எங்களிடமும் போராட்ட உணர்வு இருக்கிறது.. எப்போது என்பதை பின்னர் அறிவிப்போம்.. கருணாநிதி
சென்னை: காமன்வெல்த் விவகாரத்தில் எங்களிடமும் போராட்ட உணர்வுகள் இருக்கின்றன. யார், யார், எப்போது, எப்படி என்பதை முடிவெடுத்து அறிவிப்போம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இன்று காலை கருணாநிதி தலைமையில் திமுக சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்குப் பின்னர் கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அளித்த பதில்கள்...

என்ன ஆலோசிக்கப்பட்டது
செய்தியாளர்: இன்று நடைபெற்ற தி.மு. கழகச் சட்டமன்ற உறுப்பினர் கள் கூட்டத்தில் என்ன விவாதிக்கப்பட்டது ?
பதில்: இன்றைய தினம் மாலையில் தமிழகச் சட்டப் பேரவை யில் அரசினர் தனித் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்படுவதாகவும் - குறிப்பாக அது இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை குறித்ததாகவும் இருக்கும் என்று கருதப்படுவதால், அந்தக் கூட்டத்தில் தி. மு. கழகத்தின் நிலை குறித்து - நம்முடைய தி.மு.க. உறுப்பினர்கள் எப்படி பங்கேற்க வேண்டும், எப்படி பேச வேண்டும், நம்முடைய கருத்தை எந்த வகையிலே எடுத்து வைக்க வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் விவாதிக்கப்பட்டது.

சட்டசபை அமைதியாக நடக்க ஒத்துழைப்போம்
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக அரசின் சார்பிலே தீர்மானம் கொண்டு வரப்படுமேயானால், அதில் எத்தகைய கருத்து வேறுபாடும் இல்லாமல் ஒருமனதாக ஆதரித்து நிறைவேற்று வது தான் தமிழ்நாட்டு மக்களுடைய ஒற்றுமையை எடுத்துக்காட்டுவதாக இருக்கும் என்ற வகையில் நம்முடைய தி.மு.க. உறுப்பினர்கள் தீர்மானத்தை வெற்றிகரமாக அமைதியாக நடத்திச் செல்வது குறித்து இன்றைய காலைக் கூட்டத்திலே விவாதிக்கப்பட்டது.

உங்களோடு சேர்ந்து அங்கலாய்க்கிறோம்
செய்தியாளர்: காங்கிரசுக்கு தமிழகத்தில் உங்களை விட்டால் வேறு வழியில்லை. எதிர்காலத்தில் காங்கிரசைச் சுமக்கவேண்டிய ஒரு சூழல் உங்களுக்கு ஏற்படுமா?
பதில்: உங்களோடு சேர்ந்து நாங்களும் அங்கலாய்க்கிறோம்.

சல்மான் குர்ஷித் பங்கேற்பது குறித்து
செய்தியாளர்: பிரதமர் இலங்கை மாநாட்டினைப் புறக்கணித்தது குறித்து ஆறுதல் என்று சொன்னதும், சல்மான் குர்ஷித் செல்வது குறித்து விவாதத்திற்குரியது என்றும் நீங்கள் கூறிய கருத்து?
பதில்: நான் சொன்ன கருத்து அரைமனதாக சொல்லப்பட்டதே தவிர, முழு மனதாக ஆறுதல் தருகிறது என்று கூறவில்லை. ஓரளவுக்கு ஆறுதல் என்று தான் சொன்னேன். அதே நேரத்தில் நான் அதனை வரவேற்றும் சொல்லவில்லை. குர்ஷித் செல்வது பற்றியும் அது விவாதத்திற்குரியது என்று தான் கூறினேன்.

கடுமையான தீர்மானமாக இருந்தால்...
செய்தியாளர்: இன்று சட்டசபையில் கொண்டு வரப்படும் தீர்மானம், கடுமையாக மத்திய அரசைக் கண்டிக்கும் வகையிலே இருந்தால் தி.மு. கழகத் தின் நிலை என்ன?
பதில்: மத்திய அரசை வேண்டுமென்றே யாரும் கண்டிக்கப் போவதில்லை. நம்முடைய தமிழ்ச் சொந்தங்கள் இலங்கையிலே அனுபவித்து வருகின்ற தொல்லைகளையும், வேதனைகளையும் எடுத்துக்காட்டியும் கூட, மத்திய அரசு அதைத் தவிர்க்க உரிய நடவடிக்கைகளை இதுவரையில் மேற்கொள்ளாததைச் சுட்டிக் காட்டவும், குறைந்த பட்சம் காமன்வெல்த் மாநாட்டிலே இலங்கையைப் புறக்கணித்து விட்டு, அதற்குச் செல்லாமல் இருக்கக் கூட இந்திய அரசு -- எங்களுடைய கருத்தை முழுமையாக கேட்கவில்லை. அதற்கு நாங்கள் எங்களுடைய அதிருப்தியை வெளியிட வேண்டியவர்களாக இருக்கிறோம்.

ஓரளவுக்குத்தான் ஆறுதல்
பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் காமன்வெல்த் மாநாட்டிற்கு போக வில்லை என்பதைப் பற்றி நிருபர்களாகிய நீங்கள் கேட்ட போதே அது ஓரளவிற்குத் தான் ஆறுதல் என்று நான் சொல்லி யிருக்கிறேன். "இந்தியாவிலிருந்து இலங்கை காமன்வெல்த் மாநாட்டிற்கு ஒரு "துரும்பு" கூடச் செல்லக் கூடாது என்பது தான் எங்களுடைய திட்டவட்டமான கருத்து" என்று சொல்லியிருக்கிறேன்.
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியாவிலிருந்து யாரும் போகக் கூடாது என்பதே திட்டவட்ட கருத்து

பாமக புறக்கணிக்கிறதே...
செய்தியாளர்: பா.ம.க. இன்றைய சட்டமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள வில்லை என்று முடிவெடுத்திருக்கிறதே?
பதில்: அரசு கொண்டு வரப் போகிற தீர்மான வாசகங்கள் என்ன வென்று தெரியவில்லை. எந்தக் கருத்தின் அடிப்படையில் பா.ம.க. இன்றைய கூட்டத்தைப் புறக்கணிக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை.

காமன்வெல்த் குறித்த விமர்சிக்க மாட்டோம்
செய்தியாளர்: காமன்வெல்த் "பல் இல்லாத புலி", அதிலே கலந்து கொள்வதில் பிரயோஜனம் இல்லை என்று ஒரு கருத்துச் சொல்லப்படுகிறதே?
பதில்: காமன்வெல்த் மாநாடு பற்றி செய்யப்படுகின்ற விமர்சனங்களுக்குப் பதிலளிக்க நாங்கள் தயாராக இல்லை. ஏனென்றால் பல நாடுகள் கலந்து கொள்கிற ஒரு கூட்டத்தில் நீங்கள் சொன்னதைப் போல அதை விமர்சிக்க நான் தயாராக இல்லை.

சல்மானை எதிர்த்துப் போராட்டமா...
செய்தியாளர்: இலங்கை கூட்டத்தில் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்வதை எதிர்த்து, தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்துவீர்களா?
பதில்: அதற்காக தி.மு.க. சார்பில் நம்முடைய எதிர்கருத்தை நாங்கள் தெரிவித்திருக்கிறோம். குர்ஷித் இலங்கைக்குத் தற்போது செல்வது பற்றி எங்களுடைய எதிர்க் கருத்தை நாங்கள் ஏற்கனவே தெரிவித்திருக்கிறோம். ஆனால் அவர் செல்வதை எதிர்த்து இப்போது போராட்டம் நடத்துவதாக இல்லை. இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக ஒன்றல்ல, இரண்டல்ல, பல போராட்டங் களை தமிழர்கள் சார்பில் தேவைப்படுகிற போது நடத்துகிறோம். இதற்காகப் போராட்டம் தேவைப்படுமானால், நாங்கள் நிச்சயம் நடத்துவோம்.

தீர்மானத்தை ஆதரிப்பது கடமை
செய்தியாளர்: இப்படிப்பட்ட சூழ்நிலையில் மத்திய அரசை வெகுவாகக் கண்டித்து ஒரு தீர்மானம் சட்டசபையிலே வந்தால் உங்களுக்கு ஆட்சேபணை இருக்குமா?
பதில்: தமிழர்களின் நலன்களுக்காக அந்தக் குறிக்கோளோடு தீர்மானம் வருமேயானால் இலங்கையிலே வாடிக் கொண்டிருக்கின்ற - அனாதைகளாக - அபலைகளாக ஆக்கப்பட்டிருக்கின்ற தமிழர்களுக்கு கை கொடுக்கும் வகையில் வருகிற தீர்மானத்தை ஆதரிப்பதை நாங்கள் எங்களுடைய கடமையாகக் கருதுகிறோம்.

நான் உட்காருவதற்கு சட்டசபையில் இடமில்லையே...
செய்தியாளர்: முக்கியமான இந்தத் தீர்மானம் பேரவையில் கொண்டு வரப் படுகின்ற நேரத்தில், இன்று நடைபெறும் பேரவைக் கூட்டத்தில் நீங்கள் கலந்து கொள்வீர்களா?
பதில்: நான் சென்று அமருவதற்கு ஏற்ப, அங்கே எனக்கு அமர இடம் இல்லை.

ஆதரவு மாறுமா...
செய்தியாளர்: இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசினை எதிர்த்து உங்கள் வலுவான எதிர்ப்பைக் காட்டுகின்ற வகையில், மத்திய அரசுக்கு "பிரச்சினைகளைப் பொறுத்து"" வெளியிலிருந்து தருகின்ற ஆதரவை திரும்பப் பெறுவீர்களா?
பதில்: ஆதரவு என்பது காங்கிரசுக்காக அல்ல; "பிரச்சினைகளைப் பொறுத்து""த் தான் ஆதரவு.

திமுக சார்பில் போராட்டம் வரும்
செய்தியாளர்: இந்தப் பிரச்சினையை முன் வைத்து தி.மு. க. சார்பில் பந்த், மறியல் நடத்துவீர்களா?
பதில்: எங்கள் கட்சியிலும் அத்தகைய போராட்ட உணர்வுகள் இருக்கின்றன. யார் யார் எப்போது எந்த இடத்தில் என்பது பற்றி பின்னர் முடிவெடுக்கப்படும் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications