கூட்டணிக்கு அச்சாரம்?? பாமகவுடன் கைகோர்த்து.. நெமிலி ஒன்றியத்தை முதல்முறையாகத் தட்டித்தூக்கிய திமுக
ராணிப்பேட்டை: பாமகவுடன் கூட்டணி அமைத்து நெமிலி ஒன்றிய தலைவர் பதவியை முதல் முறையாக திமுக கைப்பற்றியுள்ளது. கூட்டணிக்கு இது அச்சாரமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2019இல் நடத்தப்பட்ட உள்ளாட்சித் தேர்தலின் போது புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்படவில்லை.
இந்தச் சூழலில் விடுபட்ட மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக இம்மாத தொட்டத்தில் தேர்தல் நடத்தப்பட்டது.

ஊரக உள்ளாட்சித் தேர்தல்
விடுபட்ட 9 மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் 2 கட்டங்களாக அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் அக். 12ஆம் தேதி எண்ணப்பட்டன. இதில் மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளுமே வெற்றி பெற்றிருந்தன.

நெமிலி ஊராட்சி
அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்து முடிந்த ஊராட்சி ஒன்றிய தேர்தலில் நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 19 வார்டுகளில் திமுக 8 வார்டுகளையும், பாமக 5 வார்டுகளையும், அதிமுக 4 வார்டுகளையும், சுயேச்சைகள் இரு வார்டுகளிலும் வெற்றி பெற்றனர். இதில், பாமகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக திமுக, அதிமுக இடையில் தொடர் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

மறைமுக தேர்தல்
கடந்த 22ஆம் தேதி நடைபெற இருந்த மறைமுகத் தேர்தல் நிறுத்தப்பட்டதுடன் தலைவர் பதவியைப் பொதுப்பிரிவினருக்கு இட ஒதுக்கீடு செய்ததுடன் அக்.30-ம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இந்நிலையில், நெமிலி ஒன்றியத்துக்கான தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுக கவுன்சிலர்களைத் தவிர்த்து மற்ற 15 கவுன்சிலர்களும் ஆஜராகினர். தலைவர் பதவிக்குத் திமுக சார்பில் வடிவேல் மனுத்தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பாமகவுக்குத் துணைத் தலைவர் பதவி
அதேபோல், பிற்பகல் 2 மணியளவில் நடைபெற்ற துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் பாமகவைச் சேர்ந்த கவுன்சிலர் தீனதயாளன் மனுத்தாக்கல் செய்தார். எதிர்த்துப் போட்டியிட யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் கூட்டத்திலும் அதிமுக கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை.

கூட்டணிக்கு அச்சாரம்?
நெமிலி ஒன்றியத்தில் பாமகவுக்குத் தலைவர் பதவியை அளித்து அதிமுகவுக்குத் துணைத் தலைவர் பதவியைப் பெறலாம் என்று அதிமுக எடுத்த முயற்சியை முறியடித்து பாமகவுடன் பேச்சு வார்த்தை நடத்தி திமுக நெமிலி ஊராட்சி ஒன்றியத்தைக் கைப்பற்றியுள்ளது. துணைத் தலைவர் பதவியைக் கொடுத்து பாமகவுடன் கூட்டணி அமைத்த திமுக, நெமிலி ஊராட்சி ஒன்றியத்தை முதல் முறையாகக் கைப்பற்றியுள்ளது. இதுவரை நெமிலி ஒன்றியத்தை அதிமுக, பாமக மட்டுமே கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் காலத்தில் திமுக மற்றும் பாமக இடையே கூட்டணி அமையலாம் என்ற தகவல் பரவி வரும் நிலையில், அதற்கான அச்சாரமாக இது இருக்கலாம் என்று புதிய யூகங்கள் கிளம்பியுள்ளன.












Click it and Unblock the Notifications