பாஜக அணியில் தேமுதிக - இல. கணேசன், தமிழருவி மணியன் நம்பிக்கை
சென்னை: பாரதிய ஜனதா அணியில் தேமுதிக இடம்பெறுவது உறுதி என்று அக் கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன், காந்திய மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சென்னையில் ரெளத்திரம் மாத இதழின் 2-ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 2-வது ஆண்டின் முதல் பிரதியை மதிமுக பொதுச்செயலர் வைகோ வெளியிட தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். ரௌத்திரம் இதழுக்காக . தமிழருவி மணியனுக்கு வைகோ அளித்த பேட்டியின் டிவிடியை டி.எல்.மகராஜன் பெற்று கொண்டார்

இந்நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் பேசியதாவது:
தமிழகத்தில் பாஜக கூட்டணியில் மதிமுக இடம்பெறுவது உறுதி. கூட்டணியில் எந்தத் தொந்தரவும் கொடுக்காமல் உள்ள கட்சி அது. தேமுதிகவும் பாஜக கூட்டணியில் இடம்பெறுவது உறுதி. டெல்லியில் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினோம்.
நிச்சயம் பாஜக கூட்டணியில் தேமுதிக இடம்பெறும். திமுகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக பாஜக சிந்தித்துக்கூட பார்த்ததில்லை. அப்படியொரு கூட்டணி நிச்சயம் அமையவே அமையாது.
இவ்வாறு இல. கணேசன் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழருவி மணியன் பேசியதாவது:
பாஜகவை மதவாதக் கட்சி என்று அரசியல் ஆதாயத்துக்காகவே சில கட்சிகள் கூறுகின்றன. முஸ்லிம் லீக் என்ற கட்சியோடு கூட்டணி அமைத்துக்கொண்டு, மதவாதம் பற்றி பேசினால் அது சரியாக இருக்குமா?
உண்மையில் மதவாதமும், சாதியவாதமும் பேசுகிறவர்கள் தனிப்பட்ட முறையில் தங்களை வளர்த்துக் கொள்கிறார்களே ஒழிய, அந்த மதத்தைச் சார்ந்தவர்களுக்கும், சாதியைச் சார்ந்தவர்களுக்கும் அவர்களால் ஒரு பயனும் இல்லை.
பாஜகவை மதவாத கட்சி என்று சொல்வதற்கு திமுக தலைவர் கருணாநிதிகூட தற்போது தயங்குகிறார். ஏனெனில் பாஜக ஆட்சிக்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்று இப்போதே மோடி என் நண்பர் என கருணாநிதி ஒரு துண்டைப் போட்டு வைக்கிறார். பாஜகவுடனான கூட்டணியில் மதிமுக இடம்பெற்றுவிட்டது. நாளை விஜயகாந்த் வருகிறார். பாஜக கூட்டணியில் இடம்பெறுகிறார்.
முதலில், பாஜகவுடன் கூட்டணி அமைக்காமல், திமுகவுடன், காங்கிரஸூடன் கூட்டணி அமைக்கலாமா என்று ஒரு யோசனை விஜயகாந்துக்கு இடையில் வந்தது. இப்போது திமுக, காங்கிரஸோடு கூட்டணி வேண்டாம் என்று முடிவு எடுத்துள்ளார்.
பாஜக கூட்டணியில் அவர் நிச்சயம் இடம்பெறுவார். வேறு சில கட்சிகளும் கூட்டணியில் இடம்பெறுகின்றன. கூட்டணியில் பாமக இடம்பெறாவிட்டாலும் பாஜகவுக்கு நஷ்டம் ஒன்றுமில்லை.
இவ்வாறு தமிழருவி மணியன் பேசினார்.












Click it and Unblock the Notifications