்று கூறி வந்தது பா.ம.க. ஆனால் பாமகவின் அன்புமணி ராமதாஸ் முன்முயற்சியில் பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்த பேச்சுவார்த்தையில் பாமக ஏற்கெனவே அறிவித்த 10 தொகுதிகளை ஒரு போதும் விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை என்ற நிபந்தனையை அக்கட்சி முன்வைத்தது. ஆனால் பாமக அறிவித்திருக்கும் 10 தொகுதிகளில் 9 தொகுதிகளை பாஜகவும் தேமுதிகவும் கேட்டு வருகிறது.

ஒன்றுதான் கிடைக்கும்
இதனால் பாமகவுக்கு தருமபுரி தொகுதி மட்டுமே கிடைக்கக் கூடிய சூழல் இருக்கிறது. அத்துடன் பி.டி. அரசகுமார், கொங்கு நாகராஜ் ஆகியோருக்கும் கண்டிப்பாக சீட் கொடுத்தாக வேண்டும் என்பது பாமகவின் கூடுதல் நிபந்தனை.

கொங்கு நாகராஜ், அரசகுமாருக்கு நோ
ஏற்கெனவே கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் ஈஸ்வரன், பாஜக அணியில் இருப்பதால் நிச்சயமாக நாகராஜ்-க்கு சீட் கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாக பாஜக தெரிவித்துவிட்டது. அதேபோல் மோசடி வழக்கில் சிக்கியிருக்கும் அரசகுமாருக்கெல்லாம் சீட் கேட்பதா என்றும் பாஜக அதிருப்தியில் இருக்கிறது.

பாமகவுக்கு 8தான்
அதிகபட்சம் பாமகவுக்கு 8 இடங்கள்தான் தர முடியும் என்றும் பாஜக தரப்பில் உறுதியாக தெரிவிக்கப்பட்டுவிட்டது. அதுவும் பாமக விரும்பும் அத்தனை தொகுதிகளையும் அப்படியே கொடுத்துவிட முடியாது என்பதிலும் பாஜக உறுதியாக இருக்கிறது.

இதென்ன கூட்டணியோ?
மேலும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு பின்னர் கூட்டணிக்குள் வந்து இணைவதெல்லாம் என்ன மாதிரியான அரசியலோ? என்று பாஜகவினர் புலம்பவும் செய்கின்றனராம்.

பாமக இடம்பெறாது?
தற்போதைய நிலையில் ஒரு தொகுதியை கூட விட்டுக் கொடுக்க முடியாது என்ற அடம் நீடிப்பதால் பாஜக அணியில் பா.ம.க. இடம்பெறுமா? என்பது மிகவும் சந்தேகமே என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications