மீட்கப்பட்ட டோர்னியர் விமானத்தின் கருப்பு பெட்டி... ஆய்வுக்கு கனடா அனுப்ப முடிவு
சென்னை : மாயமாகி விபத்துக்குள்ளான டோர்னியர் விமானத்தின் கருப்பு பெட்டியை ஆய்வுக்காக கனடா அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆபரேஷன் ஆம்லா என்ற பாதுகாப்பு ஒத்திகையின் போது கடந்த ஜூன் மாதம் 8-ந்தேதி கடலோர காவல்படைக்கு சொந்தமான டோர்னியர் ரக விமானம் கடலூருக்கு 27 கடல்மைல் தென்கிழக்கில், காரைக்காலுக்கு 32 கடல் மைல் வடகிழக்கில் பயணித்த போது திடீரென்று மாயமானது.

அந்த விமானத்தில் பயணம் செய்த விமானி வித்யாசாகர், துணை விமானி எம்.கே.சோனி, பார்வையாளர் சுபாஷ் சுரேஷ் ஆகிய 3 பேரும் மாயமானார்கள்.
இதையடுத்து, கடலோர காவல்படையும், இந்திய கப்பற்படை மற்றும் தமிழக கடலோர காவல்படையும் கடந்த மாதம் 9-ந்தேதி முதல் மாயமான விமானத்தையும், விமானிகளையும் தேடும் பணியை தொடர்ந்தன. இந்த நிலையில் கடலூர் அருகே உள்ள பிச்சாவரம் கடல் பகுதியில் விமானத்தின் பாகங்கள் மற்றும் கருப்பு பெட்டி கடந்த 11 ஆம் தேதி மீட்கப்பட்டது.
இந்த நிலையில், டோர்னியர் விமானத்தின் கருப்பு பெட்டியை ஆய்வுக்காக கனடாவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. கருப்பு பெட்டியின் ஒரு பகுதி சேதம் அடைந்துள்ளதால் அதை தயாரித்த கனடாவுக்கு அனுப்பப்படுகிறது.
கருப்பு பெட்டியின் ஆய்வு முடிவு வெளியான பிறகே விமானம் விபத்துக்குள்ளானது ஏன் என்ற தகவல் வெளியாகும் என எதிர்ப்பார்க்கபடுகிறது. கருப்பு பெட்டி தற்போது சென்னையில் உள்ள கடலோர காவல் படை அலுவலகத்தில் உள்ளது.












Click it and Unblock the Notifications