உங்களுக்கு ஒரு கதை சொல்லட்டா.. காப்பி அடிக்காதீங்க.. காலி ஆயிடுவீங்க!
நீங்க காப்பி அடிச்சிருக்கீங்களான்னு கேட்டா என்ன சொல்வீங்க? பரீட்சையில காப்பி அடிச்சிருந்தா ஆமான்னு சொல்லுவோம், இல்லேன்னா இல்லைன்னு சொல்லுவோம். நீங்க பரீட்சையில் காப்பி அடிக்காமல் எழுதிய புத்திசாலி மாணவராக இருக்கலாம். ஆனால் வாழ்க்கையில்? நமக்கே தெரியாமல் நாம எல்லோருமே காப்பி அடிக்கிறோம். சரி அதனால் என்ன பெருசா ஆகிடும்னு கேட்கிறீங்களா? உங்களுக்கு ஒரு கதை சொல்லட்டுமா?
ஒரு பிரபல அரசியல்வாதியும், ஒரு பிரபல ஆன்மீகவாதியும் நண்பர்கள். ஒருநாள் சாமியார் தன்னோட ஆசிரமத்தில் நடந்த ஒரு கூட்டத்திற்கு தன் அரசியல் நண்பரை கூப்பிட்டிருக்கார். அந்த கூட்டத்தில் பேசும்போது, சாமியார்... என் வாழ்க்கையிலேயே நான் ரொம்ப சந்தோஷமா இருந்த நேரம்னா அது ஒரு பெண்ணின் மடியில் இருந்த நேரம்தான். அந்த பெண் யார் தெரியுமான்னு கேட்டாராம். சாமியார் இப்படி கேட்டதும் கூட்டத்தில ஒரே அமைதி.
இவர் என்ன சொல்ல வர்ராருன்னு பக்தர்கள் எல்லாம் பதைபதைப்போடு பார்க்குறாங்க. நம்ம அரசியல்வாதியும் ஆர்வமா பார்க்குறார். கொஞ்சம் நேரம் கழிச்சு சாமியார் பொறுமையா சொன்னாராம், அந்த பெண்தான் என் தாய். ஆமாம், குழந்தையா என் அம்மா மடியில இருந்த போதுதான் நான் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருந்தேன்னாராம். உடனே கூட்டத்துல ஒரே கைதட்டல், ஆராவாரம். இதைப் பார்த்த நம்ம அரசியல்வாதி, அடடே அற்புதமான பாயிண்டா இருக்கே, நாமும் எங்கேயாவது இதை அடிச்சுவிட வேண்டியதுதான் என்று நினைத்துக் கொண்டாராம்.

கல்லூரியில்
கொஞ்ச நாள் கழிச்சு ஒரு பெண்கள் கல்லூரியில் நம்ம ஆளை பேசுறதுக்கு கூப்பிட்டிருக்காங்க. அங்க போன நம்ம அரசியல்வாதி, சாமியார் கிட்ட காப்பி அடிச்ச மேட்டரை அவிழ்த்துவிட ஆரம்பிச்சார். நான் வாழ்க்கையிலே ரொம்ப சந்தோஷமா இருந்தது ஒரு பெண்ணின் மடியில்தான், அந்த பெண் யார் தெரியுமா? என்று மாணவிகளைப் பார்த்து கேட்டாராம். மாணவிகள் மட்டுமில்லாம பேராசிரியர்களுக்கும், கல்லூரி நிர்வாகத்தினருக்கும் திக்குன்னு ஆகிருச்சாம். இந்த ஆளு என்னய்யா சொல்ல வர்ராருன்னு மிரண்டு போய் பார்த்திருக்காங்க.

அடடா யாருப்பா அது
மெல்ல புன்னகை சிந்திய நம்ம அரசியல்வாதி, அந்த பெண்தான்... என்று சொல்ல வரும்போது, அடுத்து என்ன சொல்றதுன்னு மறந்து போச்சாம். அந்த பொண்ணு யாருன்னா...ன்னு கொஞ்சம் அப்படியே இழுத்திருக்காரு. அப்பவும் அண்ணனுக்கு ஒண்ணும் ஞாபகத்துக்கு வரல. இப்போ இந்த மேட்டரை அப்படியே விடவும் முடியாது. என்ன பண்றதுன்னு யோசிச்ச அரசியல்வாதிக்கு ஒரு ஐடியா வந்துச்சு. அந்த பெண் யார் என்பது என் நண்பரான சாமியாருக்குத்தான் தெரியும்னு ஒரே போடா போட்டாராம். அவர் மரியாதையும் போய், சாமியார் மரியாதையும் சந்தி சிரிச்சிடுச்சாம்.

கற்றுக் கொடுத்த சொல்
கட்டிக் கொடுத்த சோறும், கற்றுக் கொடுத்த சொல்லும் நீண்ட காலம் உடன் வராது என்பார்கள். அடுத்தவர்களைப் பார்த்து அதைப் போல நாமும் இருக்க வேண்டும் என்று அதை அப்படியே காப்பி அடித்தால் கடைசியில் அவமானம்தான் மிஞ்சும். எனக்குத் தெரிந்த ஒருவர், தன் அலுவலக நண்பர் ஷேர் மார்க்கெட்டில் நல்லா சம்பாதிக்கிறார் என்று சொல்லிக் கொண்டே இருந்தார். தானும் அதுபோல சம்பாதிக்க ஆசைப்பட்டு, ஷேர் மார்க்கெட்டில் போட சொல்லி யாரிடமோ பெரிய தொகையை கொடுத்து கையை சுட்டுக்கொண்டார்.

இப்படியாகிப் போச்சே
ஈமு கோழி வளர்த்தால் நல்ல காசு என்ற விளம்பரங்களைப் பார்த்து நம்மாள் ஒருத்தர் 5 ஈமு கோழிகளை வாங்கி, அதன் பின்னாடி கொஞ்ச காலம் ஓடிக் கொண்டிருந்தார். ஈமு கோழி வளர்ப்புல எப்படி எல்லாம் லாபம் கிடைக்குது, ஈமு கறி இவ்ளோ ரூபாய்க்கு விலை போகும், முட்டை இவ்ளோ ரூபாய்க்கு போகும், எண்ணெய் இவ்ளோ ரூபாய்க்கு போகும் என்று வீட்டுக்கு வந்த விருந்தாளிகளை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தார். சில மாதங்களிலேயே ஏதோ நோய் வந்து அஞ்சும் அகால மரணம் அடைந்து அன்னாரை ஆற்றவொண்ணா துயரில் ஆழ்த்திட்டு போயிடுச்சிங்க. அதுக்கப்புறம் அவர் வீட்டு ஆளுங்க, அவரை போட்டு வாட்டி வதக்குனதுல, இப்போ சாப்பிடுற நேரம் தவிர வேற எப்பவும் அண்ணன் வாயே திறக்குறதில்லே.

விசாரிக்காம போய் மாட்டிக்கிறது
பக்கத்து வீட்டுக்காரன் ஃபாரின் போயிட்டான்னு, நாமளும் ஒழுங்கா விசாரிக்காம எங்கேயாவது போய் மாட்டிகிட்டு முழிக்கிறது. சொந்தக்கார பையன் ஏதோ கம்ப்யூட்டர் கோர்ஸ் படிக்கிறான்னு, நம்ம புள்ளைய அந்த படிப்புல போட்டு திணிக்கிறது. தெரிஞ்ச நண்பர் வேலையை விட்டுட்டு பிசினஸ் பண்ணி நல்ல நிலைமைக்கு வந்துட்டா, உடனே நாமளும் வேலையை விட்டுட்டு ஏதோ ஒரு பிசினசில் காலைவிட்டு கையை சுட்டுக்கிறது. இப்படி காப்பிகளில் பல விதம் இருக்கு.

காப்பி அடிப்பதுதான் தப்பு
வாழ்க்கையில அடுத்தவர்களைப் பார்த்து நாமும் முன்னேறனும்னு நினைக்கிறது தப்பு இல்லை. ஆனா அவங்க பண்ண அதே விஷயங்களை கண்ணை மூடிக்கிட்டு காப்பி அடிக்கிறதுதான் தப்பு. நம்ம ஊர்ல சினிமாவில் கொடிகட்டிப் பறந்த ஜாம்பவான்கள் எம்ஜிஆரும், சிவாஜியும். எம்ஜிஆர் அரசியலிலும் வெற்றிக்கொடி நாட்டினார். ஆனால் சினிமாவில் மக்கள் திலகத்துக்கு சரியான போட்டியாக இருந்த நடிகர் திலகத்தால், அரசியலில் எம்ஜிஆரின் பக்கத்தில் கூட வர முடியவில்லை. காரணம் அரசியலுக்கு தேவையான பல திறமைகள் சிவாஜி கிட்ட போதுமான அளவுக்கு இல்லை.

கொஞ்ச நஞ்ச கஷ்டமா
பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், தானும் ஒரு தொழில் அதிபர் ஆகணும்னு ஆசைப்பட்டு ஏபிசி கார்ப்பொரேஷன் நிறுவனத்தை ஆரம்பிச்சார். ஆனால் ரூ 90 கோடி கடனாளி ஆனதுதான் மிச்சம். அதில் இருந்து மீண்டு வர அவர் பட்ட கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல. தனிக்கட்சி ஆரம்பிச்சு அரசியல் ரூட்டு பிடிச்ச ஆந்திர மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதை என்ன ஆச்சுன்னு எல்லோருக்கும் தெரியும். இப்படி ஆயிரம் உதாரணங்களை அடுக்கிட்டே போகலாம்.
அதேபோல யாரையும் காப்பி அடிக்காமல் தங்களின் தனித்தன்மையால் வெற்றிகளை குவிச்சவங்களின் பட்டியலும் ரொம்ப நீளமானது. ஹீரோன்னா வெள்ளையா இருக்கணும் என்ற எண்ணத்தை உடைச்சு கருப்பா இருந்தாலும், தன் அட்டகாசமான ஸ்டைலால் சூப்பர் ஸ்டார் ரஜினியான சிவாஜி ராவ் முதல் ஒல்லிகுச்சி மாதிரி இருந்தாலும் தன் மண்மணக்கும் மதுரைத் தமிழாலும், உடல் அசைவுகளாலும் பட்டையைக் கிளப்பிய வைகைப் புயல் வடிவேலு வரை நிறைய பேரின் வெற்றிக்கு அவர்களின் ஒரிஜினாலடிதான் முக்கிய காரணம்.

புரிஞ்சிக்கிட்டு வாழுங்கப்பா
இதில் இருந்து சொல்ல வர்ர நீதி என்னென்னா, ஆளாளுக்கு ஒரு திறமை, ஒரு சூழல் இருக்கு. அதை முழுசா புரிஞ்சிகிட்டு வாழ்ந்தாலே நீங்க ஜெயிச்சுடுவீங்க. இந்த உலகத்துலேயே போனா திரும்ப கிடைக்காத விலை மதிப்பற்ற ஒரு விஷயம்னா அது நேரம்தான். நீங்க என்னதான் உருண்டு, புரண்டாலும் கடந்து போன காலத்தை மீண்டும் கொண்டு வரவே முடியாது. அப்படி இருக்கும்போது, யார் யார் வாழ்க்கையையோ வேடிக்கை பார்த்து, அதையே நாமும் வாழணும்னு முயற்சி பண்ணி, ஏன் நம்ம பொன்னான நேரத்தை வீணடிக்கணும்?

வருவதை செய்வோம்
அந்த ஃபீல்டுல நல்ல காசு, இந்த படிப்பு படிச்சா நல்லா சம்பாதிக்கலாம்ன்னு நினைக்கிறதை விட்டுட்டு, நமக்கு எது இயல்பா வருதோ அதை செய்தால்தான் பெரிய அளவில் சாதிக்க முடியும். உடம்பும், மூளையும் மட்டும் வேலைக்கு போதும் என்று நினைத்தால் ஒரு அளவுக்கு மேல் வேலையில் சாதிக்க முடியாது. முழுமனதும் ஒன்றிப் போய் செய்யக் கூடியதா அந்த வேலை இருந்தால்தான் அதில் நீங்கள் சாதனையாளராக முடியுமாம். முழுமனசையும் செலுத்தி ஒரு வேலையை செஞ்சாதான் அதில் உங்களின் தனித்தன்மை தெரியும். தனித்தன்மை பளிச்சுன்னு தெரிஞ்சா தான், அது அனைவராலும் பாராட்டப்படும், மதிக்கப்படும் பொருளாவும் மாறும். சுருக்கமா சொன்னா, நீங்க நீங்களா இருங்க, பாஸ்.
- கௌதம்












Click it and Unblock the Notifications