செம்பரம்பாக்கம்: போர்க்குற்றங்களுக்கு போல 'கட்டளை பொறுப்பு' சட்ட கொள்கையின் கீழ் விசாரணை தேவை- திமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு குறித்து "மிகப்பெரும் சோகத்துக்கு நேரடியாகவும் வெளிப்படையாகவும் பொறுப்பான முதலமைச்சர், அவரது சகாக்கள் மற்றும் உயர் அதிகாரிகள் போர்க் குற்றங்களுக்கு இருப்பதுபோல ‘கட்டளைப் பொறுப்பு' (Command responsibility) சட்டக் கொள்கையின் கீழ் விசாரிக்கப்படவேண்டும்" என்று ஆளுநர் ரோசையாவிடம் அளித்த மனுவில் தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.

ஆளுநர் ரோசையாவை இன்று மாலை சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி, சென்னையில் மழை வெள்ளத்தால் அழிவு ஏற்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து ஹைகோர்ட் நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய 5 பக்க மனுவை அளித்தார். அவருடன், திமுக பொருளாளர் ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன், பொன்முடி, டி.கே.எஸ். இளங்கோவன், வேலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 DMK chief Karunanidhi meets Governor Rosaiah on today

திமுக தலைவர் கருணாநிதி ஆளுநர் ரோசய்யாவிடம் அளித்த மனு:

அண்மையில் சென்னை மாநகரைச் சீரழித்த, முன்னெப்போதும் கண்டிராத வெள்ளம், ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசின் அலட்சியமான, கவனமற்ற, மக்கள் விரோத நிர்வாகத்தால் ஏற்படுத்தப் பட்டுள்ளது. இதன் விளைவாக மிகப்பெரும் எண்ணிக்கையிலான, துரதிர்ஷடவசமான அப்பாவி மக்களின் உயிரிழப்பும், ஏராளமான உடைமைகளின் இழப்பும் ஏற்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டின் பருவமழை தொடங்கியதிலிருந்து சென்னை மாநகரம் இடைவிடாத, முன்னெப்போதும் கண்டிராத மழையை எதிர்நோக் கியிருந்தது. மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சக வானிலை ஆராய்ச்சித் துறையின் புவி அமைப்பு அறிவியல் நிறுவனம் 15.10.2015 அன்று வெளியிட்ட பத்திரிகைச் செய்தியில், அத்துறை, தமிழ்நாட்டில் பருவமழை வழக்கமான அளவைவிட 112 சதவிகிதமும் அதற்கு மேலும் இருக்கலாம் என்றும், நீண்ட கால சராசரியைவிட கூடுதலாக இருக்கும் என்றும் முன்கூட்டியே தெரிவித்தது.

மேலும், 2015ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவ மழையால் தமிழ்நாட்டில் வழக்கமான மழையைவிட 90 சதவிகிதம் அதிகமாக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என்றும் அத்துறை எச்சரித்துள்ளது. சென்னை மாநகரில் டிசம்பர் 1 மற்றும் 2 தேதிகளில் மட்டும் 500 மில்லி மீட்டர் மழை பெய்யலாம் என்று சர்வதேச பருவநிலை ஆய்வுகள் தெரிவித்திருந்தன. சென்னையிலுள்ள வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பும் அதுபோலவே இருந்ததுடன், கடுமையான மழைக்குத் தயாராக இருக்கும்படி அரசை உரிய நேரத்தில் எச்சரித்தது.

செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு குறித்து வல்லுநர்களின் முன்னறிவிப்பும், உரியகால எச்சரிக்கைகளும் இருந்தும் கூட, உள்வரும் தண்ணீரைக் கொள்வதற்கும், எதிர்பார்க்கப்பட்ட மழையைச் சமாளிக்கவும் ஏதுவாக, ஏரியிலிருந்து படிப்படியாக நீரை வெளியேற்ற பொதுப் பணித்துறை நிர்வாகத்தினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

சர்வதேசப் பருவநிலை முன்னறிவிப்புகளும் வானிலை ஆய்வுத்துறையும் சென்னையில் டிசம்பர் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் 500 மிமீ மழை எதிர்பார்க்கப்படுவதாக அறிவித்திருந்த நிலையில், இவ்வளவு அதிகமான நீர் வரத்துக்கு செம்பரம்பாக்கம் ஏரியை பொதுப்பணித் துறையினர் தயார்படுத்தியிருக்க வேண்டும். இந்தப் பேரழிவை மாநில அரசு முன்கூட்டியே உணர்ந்து, இடைவிடாத மழையால் ஏற்படும் எந்தவிதமான ஆபத்தான நிலைமையையும், அதையடுத்து ஏரிக்கு வரும் மிக அதிகமான நீரையும் கையாள்வதற்கு முன்கூட்டியே தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கவேண்டும்.

24.11.2015க்கும் 30.11.2015க்கும் இடையில் சென்னையில் குறைந்த அளவு மழை பெய்தபோது ஏரியிலிருந்து வெளியேறிய நீர் குறைவாக இருந்தது, ஏரியின் மொத்தக் கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் 85 சதவிகிதத்திலிருந்து 90 சதவிகிதம் வரை கொள்ளளவு மட்டம் பராமரிக்கப்பட்டது. இது பொதுப்பணித்துறை நிர்வாகத்தினரின் மிகமோசமான, தவறான கணிப்பாகும்.

ஏனெனில் மதகுகளைத் திறந்து, நீரை அடையாறில் பாய விட்டு, கொள்ளளவு மட்டத்தை 75 சதவிகிதத்திற்கும் குறைவாக வைத்து இருந்திருந்தால் 1.12.2015 மற்றும் 2.12.2015 ஆகிய தேதிகளில் மிக அதிகமான நீர் திறந்துவிடப்பட்டதைத் தவிர்த்திருக்கலாம்.

இருப்பினும், நீர்மட்ட அளவினைப் பராமரிப்பதிலும், கொள்ளளவு மட்டத்தை மேலாண்மை செய்வதிலும் பொதுப் பணித்துறை அதிகாரிகளின் மெத்தனப் போக்கால், 1.12.2015 அன்று அதிகாலை 5.00 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகள் கண்மூடித்தனமாகத் திறக்கப்பட்டு, 33,500 கன அடி நீர், ஏற்கனவே முன்பு வெளியேற்றப்பட்ட நீர் மற்றும் இதர நீர் நிலைகளிலிருந்து திறந்துவிடப்பட்ட நீர் ஆகியவற்றால் பெருக்கெடுத்து ஓடிய நீர் அடையாறு ஆற்றில் திறந்துவிடப்பட்டது. """"அடையாறு ஆற்றில் ஒரு லட்சம் கன அடி நீர் பாய்ந்து கொண்டிருந்தது"" என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலைதான் சென்னையின் பல பகுதிகளை மூழ்கடித்தது. இதைவிட அதிர்ச்சியானது என்னவென்றால், காவல்துறையின் வழக்கமான செயல்பாட்டு முறைகள் முற்றிலுமாக அலட்சியப்படுத்தப்பட்டு விட்டன. உள்ளூர் மக்களை எச்சரிக்கை செய்ய காவல்துறை தவறிவிட்டது. பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை, காவல்துறை ஆகியவற்றுக்கிடையில் ஒருங்கிணைப்பு இருக்கவில்லை. இதன் விளைவாக மாநகரம் முழுவதும் அதன் புறநகர்ப் பகுதிகளும் சொல்லொணாத் துயருக்கும், சங்கடங்களுக்கும் உள்ளாக்கப்பட்டதுடன், கடந்த ஒருவார காலமாக மின்சாரம் இல்லை.

பெட்ரோல் டீசல் ஆகியவற்றிற்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி, டீசல் கிடைக்காததால் தொலைத்தொடர்பு சேவை அமைப்புகள் அறவே செயல்படவில்லை. தெருக்களில் பிணங்கள் மிதந்தன. ஏராளமானோர் தங்களது வீடுகளைவிட்டு வெளியேறி அவர்களுடைய சொந்த மாநகரிலேயே அகதிகளாயினர். மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதிலும், இயல்பு நிலையை மீட்பதிலும் மாநில நிர்வாகம் முற்றிலும் தவறிவிட்டது.

இத்தருணத்தில் நாங்கள் திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், திருநெல்வேலி, காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் இதர பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கடும் மழையால் பயிர்கள், உயிர்கள், உடமைகள் ஆகியவற்றுக்கு மிகப் பெருமளவில் ஏற்பட்டுள்ள சேதம் குறித்தும் நாங்கள் கவலைப்படுகிறோம். இதற்குப் போதுமான இழப்பீடு வழங்கப்படவேண்டும்

6.12.2015க்கு இரண்டு நாட்கள் முன்பே, வரவிருக்கும் ஆபத்து குறித்து பொதுப் பணித்துறையால் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்குத் தெரிவிக்கப்பட்டது என்றும், பின்னர் அடையாறு ஆற்றில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து மிகப்பெருமளவில் நீரைத் திறந்துவிடுவதற்கு முன்பே படிப்படியாக, கட்டம் கட்டமாக மதகுகளைத் திறந்துவிட அனுமதி கோரப்பட்டது என்றும் நாங்கள் அறிகிறோம். அச்செய்தியினை பொது மக்களும் உணருகிறார்கள்.

தலைமைச் செயலாளரும் அவரது மற்ற துறைகளின் செயலாளர்களும் முதலமைச்சரின் ‘ஆலோசகரது' தயவை எதிர்பார்த்திருந்தனர் என்றும், அவர் (ஆலோசகர்) மாண்புமிகு முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் ஆணைகளுக்காக காத்திருந்தார் எனவும் தெரிகிறது.

கொள்ளளவுக்கு மேல் ஏரி நிரம்பி வழிந்து, ஏரி உடைப்பு ஏற்பட்டுவிடும் ஆபத்து என்று அங்கிருந்த ஊழியர்கள் கதறிய பிறகுதான் அவர் மதகுகளைத் திறக்க ஆணையிட்டார் என்றும், அதன்படி அது 1.12.2015 அதிகாலையில் செய்யப்பட்டது என்றும் தெரிகிறது. அதுவும் மாநகர மக்களுக்கும், குறிப்பாக ஆற்றங்கரையில் உள்ளவர்களுக்கும் எச்சரிக்கை செய்யாமல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, ஏற்கனவே அடையாறு ஆற்றில் பெருமளவு நீர் பாய்ந்துவந்து கொண்டிருந்த நிலையில் 33,500 கன அடிக்கு மேல் நீர் கண்மூடித்தனமாகத் திறந்துவிடப்பட்டது நகரில் பெரும் வெள்ளத்தை ஏற்படுத்தியது, எனவே இது ‘இயற்கைப் பேரிடரல்ல' - மாறாக நூற்றுக்கணக்கான மக்களின் சாவில் முடிந்த, முதலமைச்சர் மற்றும் அவரது அரசின் அலட்சியத்தால் ஏற்பட்ட, மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரிடராகும்.

மேலும் அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தில் ஏராளமான மணலும் வண்டலும் படிந்து கடலுக்குள் நீர் பாய்வது தடைப்பட்டுள்ளது. கடந்த நான்கரை ஆண்டுகளில் அடையாறு ஆறோ, செம்பரப்பாக்கம் ஏரியோ தூர்வாரப்படவில்லை. அதன் காரணமாக இந்த மனிதர்களால் ‘உருவாக்கப்பட்ட பேரிடர்' ஏற்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகளிலுள்ள பல வீடுகளில் நீர் புகுந்து மொத்தம் 347 பேர் இறந்துள்ளதாகத் தெரிகிறது. உண்மையான சாவு எண்ணிக்கையை வெளியிட அரசு அஞ்சுகிறது. நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மத்திய அமைச்சர், தமிழகத்தில் மழை வெள்ளச் சாவுகளின் எண்ணிக்கை 269 என்று தெரிவித்தார். வெள்ள நீர் வடியாததால் இன்னமும் திறக்கப்படாமல் பூட்டியுள்ள வீடுகளில் மேலும் பலர் இறந்திருக்கக் கூடும். எனவே வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று குடியிருப்போர் நிலைமையை அறிய உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மக்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் இழப்பு மற்றும் அவர்களது உடைமைகளுக்கு ஏற்பட்டுள்ள பெரும் சேதம் ஆகியவை குறித்து தி.மு.க. மிகவும் கவலைப்படுகிறது. அரசால் அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீடு மிகவும் குறைவு ஆகும். அது போதுமானதல்ல. பாதிக்கப்பட்டவர்களை ஒவ்வொருவராக அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை விசாரித்து போதுமான இழப்பீடு வழங்கப்படவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளாட்சிகளின் அனைத்து வரிகளிலிருந்தும் விலக்கு அளித்து, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பயிர் மற்றும் வேளாண் கடன்களைத் தள்ளுபடி செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இயல்புநிலை மீட்கப்படும் வரையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச மின்சாரமும் தண்ணீரும் வழங்கவேண்டும். போதுமான உணவு மற்றும் அன்றாடத் தேவைகள் வழங்கப்படவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு நேரடியாக அவர்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வழங்கப்படவேண்டும். நிவாரண உதவி அளிக்கப்படுவதை அனைத்துக் கட்சிக்குழு கண்காணிக்க வேண்டும்.

மிகப்பெரும் சோகத்துக்கு நேரடியாகவும் வெளிப்படையாகவும் பொறுப்பான முதலமைச்சர், அவரது சகாக்கள் மற்றும் உயர் அதிகாரிகள் போர்க் குற்றங்களுக்கு இருப்பதுபோல ‘கட்டளைப் பொறுப்பு' (Command responsibility) சட்டக் கொள்கையின் கீழ் விசாரிக்கப்படவேண்டும்.

 DMK chief Karunanidhi meets Governor Rosaiah on today

எனவே, செம்பரம்பாக்கம் ஏரி மதகுகளைத் தாமதமாகத் திறந்ததற்கான காரணங்களைப் பற்றி விசாரித்து, பொறுப்பையும் நிர்ணயித்து மக்களுக்கு இழப்பீட்டையும் முடிவு செய்ய; சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது பதவியிலுள்ள ஒரு நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கும்படி மேதகு தமிழக ஆளுநர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கருணாநிதி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+