தமிழகத்தின் தலைவிதியை மாற்றாவிட்டால், "அம்மா நாடு" என பெயர் சூட்டிவிடுவார்கள்.. கருணாநிதி கடிதம்
சென்னை : வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டின் தலைவிதி மாற்றப்படாவிட்டால், தமிழ் நாட்டின் பெயரையே மாற்றி "அம்மா நாடு" என்று பெயர் வைத்தாலும் வைத்து விடுவார்கள் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
தற்போது "அம்மா" பெயர் இல்லாத திட்டங்கள் ஏதாவது இன்னும் பாக்கி இருக்கிறதா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து தொண்டர்களுக்கு கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது...

தந்தை பெரியார் அவர்களின் 137வது பிறந்த நாள் - பேரறிஞர் அண்ணா அவர்களின் 107வது பிறந்த நாள் - தி.மு. கழகத்தின் 67வது பிறந்த நாள் - என திராவிட இயக்கத்தின் மூன்று முக்கிய நிகழ்வு களையும் இணைத்துக் கொண்டாடுகின்ற முப்பெரும் விழாவினை மிகுந்த எழுச்சியோடு நடத்தி முடித்திருக்கிறோம்.
"இந்தக் கழகத்திற்காக நாம் என்ன செய்தோம் என்பதுதான் ஒவ்வொரு நாளும் நாம் நமக்குள் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி. அது எதிர்காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்லக்கூடிய சக்தி வாய்ந்த கேள்வி, வலிமை வாய்ந்த கேள்வி என்பதை நினைவூட்டி, அந்த நினைப்போடு இந்தக் கழகத்தை வெற்றிபெறச் செய்யுங்கள். நான் அடுத்து வருகின்ற தேர்தல் வெற்றியை மட்டும் குறிப்பிடவில்லை. அந்த வெற்றியை யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் பெற்று விடலாம். அதைப் பெறுவதற்கு பணம் மாத்திரம் இருந்தால் போதும் என்ற சூழ்நிலை இன்றைக்கு; ஜனநாயகம் வாழ்ந்த தமிழகத்தில் ஏற்பட்டிருக்கின்றது. ஜனநாயகம் புறக்கணிக்கப்பட்டு, பணநாயகம் தலை விரித்தாடுகின்ற காலத்தில் நாம் நம்முடைய இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். எனவே ஜனநாயகத்தைக் காப்பாற்ற, பண நாயகத்தை வீழ்த்த - சர்வாதிகாரத்திற்கு இடம் தராத ஒரு சூழ்நிலையை உருவாக்க அனைவரும் ஒன்றுபட்டுப் பாடுபட வேண்டும். இளைஞர்கள், மாணவர்கள், தமிழர்களாகப் பிறந்தவர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் இருக்கின்ற அத்தனை பேரும் இந்தச் சூளுரையை மேற்கொள்ள வேண்டும்" என்பதுதான் கடந்த ஆண்டு நான் கூறிய கருத்து.
அந்தக் கருத்துகள் கடந்த ஆண்டுக்கு மட்டும் உரிய கருத்துகள் அல்ல. இந்த ஆண்டிலும் நீங்கள் அனைவரும் மனதில் கொள்ள வேண்டிய கருத்தாகும். தமிழ்நாடு சட்டப்பேரவையின் பொதுத் தேர்தல் வர இன்னும் சில மாதங்கள்தான் உள்ளன. அடுத்த ஆண்டு முப்பெரும் விழா நடைபெறும்போது, தமிழ் நாட்டின் தலை விதி மாற்றப்பட்டிருக்கும். மாற்றப்பட்டாக வேண்டும். அந்தத் தலைவிதி மாற்றப்படாவிட்டால், தமிழ்நாட்டின் தலைவிதியே மாற்றப்பட்டு விடும். ஏன், தமிழ் நாட்டின் பெயரையே மாற்றி "அம்மா நாடு" என்று பெயர் வைத்தாலும் வைத்து விடுவார்கள்!
தற்போது "அம்மா" பெயர் இல்லாத திட்டங்கள் ஏதாவது இன்னும் பாக்கி இருக்கிறதா? "டாஸ்மாக்" கடைகளுக்கும் "அம்மா" பெயர் வைக்க வேண்டியதுதானே? தமிழ்நாட்டிலே ஜனநாயகம் என்ற ஒன்று இருக்கிறதா? சட்டமன்றம் என்ற ஒன்று இருக்கிறதா? அங்கே எதிர்க் கட்சிகள் இயங்க இடம் அளிக்கப்படுகிறதா? அரசை எதிர்த்து யாராவது ஒரு வார்த்தை கூற வாய்ப்பு அளிக்கப்படுகிறதா? கடந்த ஒரு மாதமாக சட்டப்பேரவை நடைபெற்றிருக்கிறது.
எந்த அறிவிப்பாக இருந்தாலும் "எனது தலைமையிலான அரசு" என்று பேச்சுக்குப் பேச்சுச் சொல்லிக் கொள்வதிலும், "நான் ஆணையிட்டேன்" என்று தனக்குத்தானே தட்டிக் கொடுத்துக் கொள்வதிலும்தான் நேரம் போகிறது. அமைச்சர்கள் மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதத்திற்குப் பதிலளிக்கும் போதாவது முதல்வர் அவையிலே இருக்கிறாரா?
பேரவையில் பிரதான எதிர்க்கட்சியான தே.மு.தி.க. உறுப்பினர்கள் மீதுள்ள நடவடிக்கையை ரத்து செய்து, ஜனநாயக மரபுகளைச் சற்று எண்ணிப் பார்த்து, அந்தக் கட்சி உறுப்பினர்களையும் அவை விவாதத்திலே பங்கேற்கச் செய்ய வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தேன். அதற்கு அரசுத் தரப்பில் எந்தப் பதிலும் தரவில்லை. பேரவை நடக்கும் போது, அரசின் சார்பாக முக்கியமான அறிவிப்புகளை அவையிலேதான் செய்வது வழக்கம். ஆனால் முதலீட்டாளர் மாநாடு சம்மந்தமான முக்கியமான அறிவிப்புகளை எல்லாம் முதலமைச்சர் பேரவையில் தெரிவிக்காமல், அந்த மாநாட்டில் அறிவித்தார். ஒருவேளை அவர்களே, அவற்றையெல்லாம் முக்கியமான அறிவிப்புகளாகக் கருதவில்லையோ என்னவோ?
110வது விதியின் கீழ் கடந்த நான்கு ஆண்டுகளில் முதலமைச்சர் ஜெயலலிதா செய்த அந்த அறிவிப்புகள் என்னவாயிற்று என்று விரிவாகக் கேட்டிருந்தேன். அதற்கு எந்தப் பதிலும் அரசுத் தரப்பில் இதுவரை சொல்லவில்லை. எல்லா அமைச்சர்களின் துறைகள் பற்றிய அறிவிப்புகளையும் முதலமைச்சரே படிக்கிறார். முக்கியமான பெரும் திட்டங்களையெல்லாம் கூட முதலமைச்சர் நேரில் செல்லாமல் "வீடியோ கான்பரன்ஸ்" மூலமாகத் தொடங்கி வைக்கிறார்.
கடந்த நான்காண்டு காலமாகத் தூங்கி விட்டு, தற்போது பொதுத் தேர்தல் வருகிறது என்றதும் திடீரென்று தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டைக் கூட்டுவதாக அறிவித்து, அதுவும் கேலிக் கூத்தாக முடிந்துள்ளது. யாரும் இந்த ஆட்சியை நம்பி - ஆட்சியாளர்களின் வெற்று வார்த்தைகளை நம்பி, தொழில் தொடங்குவதாக இல்லை. ஆனால் ஆட்சியினரின் கெஞ்சலுக்கு இசைந்து பல கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்குவதாக ஒருசிலர் அறிவித்திருக்கிறார்கள்.
ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதா இரண்டே நாள் மாநாட்டில் 2 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் தொழில் முதலீடு தமிழ்நாட்டிற்குக் கிடைத்துள்ளதாக அறிவித்தார். கடந்த ஓராண்டு காலத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 26 நாடுகளுக்குப் பயணம் செய்து அதன் மூலமாக இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் சேர்த்துக் கிடைத்த முதலீடே மொத்தம் 1 லட்சத்து 89 ஆயிரம் கோடி ரூபாய்தான் என்று மத்திய அரசின் தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் நமது முதலமைச்சர் இரண்டே நாளில் 2 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு முதலீட்டைப் பெற்றிருப்பதாகச் சொல்கிறார்.
இன்னும் சொல்லப்போனால், 2011ஆம் ஆண்டு ஜனவரியில், மோடி அவர்கள் குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த போது, சர்வதேச முதலீட்டாளர்களை அழைத்து இரண்டு நாள் மாநாடு ஒன்றினை நடத்தினார். அப்போது அவரிடம், 7 ஆயிரத்து 936 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, அதன் மூலம் 450 பில்லியன் டாலர், அதாவது 20.83 இலட்சம் கோடி ரூபாய்க்கான முதலீடுகளைக் குவிப்பதாக மாநாட்டுக்கு வந்திருந்த தொழில் முதலீட்டாளர்கள் எல்லாம் வாக்குறுதி அளித்தார்கள்.
ஆனால் உண்மையில் வந்த முதலீடு எவ்வளவு தெரியுமா? குஜராத், சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட 7,936 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், 2011ஆம் ஆண்டிலிருந்து 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை மொத்தம் 407 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்தான் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன; அதாவது அந்த மாநாட்டில் உறுதி அளிக்கப் பட்ட 20.83 இலட்சம் கோடி ரூபாய் முதலீடு கிடைக்கும் என்பதற்கு மாறாக, கடந்த நான்கரை ஆண்டுகளில், மோடி அவர்களின் பெரு முயற்சிகளுக்குப் பிறகும், 1 லட்சத்து 11 ஆயிரத்து 677 கோடி ரூபாய் முதலீடுகள்தான் குஜராத் மாநிலத்திற்குக் கிடைத்திருக்கின்றன என்றால், தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் அறிவிப்பு என்ன ஆகும் என்பது புரிகிறதா இல்லையா? கேழ்வரகில் நெய் வடியும் என்கிறார்களே; இவர்கள் சொல்வதையெல்லாம் நம்புவதற்கு, கேட்பவர்களுக்கு புத்தி இல்லையா என்ன?
ஜெயலலிதா பேசும்போது தொழில் முதலீட்டில் தமிழகம் முதல் இடத்தில் இருக்கிறது, மூன்றாம் இடத்தில் இருக்கிறது என்றெல்லாம் கூறினார். ஆனால் இன்று ஏடுகளில், இந்தியாவில் தொழில் தொடங்க சிறந்த மாநிலம் என்ற பட்டியலில் தமிழகம் 12வது இடத்தில் இருப்பதாக உலக வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் எங்கும், எதுவும் நடைபெறாத தேக்க நிலைமை உள்ளது. எதிர்க் கட்சியினரைத்தான் வெளியேற்றி விட்டோமே என்று, அமைச்சர்கள் எல்லாம் கேள்வி கேட்பவர் யாரும் இல்லை என்ற இறுமாப்பான எண்ணத்தோடு நடந்து கொள்கிறார்கள்; பேரவையிலேயே உண்மைக்கு மாறான செய்திகளைச் சொல்லுகிறார்கள்.
மின்சாரத்தில் மிகை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றி விட்டோம் என்று ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அறிவிக்கிறார்கள். ஆனால் உண்மை நிலைமையை மக்கள் அறிவார்கள். சென்னைத் தெருக்களிலே எரியும் விளக்குகளில் ஏதாவது ஒளி இருக்கிறதா? அதுபோலத்தான் குடிநீர்ப் பிரச்சினை. தாய்மார்கள் குடங்களைத் தூக்கிக் கொண்டு அலைகின்ற புகைப்படங்கள் தொடர்ந்து ஏடுகளில் வந்து கொண்டிருக்கின்றனவே? ஆனால் முதல் அமைச்சரிடம் அமைச்சர்களும், ஒரு சில அதிகாரிகளும் உண்மைக்கு மாறான வாக்குறுதிகளைக் கொடுக்கிறார்கள்.
தமிழகம் முழுவதிலும் மதுவிலக்குப் பிரச்சினை பற்றி எரிகிறது. சசிபெருமாள் என்ற காந்தியவாதியின் உயிரே போய் விட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் உடனடியாக மதுவிலக்கு கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று அறிக்கைகள் கொடுத்துள்ளன. நம்மைப் பொறுத்தவரையில் இன்னும் ஒரு படி மேலே போய் தி.மு. கழகம் ஆட்சிக்கு வந்தால் மது விலக்குக் கொள்கையை நடைமுறைப் படுத்துவோம் என்று திட்டவட்டமாக, தெளிவாக நான் அறிக்கையே கொடுத்து விட்டேன். ஆனால் ஆளுங்கட்சியினர் அதைப் பற்றி வாயே திறப்பதில்லை. மாறாக, அவர்களுக்கு வேண்டிய நபர்கள் நடத்தும் மதுபான உற்பத்தி தொழிற்சாலை கொள்ளை இலாபம் சம்பாதிக்க வழி வகை செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில்தான் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் வரவுள்ளது. ஆளுங்கட்சியினருக்கு உள்ள நம்பிக்கையெல்லாம் கோடிக்கணக்கிலே குவித்து வைத்திருக்கின்ற லஞ்சப் பணத்தைக் கொண்டு, மக்கள் வாக்குகளை வாங்கி விடலாம் என்று நப்பாசையோடு இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து ஒவ்வொரு கட்சியிலும் ஒரு சில முக்கியமானவர்களைக் "கொள்முதல்" செய்து, அவர்கள் மூலமாக எதிர்க்கட்சிகளிடம் தேர்தல் உடன்பாடு ஏற்படாமல் இருக்கப் பிரித்தாளும் முயற்சி மேற்கொள்கிறார்கள்.
அமைச்சர்களோ, தாங்கள் சம்பாதித்து வைத்திருக்கின்ற பணத்தில் ஒரு வாக்குக்கு எத்தனை ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கலாம் என்று கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். நம்மிடம் பணம் இல்லை - வாகன வசதிகள் இல்லை - பத்திரிகை பலம் இல்லை. ஆனால் மக்களின் தூய்மையான நல்லெண்ணமும் ஒத்துழைப்பும் நம் பக்கம்தான் இருக்கின்றது. நமக்கு வெற்றியைத் தேடிக் கொடுப்பவைகளும் அவைகளேயாகும்.
நடுநிலையோடு நடக்க வேண்டிய பெரும்பாலான நாளேடுகள் மற்றும் வார ஏடுகளில் ஒரு சில, பத்திரிகாதர்மத்தை மறந்து, விளம்பர மாயையில் சிக்கி, அரசின் முழுப் பக்க விளம்பரங்களைப் பெற்றால் போதும் என்று, ஆளுங்கட்சியினரின் அடாவடித்தனங்களையும், ஜனநாயக விரோதமான செயல்களையும், அரசின் முறைகேடுகளையும் சுட்டிக்காட்ட மறுக்கிறார்கள். அதே நேரத்தில், நமது கழகத்தைப் பற்றி எவ்வளவு சிறுமைப்படுத்தி எழுத முடியுமோ, அந்த அளவுக்கு எழுதுகிறார்கள் - செய்திகளை வெளியிடுகிறார்கள். துரும்பைத் தூணாக்கி, பேனைப் பெருமாளாக்கி, தூபம் போடும் தொழிலைத் தொடர்ந்து செய்கிறார்கள்.
இந்த நிலையில்தான் நாம் பொதுத் தேர்தலைச் சந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். அப்படி இருக்கிற நிலையில் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். "நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் அளந்து எடுத்து வைக்கிறேன்" (My steps are measured) என்று அண்ணா சொன்னபடி நாம் நடந்து கொள்ள வேண்டும். பெரியவர் பக்தவத்சலம், அந்தக் காலத்தில் சொல்வாரே, தி.மு.க. தொண்டன் என்றால் "சிங்கிள் டீ"யைக் குடித்து விட்டு அல்லும் பகலும் அயராமல் பணியாற்றுவான் என்று, அப்படிப்பட்ட தொண்டர்களாக நீங்கள் ஒவ்வொருவரும் மனமாற்றம் அடைந்திட வேண்டும்.
வாக்காளர் பட்டியலிலேயே ஆளுங்கட்சியினர், தேர்தல் ஆணையத்தின் தோள்களில் கை போட்டுக் கொண்டு மோசடி செய்ய முயற்சி செய்வது பற்றியெல்லாம் ஏற்கனவே தொடர்ந்து செய்திகள் வந்துள்ளன. உயிரோடு இல்லாதவர்களைப் பட்டியலிலே சேர்த்து, உயிரோடு இருப்பவர்களின் பெயர்களை எல்லாம் நீக்கி - சட்டத்துக்குப் புறம்பான இப்படிப்பட்ட தவறுகளையெல்லாம் கண்டறிந்து உரியவர்களிடம் புகார் கூறி, அவற்றைக் களைவதற்கான முயற்சியிலே ஈடுபட வேண்டும். கழக வழக்கறிஞர் அணியின் சார்பாக அந்தப் பணியிலே ஈடுபட்டுள்ளார்கள்.
தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக குழு ஒன்று அறிவிக்கப்பட்டு, அவர்கள் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன. கழகப் பொருளாளர், தளபதி மு.க.ஸ்டாலின், பிரச்சாரப் பணிகளிலே தீவிரமாக ஈடுபட்டு, கழகத்தின் முழு நேரத் தொண்டனாக மாநிலமெங்கும் பம்பரம் போல் சுற்றிச் சுழன்று பணியாற்றி வருகிறார். வரும், 20-9-2015 முதல் "நீண்ட நெடிய அணி வகுப்பு" என்பதைப் போல "நமக்கு நாமே" பயணத்தை மேற்கொண்டு தமிழகமெங்கும் மக்களைச் சந்தித்திட வரவிருக்கிறார். அவரது அந்தப் பிரச்சாரப் பயணத்தை மிக வெற்றிகரமாக ஆக்கித் தர வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு கழகத் தோழர்களுக்கும் உண்டு. நானும் அன்றாடம், உடன்பிறப்பு மடல்கள் வாயிலாகவும், அறிக்கை மூலமாகவும் உங்களோடு தொடர்பு கொண்டு உரையாடுவேன்.
இந்த முறையும் தமிழர்கள் ஏமாந்து விட்டால் பிறகு தலை நிமிரவே முடியாத நிலை ஏற்பட்டு விடும். இந்த முயற்சியிலே தோற்றுவிட்டால், பிறகு ஆப்பிரிக்க நாட்டிலே இருந்த நீக்ரோக்களும், அமெரிக்க நாட்டிலே இருந்த சிகப்பிந்தியர்களும் எந்தக் கதியைச் சந்திக்க நேர்ந்ததோ, அந்த நிலை தான் தமிழர்களுக்குக் கிடைக்கும். பால் பொங்கி வருகின்ற அந்தப் பக்குவமான நேரத்தில் தாய்மார்கள் குழந்தை அழுதாலும் எழுந்து போகமாட்டார்கள். வருகின்ற ஒரு சில மாதங்கள் பால் பொங்குகின்ற காலம் - இந்த மாதங்களில் யார் யார் நம்முடைய கருத்துக்களைக் கேட்க மறுக்கின்றார்களோ அவர்களுடைய செவி வழி நமது கருத்துகள் நுழைந்து உள்ளத்திலே தங்கி அவர்களையெல்லாம் நம் பக்கத்திலே ஈர்த்துக் கொண்டு வருகின்ற பக்குவமான காலம்.
ஆனால் மக்களுக்கு உண்மையான நிலை இப்போதுதான் புரியத் தொடங்கியிருக்கிறது. புரிந்து கொண்ட மக்கள் நம்மை நோக்கி வேகமாக வந்து கொண்டிருக்கிறார்கள். திசை மாறிச் சென்றவர்கள் எல்லாம், தி.மு. கழகமே தமிழகத்தின் நம்பிக்கை என்று தீர்மானித்து, நம் பக்கம் அணி வகுக்கத் தொடங்கி விட்டார்கள். இந்த நேரத்தில் நாம் சோம்பியிருந்து விடக் கூடாது. கடமை ஆற்றுவதிலிருந்து நழுவி விடக் கூடாது. 2016ஆம் ஆண்டுத் தேர்தலில் நமக்குத்தான் அதிகப் பொறுப்பு இருக்கிறது. அதை நீங்கள் மறந்து விடக் கூடாது.
எதிரிகளின் பண பலத்தையோ, சூழ்ச்சிகளையோ கண்டு பயப்படத் தேவையில்லை. நமது இலட்சியம் மிகத் தூய்மையானது. அது இந்த முறை நிச்சயம் வெற்றி பெற்றே தீரும் என்று உங்களுக்குத் தெரிவிப்பதுடன், வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமையாக உறுதியோடு ஒவ்வொருவரும் பாடுபட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications