65 மாவட்டங்களாக திமுக பிரிப்பு! பலன் தருமா? பகை வளர்க்குமா?
சென்னை: திமுகவில் தற்போது இருக்கும் மாவட்ட அமைப்புகளை 65 ஆக பிரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் பலன் தருமா? பகை வளர்க்குமா என்பது நியமிக்கப்பட இருக்கும் புது மாவட்ட செயலர்களை வைத்து தெரிந்துவிடும்.
லோக்சபா தேர்தலில் திமுக படுதோல்வியை சந்தித்தது. இதற்கு காரணமாக கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின், மாவட்ட செயலாளர்களின் பேச்சை அப்படியே கேட்டு வேட்பாளர்களை அறிவித்ததுதான் என்பது பொதுவான குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.
இதைத் தொடர்ந்து கடந்த 2-ந் தேதி சென்னையில் திமுகவின் உயர்நிலை செயல்திட்டக் குழு கூடி விவாதித்தது. அக்கூட்டத்தில் திமுகவை வலுப்படுத்துவதற்கு ஒரு குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

6 பேர் குழு
பின்னர் கலசப்பாக்கம் திருவேங்கடம், ஒரத்தநாடு ராஜமாணிக்கம், திருத்துறைப்பூண்டி டி.எஸ்.கல்யாணசுந்தரம், ஈரோடு எஸ்.எல்.டி.சச்சிதானந்தம், வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் அடங்கிய 6 பேர் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் கூட்டம் சென்னையில் அண்மையில் நடைபெற்றது.

சென்னையில் ஆலோசனை
இந்த கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி, பொதுச்செயலர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஸ்டாலின் நிலை மாற்றம்
தொடக்கத்தில் மாவட்ட செயலாளர்களை மாற்றக் கூடாது; அப்படி மாற்றினால் தமது ஆதரவாளர்கள் எண்ணிக்கை குறைந்துவிடும் என்று கருதினார் ஸ்டாலின். ஆனால் பின்னர் தனது நிலையை மாற்றிக் கொண்டார். அதாவது தற்போதைய மாவட்ட செயலாளர்களை மாற்றாமல் அதே நேரத்தில் அவர்களது 'ஆளுகை'ப் பகுதியை பிரிப்பது என்று சென்னையில் நடைபெற்ற சீரமைப்பு தொடர்பான கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

ஒரு மாவட்டத்து 4 சட்டசபை தொகுதிகள்
அக்கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்தையும் 3 அல்லது 4 ஆக பிரித்துவிடுவது.. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அதிகபட்சம் 4 சட்டசபை தொகுதி இருந்தால் போதுமானது என்று கருணாநிதி வலியுறுத்தியிருக்கிறார். தற்போது விழுப்புரம், வேலூர் மாவட்டங்களில் 11 சட்டசபை தொகுதிகள் இருக்கின்றன. திருச்சி மாவட்டத்தில் 9 சட்டசபை தொகுதிகள் இருக்கின்றன. இதனால் மாவட்டங்களை பிரிப்பது என்ற இறுதி முடிவெடுக்கப்பட்டது.

முன்பும் அப்படித்தான்
அதே நேரத்தில் மற்றொரு விவகாரமும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. 1996ஆம் ஆண்டு இதேபோல் திமுகவில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் மாவட்ட செயலாளர்களுக்கு எதிராக முரசொலி மாறன் போர்க்கொடி தூக்கினார். அதற்கு அப்போதைய சேலம் மாவட்ட செயலாளர் வீரபாண்டி ஆறுமுகம் போன்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆதரவாளர்களுக்கே பதவிகள்
அதன் பின்னர் மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட போதும் மாவட்ட செயலாளர்களாக இருந்தவர்கள், தங்களது ஆதரவாளர்களை, வாரிசுகளையே பிரிக்கப்பட்ட மாவட்டங்களின் செயலாளர்களாக்கினர். இதனால் முரசொலி மாறன் கடும் கோபமடைந்தார். அப்படி ஒரு நிலைமை மீண்டும் வந்துவிடக் கூடாது என்றும் திமுகவினர் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.

150 பக்க பரிந்துரை
இந்த நிலையில்தான் சீரமைப்புக் குழுவினர் திமுக தலைமையிடம் தங்களது பரிந்துரைகளை அளித்துள்ளனர். மொத்தம் 150 பக்க அறிக்கை கொண்ட அந்த பரிந்துரையில் திமுகவின் மாவட்டங்களை 50 முதல் 70 வரை பிரிக்கலாம் என்று கூறியிருக்கின்றனர்.

மா.செ.க்களின் எகத்தாளம்
இது குறித்து கருத்து தெரிவித்த சில மூத்த மாவட்ட செயலாளர்கள், மாவட்ட செயலாளர்களாக யார் வேண்டுமானாலும் வரட்டும்.. எங்களுக்குத்தான் செலவு மிச்சம் என்று எகத்தாள தொனியில் கூறி வருகின்றனராம். ஆனால் மு.க.ஸ்டாலினோ தமது ஆதரவு மாவட்ட செயலாளர்களிடம் எந்த ஒரு கருத்தையும் பகிரங்கமாக தெரிவிக்க வேண்டாம் என்று கண்டிப்புடன் கூறியிருக்கிறார்

65 மாவட்டங்கள்
இந்த பின்னணியில்தான் திமுக தற்போது 65 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இனி நியமிக்கப்பட இருக்கிற இந்த புதிய மாவட்ட செயலர்களாள் பலன் தருமா? பகை வளருமா? என்பது விரைவில் தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications