ஜாகிரு, அண்ணனுக்காக விட்டுக் கொடுய்யா... தேமுதிக வேட்பாளரைக் கலாய்த்த திமுகவின் பெரியண்ணன் அரசு!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை சட்டசபைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பெரியண்ணன் அரசு மற்றும் தேமுதிக வேட்பாளார் ஜாகிர் ஆகியோர் எதிரும் புதிருமாக பிரசாரத்தின்போது சந்தித்துக் கொண்டனர். அப்போது தனக்காக விட்டுத் தருமாறு சிரித்துக் கொண்டே ஜாகிரிடம் அரசு கேட்க, அதற்கு ஜாகிர் சிரித்துக் கொண்டே அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
இரு வேட்பாளர்களும் தீவிரமாகப் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார்கள். பெரியண்ணன் அரசு திமுகவினரோடு திரண்டு சென்று ஓட்டு வேட்டையாடி வருகிறார். மறுபக்கம் ஜாகிருடன் மக்கள் நலக் கூட்டணியினர் பெரும் திரளாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்.

இந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் தொழுகைக்கு வரும் இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரிப்பதற்காக இருவரும் பள்ளிவாசலுக்கு வந்தனர். அப்போது எதிரும் புதிருமாக சந்தித்துக் கொண்டனர். இதனால் சிரித்துக் கொண்டே ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
அப்போது ஜாகிரைப் பார்த்து பெரியண்ணன் அரசு, ஜாகிரு, உங்க கட்சி தலைமைகிட்ட சொல்லக் கூடாதா. இந்த ஒரு முறை மட்டும் எனக்கு விட்டுத் தரச் சொல்லி. அண்ணனுக்காக விட்டுக் கொடுய்யா என்று கேட்க ஜாகிர் உள்பட அங்கு கூடியிருந்தோர் வாய் விட்டு சிரித்தனர். ஜாகிரும் சிரித்தபடியே பள்ளிவாசலை விட்டு வெளியே வந்தவர்களிடம் ஓட்டு வேட்டையாடினார்.












Click it and Unblock the Notifications