மதுரை திமுகவில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை: கருணாநிதியிடம் புலம்பிய அழகிரி ஆதரவாளர்கள்
சென்னை: உட்கட்சி தேர்தலில் மதுரை திமுக நிர்வாகிகள் குறைந்தபட்ச ஜனநாயகம்கூட இல்லாமல் நடந்து கொள்வதாக திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்த அழகிரி ஆதரவாளர்கள் முறையிட்டுள்ளனர்.
மதுரை திமுக முன்பு அழகிரியின் கோட்டையாக இருந்து. அழகிரி வைத்ததுதான் சட்டமாக இருக்கும். அழகிரியின் பிறந்தநாளை முன்னிட்டு ஒட்டப்பட்ட போஸ்டர்களால் கலகம் ஏற்படவே அழகிரி ஆதரவாளர்கள் பலர் கடந்த ஜனவரி மாதம் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர். கடந்த சில நாட்கள் கழித்து அழகிரியும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதனையடுத்து மதுரை திமுக இப்போது ஸ்டாலின் ஆதரவாளர்களின் கையில் இருக்கிறது.
மதுரை மாநகர் மாவட்டத்தில் உள்ள 100 வார்டுகளுக்கும் வட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பதவி களுக்கு அண்மையில் நியமனங்கள் மூலமாக நிர்வாகிகளை நியமித்துள்ளனர். இவற்றில் அழகிரி ஆதரவாளர்கள் பெரும்பாலானவர்களுக்கு பதவி கொடுக்காமல் தவிர்த்திருக்கிறது ஸ்டாலின் அணி.
மாநகர் மாவட்ட திமுக பொறுப்புக்குழுவில் தளபதி உள்ளிட்ட அத்தனை பொறுப்பாளர்களுமே இப்போது ஸ்டாலினின் ஆதரவாளர்கள். இதனால், உட்கட்சித் தேர்தலில் கட்சியின் கீழ்மட்ட அளவிலும் அழகிரி ஆதரவாளர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட 60 பேர் மாநகர் மாவட்ட முன்னாள் துணைச் செயலாளர் சிவகுமார், விவசாய அணித் தலைவர் துரைப்பாண்டியன், மண்டலத் தலைவர் சின்னான் உள்ளிட்டோர் தலை மையில் ஞாயிற்றுக்கிழமை, சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.
மனுவை பெற்றுக்கொண்ட கருணாநிதி, முரசொலியில் அறிவிப்பு வரும்போதுதான் பட்டியல் இறுதி செய்யப்படும். உங்க புகார் தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்போம் என்று கூறியதாக அழகிரி ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அழகிரியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு திமுக-வுக்கு எதிராக வேலை பார்த்தவர்களுக்கு எப்படி பதவி கொடுக்கமுடியும் என்பது ஸ்டாலின் தரப்பினர் கேள்வியாகும். நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குக் கேட்டவர்களுக்கு எப்படி பதவி கொடுக்க முடியும்?'' என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இதனிடையே, மதுரை மாநகர் மாவட்டத்தில் ஸ்டாலின் நடத்திய கருத்துக் கேட்புக் கூட்டத்தில், குற்றப் பின்னணி உள்ளவர்களுக்கும் ரவுடிகளுக்கும் கட்சி யில் முக்கியப் பதவிகளை கொடுத்துள்ளனர். இதை தவிர்க்க வேண்டும்" என கட்சிப் பொறுப்பாளர்கள் சிலர் ஸ்டாலினிடம் மனு கொடுத்துள்ளனராம். இதையடுத்து, குற்றப் பின்னணி உள்ளவர்களை பதவியிலிருந்து உடனடியாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி முக்கிய நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
எப்படியோ மதுரை திமுகவில் உட்கட்சி தேர்தலை முன்னிட்டு ஒரு கலகம் வர வாய்ப்புள்ளது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications