சந்திப்புகள்... பேரங்கள்.. தமிழக அரசியலை தலை சுற்ற வைத்த விஜயகாந்த் "வியூகம்"
சென்னை: தமிழக அரசியல் கடந்த சில மாதங்களாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் எனும் ஒரு நபரை மையமாக வைத்தே சுழன்று அடித்து இப்போது ஓய்வு நிலைக்கு வந்துள்ளது.. எந்த ஒரு அரசியல் கட்சியும் இதுவரை மேற்கொள்ளாத ஒரு நிலையாக திமுக, பாரதிய ஜனதா, காங்கிரஸ் என மூன்று கட்சிகளுடனுமே கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடத்தி 'சரித்திரம்' படைத்திருக்கிறார் விஜயகாந்த்.
லோக்சபா தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உருவாகுமா? திமுக- தேமுதிக - காங்கிரஸ் கூட்டணி உருவாகுமா? இடதுசாரிகள் என்ன நிலைப்பாடு எடுப்பார்கள்? பாமக அறிவித்தது போல தனித்துப் போட்டியிடுமா? மதிமுக என்ன செய்யப் போகிறது? இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பு நிலை இருந்தது.
குறிப்பாக டிசம்பர் மாதம் முதல் இந்த கேள்விகள் அனைத்தும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் என்ன முடிவு எடுப்பாரோ அதனடிப்படையில்தான் அமையும் என்கிற வகையில் மடைமாறிப் போயின. தமிழக அரசியல் தம்மை மையமாக வைத்து நகருவதை நன்றாகவே மோப்பம் பிடித்துக் கொண்ட விஜயகாந்த் அண்ட் கோ சளைக்காமல் அத்தனை கட்சிகளுடனும் அத்தனை பேரங்களையும் நடத்திப் பார்த்தனர்.

களத்தில் தமிழருவி மணியன்
ராஜ்யசபா தேர்தல்களில் இடதுசாரிகளை அதிமுக ஆதரித்ததால் அதிமுக- இடதுசாரிகள் கூட்டணி உறுதியானதாகவே இருந்தது. அதனால் காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன், பாரதிய ஜனதா தலைமையில் தேமுதிக- பா.ம.க.- ம.தி.மு.க. கட்சிகளை ஒருங்கிணைக்கும் 'தூது' வேலைகளை மும்முரமாக மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து விஜயகாந்தை தமிழருவி மணியன் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை மேல் பேச்சுவார்த்தை நடத்தினார்.

2016-ல் முதல்வர்.. ராஜ்யசபா சீட் பேரம்
ஒரு பக்கம் 2016-ல் வைகோவை முதல்வராக்குவோம் என்று கூறிக் கொள்ளும் தமிழருவி மணியன் விஜயகாந்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில், நீங்கள் திமுக பக்கம் போக வேண்டாம்.. இப்போது போனால் 2016 சட்டசபை தேர்தல் உங்களுக்கு சாதகமாக இருக்கிறது.. நீங்கள் முதல்வராகும் வாய்ப்பு இருக்கிறது.. திமுக அணிக்குப் போனால் கருணாநிதி, ஸ்டாலினுக்குப் பின்னர்தான் நீங்கள்.. அத்துடன் பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்து ராஜ்யசபா சீட்டுகளைக் கூட பெற்றுத் தர ஏற்பாடு செய்கிறேன் என்று 'பேரம்' பேசினார். விஜயகாந்தும் நழுவலாகவே சரி பார்ப்போம் என்றே கூறிவந்தார்..

சபரீசன், எஸ்றா சற்குணம்
தேமுதிகவுக்கு பாரதிய ஜனதா தூண்டில் போட்டுக் கொண்டிருக்க திமுகவும் சும்மா இருக்கவில்லை. மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனை தூதராக்கி தேமுதிகவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தத் தொடங்கியது. அப்போதுதான் விஜயகாந்த்- எஸ்றா சற்குணம் சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியது.

விஜயகாந்துடன் எஸ்றா சற்குணம்
பாஜகவுடன் தேமுதிக இணையுமா? என்ற நிலையில் தேமுதிக நடத்திய கிறிஸ்துமஸ் விழாவில் திமுக அனுதாபியான எஸ்றா சற்குணம் கலந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அத்துடன் அந்த விழாவில் வெளிப்படையாகவே திமுக அணிக்கு வர வேண்டும் என்று விஜயகாந்தை எஸ்றா சற்குணம் கேட்டுக் கொண்டார்.

நழுவலான பதில்
இதற்கு அப்போது பதிலளித்து பேசிய விஜயகாந்த், பாரதிய ஜனதா கூட்டணிக்கு செல்ல வேண்டாம் என எஸ்றா சற்குணம் கேட்டுக் கொண்டார். அதை நான் கண்டிப்பாக பரிசீலிப்பேன். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை எதிர்த்து பலமான கூட்டணி அமைப்பேன் என்றெல்லாம் பேசினார்.

காங்கிரஸும் முயற்சி- வாசன் சந்திப்பு
தேமுதிகவை வளைக்க பாஜக, திமுக களத்தில் குதித்துவிட்ட நிலையில் ஆதரவற்ற காங்கிரஸ் கட்சியும் கோதாவில் இறங்கியது. விஜயகாந்தின் நெருங்கிய நண்பரான மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் திடீரென விஜயகாந்தை வீடு தேடிப் போய் சந்தித்தார். இந்த சந்திப்பில் விஜயகாந்த் மகனின் சினிமா பிரவேசத்துக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு அரசியல் பேசினோம் என்று வாசன் கூறினார். இதனால் தேமுதிக எங்கே செல்லும் என்ற குழப்பமான நிலை உருவானது.

நெருக்கடியில் தப்பிக்க உளுந்தூர்பேட்டை..
கடந்த ஆண்டு டிசம்பரில் மட்டும் பாஜக, திமுக, காங்கிரஸ் என அனைத்து கட்சிகளும் முற்றுகை வளையமிட்டு நிற்க எந்த முடிவையும் சொல்ல முடியாமல் நெருக்கடிக்குள்ளானார் விஜயகாந்த். இதனால் திடீரென 'உளுந்தூர்பேட்டை'யில் பிப்ரவரி மாதம் மாநாடு வைத்திருக்கிறோம்.. அதில் முடிவை அறிவிக்கிறேன் என்று எல்லோரிடமும் பிட்டைப் போடத் தொடங்கினார் விஜயகாந்த்.

திருமாவளவன் நேரடி சந்திப்பு..
திமுக கூட்டணியில் இம்முறை "கூட்டணி தூதராக" உருவெடுத்தவர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். அவர் விஜயகாந்தை மீண்டும் மீண்டும் சந்தித்து பேசினார். வெளிப்படையாகவே திமுக அணிக்கு வர வேண்டும் என்று அழைப்பும் விடுத்தார். அப்போது 'உளுந்தூர்பேட்டை'யில் முடிவு அறிவிப்பேன் என்றார்.

மூன்று கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை..
ஆனால் திரைமறைவில் பாஜக, திமுக, காங்கிரஸ் என மூன்று கட்சிகளுடனும் பேரம் பேசுவதில் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ், மனைவி பிரேமலதா தரப்பு மும்முரமாக இருந்தது. அதிக சீட், அதிக "தேர்தல் செலவு"க்கான பணம் யார் கொடுப்பார்கள்? என்பதுதான் தேமுதிகவின் ஒரே இலக்காக இருப்பதாக தகவல்கள் பரவின.

வெறுத்துப் போன பாஜக
ஆனால் தேமுதிகவின் அதிக சீட், தேர்தல் செலவுக்கு பணம் என்ற கணக்கைப் பார்த்து பாஜக மேலிடம் வெறுத்தே போய்விட்டது. ஒரு மாநில கட்சியை இப்படியெல்லாம் பேச விட்டுவைப்பதா? என்று குமுறிக் கொண்டிருந்தாலும் தமிழக பாஜகவினர் சளைக்கவே இல்லை..

திடீரென ஆம் ஆத்மி வாடை
இந்த நிலையில் உளுந்தூர்பேட்டையில் நடைபெறும் மாநாடு 'ஊழல் ஒழிப்பு மாநாடு" என்று விஜயகாந்த் அறிவிக்க, ஆஹா எல்லாரையும் கழற்றிவிட்டு 'ஆம் ஆத்மியுடன்' இணைந்து தேர்தலை சந்திக்கப் போகிறது தேமுதிக என்ற செய்தியும் தீயாகப் பரவியது.

நாடே எதிர்பார்த்த உளுந்தூர்பேட்டை
இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் உளுந்தூர்பேட்டையில் தேமுதிகவின் ஊழல் எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வந்திருந்தனர். விஜயகாந்த் என்ன முடிவை அறிவிப்பார்? என்பதற்காகத் திரண்ட கூட்டம் அது. ஆனால் அந்த கூட்டத்தில் பேசிய விஜயகாந்த் மனைவி பிரேமலதா, திமுகவையும் விமர்சித்தார் அதிமுகவையும் விமர்சித்தார். பின்னர் பேசிய விஜயகாந்த் இழு இழுவென இழுத்துக் கொண்டு கடைசியாக ஒரு போடு போட்டார்.

கூட்டணிதானே. இதோ..
நீங்கள் எதிர்பார்க்கிறது கூட்டணி பற்றி.. என் தொண்டர்களிடம் கருத்து கேட்கிறேன் என்று கேட்டு வைக்க அவர் கேட்டதற்கெல்லாம் ஆ..ஊ.. என்று விசில் அடித்தது அந்த விசிலடிச்சான் கூட்டம். உடனே விஜயகாந்தும் ஆஹா என் தொண்டர்கள் தனித்துப் போட்டியிட சொல்கிறார்கள்.. என்று சொன்ன கையோடு, ஆனாலும் கூட்டணி விவகாரத்தில் கட்சி தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதையும் ஏற்பார்கள் என்று ஒரே போடாக போட்டார்..

உளுந்தவடையாச்சே..
உளுந்தூர்பேட்டையில் முடிவு அறிவிப்பேன் என்று அத்தனை கட்சிகளுக்கும் தண்ணி காட்டிவிட்டு ஒன்றுமே அறிக்காமல் நடையைக் கட்டினார் விஜயகாந்த். அதனால் விஜயகாந்தின் உளுந்தூர்பேட்டை மாநாடு உளுந்த வடையாச்சே என்ற நிலைக்குப் போனது..

சளைக்காத கட்சிகள்..
அதன் பின்னரும் பாஜக, திமுக, காங்கிரஸ் கட்சிகள் சளைக்கவில்லை. எப்படியாவது தேமுதிகவை வளைத்துவிடுவதில் மும்முரம் காட்டின. உச்சகட்டமாக திமுகவில் கருணாநிதி மு.க.ஸ்டாலின் ஆகியோர் பகிரங்கமாகவே அழைத்தும் பார்த்தனர். பிடி கொடுப்பதாக தெரியவில்லை.

திடீர் டெல்லி பயணம்- ஒரே நேரத்தில் காங்- பாஜகவுடன் பேச்சு..
இந்த நிலையில் திடீரென தமது கட்சி எம்.எல்.ஏக்களுடன் பிரதமர் மன்மோகன்சிங்கை பார்த்து தமிழக பிரச்சனைகளுக்காக மனு கொடுக்க டெல்லிக்குப் போனார் விஜயகாந்த். அங்கு டேரா போட்டு ஒரே நேரத்தில் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் தலைவர்களை சந்திக்க விஜயகாந்த் முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் எந்த ஒரு தலைவரும் விஜயகாந்தை சந்திக்க மறுத்துவிட்டனர்..

கட்சியை இணைக்கச் சொன்ன ராகுல்..
இதில் உச்சமாக, சிரஞ்சீவி செய்தது போல் தேமுதிகவையே கலைத்துவிட்டு காங்கிரஸில் சேர சொல்லி நிபந்தனை விதித்தாராம் ராகுல் காந்தி.. வெறுத்துப் போய் வெறுங்கையுடன் தமிழகம் வந்தார் விஜயகாந்த்

மாட்டுத் தரகர்- மணியன் விமர்சனம்
விஜயகாந்தின் இந்த பாணியை மாட்டுத் தரகருடன் ஒப்பிட்டு தமிழருவி மணியன் விமர்சனமும் செய்து பார்த்தார். வாயே திறக்கவில்லையே விஜயகாந்த்

மலேசியா, சிங்கப்பூர் பயணம்
பின்னர் மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு ஏதோ ஏதோ காரணங்களை சொல்லி விஜயகாந்த் பறந்து போனார். அங்கும்கூட கூட்டணி 'பேர" பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவர் தமிழகம் திரும்பிய பின்னரும் பாஜக, திமுக சார்பில் பரஸ்பரம் தூதர்கள் விஜயகாந்தை சந்தித்துப் பேசினர்.

பாஜக- திமுக
திடீரென பாஜகவில் பேரம் படிந்தது 14 சீட்டுக்கு ஒப்புக் கொண்டார் விஜயகாந்த் என்று காலையில் ஒரு செய்தி பரவியது. மாலையிலேயே திமுகவுக்கு போகிறார் விஜயகாந்த் என்று மற்றொரு செய்தி வெளியானது.

திடீர் அறிவிப்பு
இந்த நிலையில் திடீரென நேற்று பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது என்று தேமுதிக தலைமை கழகம் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியாகி 3 மாத சுற்றலுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது தேமுதிக.












Click it and Unblock the Notifications