மதுரையில் திமுக முக்கிய நிர்வாகியின் மைத்துனர் வெட்டிக் கொலை
மதுரை: மதுரையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் திமுக முக்கிய நிர்வாகியின் உறவினர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
மதுரை மாநகராட்சியின் கிழக்கு மண்டல முன்னாள் தலைவர் வி.கே. குருசாமி. திமுக தலைமை செயற்குழு உறுப்பினராக உள்ளார். அவரது தங்கையின் கணவர் கஜேந்திரபாண்டி என்ற பாம்பு பாண்டி(40). மதுரை வாழை தோப்பில் வசித்து வந்த அவர் சொந்தமாக மினி லாரி வைத்திருந்தார். லாரியில் சரக்குகளை ஏற்றி இறக்கும் வேலை செய்து வந்தார்.
இன்று காலை லாரியை எடுத்துக் கொண்டு கீழமாரட்வீதியில் உள்ள வெங்காய மண்டிக்கு சென்றார். அந்த மண்டிக்கு அருகே லாரியை நிறுத்திவிட்டு சரக்குளை ஏற்றினார். அப்போது அங்கு வந்த 3 பேர் பாண்டியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீர் என்று தாங்கள் வைத்திருந்த அரிவாளை எடுத்து பாண்டியை சரமாரியாக வெட்டினர்.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி குற்றவாளிகள் தப்பியோடிவிட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்ட பாண்டி மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. சின்னமுனுசு என்பவரின் கொலை வழக்கில் கடந்த 2003ம் ஆண்டு பாண்டி மீது குற்றம்சாட்டப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். எனவே இந்த கொலைக்கு முன்விரோதம் அல்லது தொழில் போட்டி, கொடுக்கல் வாங்கல் விவகாரம் காரணமா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கொலை நடந்த இடத்தில் இருந்து 50 அடி தூரத்தில் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமராவில் கொலையாளிகளின் உருவம் பதிவாகியுள்ளதா என்றும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். பாண்டிக்கு அரியநாச்சி என்ற மனைவியும், 2 மகள்கள், 1 மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications