அழகிரி பிறந்த நாளுக்குப் போனால்.. திமுகவினருக்கு மேலிடம் கடும் எச்சரிக்கை
சென்னை: மு.க.அழகிரி திமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளதால் அவருடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது. அவரது பிறந்த நாளில் அவருக்கு வாழ்த்துக் கூறப் போனாலோ அல்லது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக தலைமை தென் மாவட்ட கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாம்.
சமீபத்தில் சென்னைக்கு வந்து தன்னைச் சந்தித்த தென் மாவட்ட திமுக செயலாளர்களிடம் இந்த எச்சரிக்கையை கட்சித் தலைவர் கருணாநிதியே நேரடியாக விடுத்ததாக கூறப்படுகிறது.
ஜனவரி 30ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார் அழகிரி. கட்சியை விட்டு அவரை நீக்கி விட்டதால் இந்த முறை அழகிரியின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட அவரது ஆதரவாளர்கள் தயாராகி வருகின்றனர்.

மேலும் தங்களது பலத்தைக் காட்ட இது சரியான சந்தர்ப்பம் என்ற எண்ணத்திலும் அவர்கள் முனைப்புடன் இறங்கியுள்ளனர். தங்கள் பக்கம் யாரெல்லாம் உள்ளனர் என்பதையும் காட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
12 தென் மாவட்டங்களைச் சேர்ந்த முக்கியப் புள்ளிகளை அழகிரி பக்கம் திரட்டிக் கொண்டு வந்து நிறுத்தும் திட்டமும் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் திமுக தலைமை கலக்கமடைந்துள்ளது. அப்படி நடந்து விட்டால் திமுக பிளவுபட்டு விட்டது போன்ற தோற்றம் ஏற்படும் என்பதால் யாரும் அழகிரி பிறந்த நாளுக்குப் போகக் கூடாது. குறிப்பாக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் போகவே கூடாது என்று கட்சித் தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளதாம்.
ஆனால் இந்த எச்சரிக்கையையும் மீறி பல முக்கியப் புள்ளிகளை அண்ணன் பிறந்த நாளன்று அவருடன் பார்க்கலாம் என அழகிரி ஆதரவாளர்கள் புன்னகையுடன் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications